சனி, 29 மே, 2010

தமிழ்த் திரைப்பட இயக்குனர் விசேட காவற்துறை பிரிவினரால் கைது

Director Chandran Rutnamநுகேகொட பாகொட வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் டெட்டநேட்டகர்கள், வெடி மருந்துகள் உள்ளிட்ட குண்டு வெடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனர் விசேட காவற்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

அனுமதிப் பத்திரமின்றி 4.95 கிலோ கிராம் வெடி மருந்து, 7 டெட்டநேட்டர்கள் மற்றும் உபகரணங்களை தன்வசம் வைத்திருந்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தமிழரான திரைப்பட இயக்குனர் அரிச்சந்திரன் குமார்ரட்ணம் நேற்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திஸ்ஸ விஜேரத்ன உத்தரவிட்டார். விசேட அதிரடிப்படையில் குண்டு செயலிழக்கும் பிரிவின் ஊடாக கைப்பற்றப்பட்ட டெட்டநேட்டர்களை செயலிழக்க செய்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

வெடிப் பொருட்களை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரம் தன்னிடம் இருப்பதாக சந்தேக நபர் கூறிய போதிலும் அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. இதனால் விசாரணைகளை நிறைவுசெய்ய முடியவில்லை எனவும் இதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க வேண்டாம் எனவும் காவற்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நுகேகொட பாகொட வீதியில் அமைந்துள்ள 6வது ஒழுங்கையில் ரோஷி அபேவிக்ரம என்பவரது வீட்டை சோதனையிட்டதாகவும் வீட்டின் மேல் மாடியில் இருந்த வெடிப் பொருட்கள் பெட்டியொன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். போர் தொடர்பான அலிமங்கட, அக்னியன் போன்ற படங்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வெடிப் பொருட்களை தான் வைத்திருந்தாக குமார் ரட்ணம் தெரிவித்தாகவும் எனினும் அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப் பத்திரத்தை இதுவரை காவற்துறையில் சமர்பிக்கவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குமார் ரட்ணம் சிங்கள திரைப்படங்களை இயக்கி வரும் தமிழராவர், அவர் பல முக்கிய சிங்களப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை: