வியாழன், 28 அக்டோபர், 2010

TNA வட மாகாணத்தின் அனுமதி கோரப்படும் வரையில் உள்ளுராட்சி சட்டங்களை அமுல்படுத்தக் கூடாது : த.தே.கூ

வட மாகாணசபையின் அனுமதி கோரப்படும் வரையில் உள்ளுராட்சி மன்ற சட்டங்களை அமுல்படுத்தக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு சட்டத் திருத்தங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்ட மூலம், உள்ளுராட்சி மன்ற விசேட சட்ட மூலம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளது. மாகாணசபைகளின் கருத்துக்களை அறிந்து கொள்ளாது எந்தவொரு உள்ளுராட்சி சட்ட மூலத்தையும் நிறைவேற்ற முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு தேவையான வகையில் இந்த சட்டத்தை திருத்தத்திற் கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைகளின் கருத்து கோரப்பட்டதன் பின்னர், பாராளுமன்றில் இந்த சட்டத் திருத்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் கிடையாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஏனைய மாகாணசபைகளினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சட்டத் திருத்தமொன்றை வெறுமனே பாராளுமன்றிலேயே நிறைவேற்றிக் கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாகாணசபைகளின் கருத்துக்கள் கோரப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: