- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
2010 ஆகஸ்ட் 27,28,29ம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் அறிக்கையின், ‘தேசிய வளர்ச்சிப் போக்குகள்’ என்ற பகுதியின் சில முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன.
2005 நவம்பரில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே, நடைமுறையிலிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விடுதலைப் புலிகள் புதிய பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
ஜெனீவா சமாதானப் பேச்சுக்கள் மூலம் புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பிரயோசனமற்றவை என்பது நிரூபணமாகியது.
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில பாதகமான அம்சங்கள் இருந்ததை உணர்ந்த போதிலும், இன்னொரு யுத்தம் ஏற்படும் வகையில் இவ்வொப்பந்தத்தை முறிக்கக்கூடாது என்பதே அதன் நிலைப்பாடாக இருந்தது.
அதேநேரத்தில் புலிகளின் சமாதானத்திற்கு இணங்காத, சண்டைப் போக்கு பற்றிய கடந்தகால அனுபவம் பற்றிய பூரண விளக்கத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் திடீh தாக்குதலில் ஈடுபட்டால் அதை முறியடிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாக இருந்தது.
புலிகள் தம்மை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என நிலைநாட்டிக் கொண்டு, தமது பயங்கரவாத செய்கைகள் மூலம், தமிழ் மக்களுக்கான ஜனநாயக இடைவெளியையும், அவர்கள் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைவதையும் எதிர்த்து வந்தனர். புலிகள் இந்தக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டு, புலிகளுக்கு சார்பில்லாத அரசியல் ஸ்தாபனங்கள் எல்லாவற்றுக்கும் எதிராக அடக்குமுறைகளைக் கையாண்டனர்.
இந்த அடக்குமுறைக் கொள்கையைக் கைவிடுமாறு, கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து புலிகளுக்கு வலியுறுத்தி வந்தது.
புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சில சரத்துகள், புலிகளுக்கு சார்பில்லாத ஸ்தாபனங்களின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருந்தன.
இந்தக் காலகட்டத்தில் தேசிய இனப் பிரச்சினை சில குறிப்பிட்ட அளவுகளில் சர்வதேச மயப்பட்டிருந்தது. பூகோள – அரசியல் யதார்த்தத்தின் முன்னே, எமது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
எமது கட்சியின் 18வது காங்கிரஸ், “ஏகாதிபத்தியத் தலையீடோ, உள்நாட்டு – வெளிநாட்டு சதி முயற்சிகளோ இடம் பெறாத வகையில் விழிப்பாக இருக்க வேண்டும்” என வலியுறுத்திக் கூறியிருந்தது.
மேலும் 18வது காங்கிரஸ், “இந்தப் பிரச்சினை தற்பொழுது சர்வதேச மயப்பட்டிருக்கும் அளவை நோக்குகையில், அது இறுதிக் கட்டத்தை அடைவதற்கு அனுமதித்தால், மீள முடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்படும்” எனவும் எச்சரித்திருந்தது.
நான்காவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டுக்குள், பாதுகாப்புப் படைகள் கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து முழுமையாக விடுதலை செய்தன. அங்கு சிவில் நிர்வாகம் மீளமைக்கப்பட்டது.
மன்னார், பூநகரி, ஆனையிறவு, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவற்றின் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து, 2009 மே 19ம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.
புலிகள் நிராகரிக்கப்பட்டு, வீழ்ச்சியடைந்து, இறுதியில் தோல்வியைத் தழுவியதற்குப் பங்களித்த பிரதான காரணி, அது ஒருபோதும் ஒரு தேசிய விடுதலை இயக்கமாக இல்லாமல் இருந்தது தான். அது சர்வதேச உதவியில் தங்கியிருந்த, முற்றுமுழுதான ஒரு பயங்கரவாத இயக்கமாகும். அது தனது, சமாதானத்துக்கு உடன்படாத, யுத்தப் போக்குக் காரணமாக புலிகளுக்குச் சார்பில்லாத அபை;புகளிடமிருந்து மட்டுமின்றி, இறுதியில் ஏகப் பெரும்பான்மையான தமிழ் மக்களிடமிருந்தும் தனிமைப்பட்டுப் போனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக