மங்களூர் விமான நிலையத்தில் ஓடு பாதையின் தொடக்கத்தில் தரை இறக்காமல் சற்றுத் தள்ளி இறங்கியதால் விபத்து நேரிட்டதாக விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு வந்த ஏயார் இந்தியா விமானம் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பு ஆகும். அது கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி முதல் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. மங்களூர் விமான நிலைய ஓடுபாதையின் நீளம் 2.450 மீட்டர். ஓடு பாதையின் முடிவில் உள்ள பாதுகாப்பு பகுதி 90 மீட்டர் நீளம் கொண்டது.
இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் வி. பி. அகர்வால் புதுடில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது மலை உச்சியில் அமைந்துள்ள மங்களூர் விமான நிலையத்தில் தினமும் 32 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இறக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள ஓடுபாதைகளில் எந்தக் குறைபாடும் இல்லை. அவற்றை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்த பிறகே போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் நல்ல முறையில் இருந்தது. அதன் தரை இறங்கும் என்ஜின்கள் சிறப்பாக இயங்கி வந்தன. அதன் விமானிகள் விமானம் மங்களூரை அடைவதற்கு 10 கி.மீ. இருக்கும் போதே விமானத்தின் வருகை பற்றி விமான கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவித்தனர். விமான நிலையத்துக்கு 4 கி.மீ. தொலைவில் விமானம் வந்தபோது அது தரை இறங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது காற்று எதுவும் வீசவில்லை. மழையும் பெய்யவில்லை. 6 கி.மீ. தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வெளிச்சம் இருந்தது. விமானம் தரை இறங்க இந்த வெளிச்சம் போதுமானது. அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. விமானிகளும் பிரச்சினை எதுவும் இருப்பதாக அபயக்குரல் கொடுக்கவில்லை.
ஆனால் விமானத்தின் சக்கரம் ஓடுபாதையின் தொடக்க முனையில் கால் பதிக்காமல் சற்றுத் தள்ளி கால் பதித்ததால் ஓடுபாதையை தாண்டியும் விமானம் ஓடி பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இவ்வாறு வி. பி. அகர்வால் கூறினார்.
விமானியின் தவறா?
ஆனால் மங்களூர் விமான நிலைய இயக்குநர் பீட்டர் ஆபிரகாம் கூறியதாவது பொதுவாக ஓடுபாதையின் எல்லைக்கு சற்று முன்பே விமானம் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த விமானம் எல்லையைத் தாண்டி ஓடியுள்ளது. அதன் உதிரிப்பாகங்கள் சிதறியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும் போது விமானி தனது கணிப்பில் தவறு செய்திருக்கலாம் அல்லது விமானத்தின் பிரேக்கில் கோளாறு இருந்திருக்கலாம். இது பற்றி விசாரணைக்குப் பிறகே தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய விமானங்களை இயக்குவதில் கூடுதல் வெளிநாட்டு விமானிகள் அதிர்ச்சித் தகவல் வார்த்தைகள் புரியாததால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அவலம்
மங்களூரில் விபத்துக்குள்ளான எயார் இந்திய விமானத்தை ஓட்டி வந்தது செர்பிய நாட்டைச் சேர்ந்த விமானி என்பது தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு விமானிகள் இந்திய வான்வெளியில் ஓட்டும் போது இந்திய விமான போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சில வார்த்தைகள் அவர்களுக்கு புரிவதில்லை. என்பது பலகாலமாக பேசப்பட்டு வரும் ஒரு அதிர்ச்சித் தகவலாகும்.
இந்தியாவில் விமானங்களை ஓட்டுவதற்கு பொருத்தமில்லாத சுமார் 560 பைலட்டுகள் (விமான ஓட்டிகள்) பல்வேறு இந்திய விமான நிறுவனங்களில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 5.500 பயணிகள் விமான பைலட்டுகளின் எண்ணிக்கையில் இது 10 சதவீதமாகும்.ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளிக்கும் நிறுவனமாகும். இதில் சுமார் 125 வெளிநாட்டு விமானிகள், இந்தியாவில் விமானம் ஓட்டுவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 250 வெளி நாட்டு விமானிகள் எயார் இந்தியாவில் பணிபுரிவதாக தெரிய வந்துள்ளது.
பெயர் சொல்ல விரும்பாத ஓய்வு பெற்ற விமானி ஒருவர் “இந்த பொருத்தமில்லாத விமான பைலட்டுகளை நீக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் இந்தியாவில் பணிபுரியும் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். முக்கியமாக தகவல் தொடர்பில் பல பிரச்சினைகள் இவர்களுக்கு ஏற்படுகின்றன என்று தெரிவித்தார்.
இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது வெளிநாட்டு பைலட்டுகளை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இங்கு போதுமான பயிற்சி பெற்ற பைலட்டுகள் இருப்பதாகவும் அவர்களை பணியில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் பல தடவை இத்தகைய வெளிநாட்டு விமானிகளை நீக்க அரசை வலியுறுத்தியும் விமான நிறுவனங்களின் நெருக்கடியால் அரசு அந்த நடவடிக்கையை எடுப்பதில்லை. இங்குள்ள விமானிகளை பணியில் சேர்ப்பதையும் தாமதப்படுத்துகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக