வெள்ளி, 10 ஜூன், 2011

இலவச கலர் டிவி திட்டம் ரத்து,மீதமுள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் டிவிகள் அனாதை இல்லங்களுக்கு அளிக்கப்படும்-ஜெ.

டிவி கிடைக்காத மக்கள் என்ன பாவம்செய்தார்கள் ? தான்தோன்றித்தனம்  சிறுமைத்தனம்  அடித்தட்டு மக்களை பற்றி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத மேட்டுக்குடித்தனம்  கலைஞரை பார்த்து இன்னுமா பயம்? ஏனிந்த  வஞ்சம்?

திமுகவை வெகுவிரைவில் கரைசேர்த்து விடுவதில்  கழகத்தொண்டர்களையும் மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறதே?  என்னதான் இருந்தாலும் கலைஞர் மீது உங்களுக்கு ஒரு இனம் புரியாத பாசம் இருப்பது புரிகிறது. இல்லாவிடில் இவ்வளவு விரைவில் தங்கள் சுயரூபத்தை காட்டுவீர்களா?

சென்னை: தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தற்போது அரசின் வசம் மீதமுள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் கலர் டிவி பெட்டிகளையும் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இந்தத் திட்டடத்தின் கீழ் அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 1 லட்சத்து 27 ஆயிரம் டிவி பெட்டிகள் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த அரசு முழுமையாக கைவிட்டு விடவில்லை. தரமான கல்வியைத் தருவதாக அந்தத் திட்டம் தற்போது இல்லை. எனவே அதை சீர்படுத்தி தரமான கல்வியுடன் கூடியதாக அதை அமல்படுத்தும் நோக்கில்தான் இந்த ஆண்டு அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்.

தலைமைச் செயலகத்தை கோட்டைக்கு மாற்றியதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நிர்வாக குளறுபடிகளைத் தவிர்க்கவே தலைமைச் செயலகத்தை கோட்டைக்கு மாற்றினோம்.

அதேசமயம், புதிய தலைமைச் செயலகம் உரிய முறையில் பயன்படுத்தப்படும் என்றார் ஜெயலலிதா.

மேலும், இனி நிலப்பட்டா மாற்றத்திற்காக மக்கள் தாசில்தார் அலுவலகங்களுக்குச் செல்லாமல் கிராம நிர்வாக அதிகாரிகளிடமே அதற்காக விண்ணப்பித்து நிலப்பட்டாக்களைப் பெறலாம் என்றும் முதல்வர் அறிவித்தார்.

மின்வெட்டு குறைக்கப்படும்:

முதல்வர் ஜெயலலிதா மேலும் கூறுகையில்,

அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டம் தீட்டப்படும். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.

தமிழகத்தில் (சென்னை தவிர) 3 மணி நேரமாக உள்ள மின்வெட்டு விரைவில் 2 மணி நேரமாக குறைக்கப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: