வியாழன், 9 ஜூன், 2011

கச்சத்தீவு வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்க சட்டசபையில்

சென்னை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறையையும் சேர்க்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையின் முழு விவரம்:

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.

டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: