புதன், 27 அக்டோபர், 2010

இந்தோனீசியாவில் நிலநடுக்கம், சுனாமி, எரிமலைக் குமுறல்



வின் ஜாவா பகுதி மக்கள் ஏற்கனவே அங்குள்ள சக்திவாய்ந்த மெரப்பா எரிமலை எப்போது குமுறும், எத்தனை பேரின் உயிரை பறிக்கப் போகிறது என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். இந்த நேரத்தில் நில நடுக்கமும் குட்டி சுனாமியும் எரிமலையின் குமுறலும் அந்நாட்டு மக்களை மேலும் அச்சுறுத்தியுள்ளது.

இந்தோனீசியாவில் திங்கட் கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. 7.7 ரிக்டர் அளவுள்ள இந்த நில நடுக்கம் இந்தோனீசியாவின் கெப்பாலாவுவான் மென்டவை வட்டாரத்தில் கடலுக்கடியில் திங்கட்கிழமை இரவு 9.42 மணிக்கு ஏற்பட்டது. சுனாமி வரும் என்ற அச்சத்தால் மக்கள் உடைமைகளை விட்டு விட்டு உயிருக்கு அஞ்சி உயரமான பகுதிகளை நோக்கி ஓடினர்.

சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடங்களான சுமத்ரா தீவிலுள்ள பெங்குலு மற்றும் பாடாங்கின் தெற்குப் பகுதியை இந்த நிலநடுக்கம் மையமாகக் கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அப் பகுதியில் சிறிய அளவிலான மூன்று மீட்டர் உயரமுள்ள சுனாமி உருவானதாகக் கூறப் படுகிறது.

இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி மற்றும் எரிமலைக் குமுறலுக்கு 100க்கும் மேலானவர்கள் மாண்டதாகவும் 500 பேர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. காணாமல் போனவர்கள் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனரா அல்லது உயரமான நிலப் பகுதிகளில் பத்திரமாக உள்ளனரா என்பது இன்னமும் உறுதிப் படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை பேரிடர் மற்றும் சேத பராமரிப்பு முகைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மீட்டர் உயரமான ராட்சத அலைகள், மென்டவை தீவைச் சேர்ந்த பாகாய் மற்றும் சிலபு பகுதிகளில் நூற்றுக் கணக்கான வீடுகளை துடைத் தொழித்துவிட்டதாகக் கூறப் படுகிறது. இருப்பினும் முழுமையான சேதாரங்கள் பற்றிய விவரங்கள் இன்னமும் தெரியவில்லை. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் சுனாமிக்கு அஞ்சி வீடுகளை விட்டு வெளியேறி உயரமான மலைப் பகுதிகளை நாடிச் சென்றனர்.
2,000க்கும் மேற்பட்டோர், தற்காலிக மற்றும் அவசர உதவி முகாம்களுக்கு அடைக்கலம் நாடி சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் குழு ஒன்று பயணம் சென்ற படகைக் காண வில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அவர்கள் சென்ற படகு ராட்சத அலை ஒன்றால் தாக்கப்பட்டதால் இன்னொரு படகு மீது மோதி தீப்பற்றிக் கொண்டதாகக் கூறப் படுகிறது. இருந்தும் அப்படகில் பயணம் சென்ற அத்தனை பேரும் உயிருடன் உள்ளதாக பயண முகவர் நிறுவனம் ஒன்று கூறியுள் ளது.
இந்நிலையில், எரிமலை வெடிக்கும் அச்சத்தில் ஜாவா வைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் 19,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் மெரப்பி எரிமலை வெடித்துச் சிதறலாம் என்ற அச்சத்தால் அம் மலையைச் சுற்றி வாழும் ஆயிரக் கணக்கானோர் அவ்விடத் திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர்.
உலகில் உள்ள அனைத்து எரிமலைகளிலும் இந்த மெரப்பி எரிமலையே மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1930ம் ஆண்டு இந்த எரிமலைக் குமுறலுக்கு 1300 பேர் பலியா யினர். அடுத்து 1994ம் ஆண்டு நிகழ்ந்த எரிமலைக்குமுறலால் ஏற்பட்ட வெப்பக் காற்றுக்கு 60 பேர் பலியாயினர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக சக்தியை இந்த எரிமலை இப்போது கொண்டுள்ளதாக எரிமலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் 1930ம் ஆண்டு ஏற்படுத்தியது போன்ற சேதம் உண்டு பண்ணும் வகையில் இந்த முறை ஏற்படும் என்பதற்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று கூறப் படுகிறது. ஏபி

கருத்துகள் இல்லை: