ஞாயிறு, 5 ஜூன், 2011

அஜீத் விஜய் விக்ரம் சூர்யா படப்பிடிப்புகள் ரத்து... (புலிக்கு பயந்து சிங்கத்திடம் மாட்டிக் கொண்டோமோ)

கடந்த சில தினங்களாக திருவிழாவில் தொலைந்த குழந்தை போல தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. புலிக்கு பயந்து சிங்கத்திடம் மாட்டிக் கொண்டோமோ என்ற அச்சம் நிலவி வருகிறது திரைப்படக் கலைஞர்கள் மத்தியில்.

ஏன்? எதற்கு? வேறொன்றுமில்லை, ஸ்டிரைக்! திடீரென்று பூச்சாண்டி காட்டும் விதமாக படப்பிடிப்பை தன்னிச்சையாக ரத்து செய்கிற மூடில் இருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய சங்கங்களின் தலைமை டம்மியாகிக் கிடக்கிறது. கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் தமிழ்சினிமா இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது என்றெல்லாம் முணுமுணுப்பு எழுந்தது. எல்லா தியேட்டர்களும் ஆதிக்க சக்திகளின் கைக்குள் இருந்ததால் சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை இருந்தது.

சினிமாக்காரர்களே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பியதும் அதனால்தான். அதே நேரத்தில் சங்க தலைமைகள் உறுதியாக இருந்தன. ஒரு குறையென்றால் ஓடிப் போய் சொல்லவும், தலைமை போடுகிற கட்டளையை மீற முடியாத நிலைமையும் இருந்தன. ஆனால் இன்று? எதுவுமே சரியில்லையோ என்று அச்சம் கொள்கிற அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.

யார் சொல்வதையும் யாரும் மதிப்பது போல தெரியவில்லை. 24 சங்கங்களின் தலைமையான பெப்சி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் திமுக ஆதரவாளர் என்பதால் டம்மியாக அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறார் அந்த சீட்டில்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.ஏ.சி பேச்சை எவரும் கேட்பதாக இல்லை. இந்த நிலையில்தான் லைட்மேன்கள் அமைப்பு 40 சதவீத சம்பள உயர்வு கொடுத்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்வோம்.

இல்லையென்றால் கிளம்புகிறோம் என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். இந்த சம்பள உயர்வை வலியுறுத்தி தனித்தனி சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அவரவர் பங்குக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இயக்கிக் கொண்டிருக்கும் இந்தியா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிலிம் பாக்சையே து�க்கிக் கொண்டு ஓடிவிட்டார்களாம் தொழிலாளர்கள். சம்பள உயர்வை கொடுத்துவிட்டு பிலிமை வாங்கிக்கோ என்றார்களாம். அடித்து பிடித்துக் கொண்டு புகார் சொல்ல சங்கங்களுக்கு ஓடிவந்தால், அங்கே இவருடைய பிரச்சனையை காதில் வாங்கக் கூட ஆள் இல்லாமல் போனது.

நேற்று மட்டும் சுமார் 45 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அஜீத், விஜய், விக்ரம், சூர்யா படங்களும் இதில் அடக்கம். முந்தைய ஆட்சியில் ரிங் மாஸ்டர் போல எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக் கூடிய தலைமை இருந்தது.

இப்போது இல்லையே என்று வேதனைப்படுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, முந்தைய ஆட்சி போல சினிமா மீதே எந்நேரமும் கண் வைத்திருக்க விரும்பவில்லை புதிய அரசு. அதுகூட நியாயம்தான் என்றாலும், ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களித்தது சினிமாக்காரர்களும்தான்!

அந்த வகையிலாவது இதில் உடனடியாக தலையிட வேண்டும் முதல்வர் ஜெயலலிதா. அப்படி தலையிட்டால்தான் பெரிய அளவில் தொழில் முடக்கம் ஏற்படுவதை தடுக்க முடியும்

கருத்துகள் இல்லை: