சனி, 29 மே, 2010

முஸ்லிம்களை வெளியேற்ற 24 மணி நேரம் கொடுத்தார்கள்ஆனால் எமக்கு கால் மணி நேரம்கூட்

ஆதிவாசிகளை விட மிகவும் மோசமான நிலையில் மீள்குடியமர்த்தப்படும் வன்னி மக்கள் காணப்படுகின்றார்கள்.              அவலத்திலும் அவலமாக உள்ளது.               உடன் பிறப்புக்கள் என்போர்,              வீர வசனம் பேசுவோர் அமைப்புக்களாக இணைந்து விரைந்து சென்று உதவவேண்டும்’ இவ்வாறு வன்னி சென்று திரும்பிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகநேயன் பொ. பியசேன அங்குள்ள நிலைவரம் பற்றித் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், மக்களை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் 10 தகடுகளையும் 06 கம்புகளையும் வழங்கி அனுப்புகிறார்கள். அவர்கள் இவற்றை வைத்துக் கொண்டு எவ்வாறு கூடாரம் அமைப்பது. கத்தி, மண்வெட்டி போன்ற ஏனைய உபகரணங்களுக்கு எங்கே போவார்கள்?   பலருக்கு ஆளுதவிகூட இல்லை.    வட கிழக்கிலிருந்து இளைஞர் அமைப்புகள் அங்கு சென்று சிரமதானம் செய்வதனூடாக அம்மக்களுக்கு உதவ    முடியும்.
எமது பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து அங்கு சென்று அரச அதிபரூடாக பேசி பல உதவிகளைச் செய்ய வேண்டும்.   உடன் பிறப்புகள் என்றும், இரத்தம் என்றும் உணர்ச்சியுடன் வீர வசனம் பேசுவோர் இத்தருணத்தில் அவற்றைச் செயலில் காட்ட வேண்டும்.     புதிதாக மீள்குடியேற்றப்படும் சில குடும்பங்களில் தொழில் செய்யக்கூடிய இளைஞர்களோ, ஆண்களோ இல்லை.
அங்கு ஆலயங்கள், பாடசாலைகள், குடிமனைகள் இருந்த தடயங்களே இல்லாத அளவுக்கு சம்ஹாரம் இடம்பெற்றுள்ளது.  மக்கள் எந்த அடிப்படை வசதியுமில்லாமல் மீள்குடியேற்றப்படுகின்ற இச்சூழலில் நாம் அங்கு சென்று உதவ வேண்டும். அங்குள்ள பழைய கிணறுகளை மீண்டும் தோண்ட வேண்டாம் எனக் கூறியுள்ளேன்.                   முடியுமானவர்கள் குழாய்க் கிணற்றையா வது அமைத்துக் கொடுக்க ன்வர வேண் டும்.
அங்கு மக்கள் படும் துன்பங்கள் வார்த்தைகளால் வருணிக்க முடியாது.   குழந்தைகள் படும்பாடு சொல்லுந்தரமன்று.     மழைக்கு ஏற்ற புகலிடம் இல்லை. காலுக்கு பாதணிகள்கூட இல்லை.  பாடசாலைகளில் தளபாட வசதி குறைவு.  ஆசிரியர்கள் தொகை பற்றாக்குறையாகவுள்ளது. பிள்ளைகளுக்கு எழுதுவதற்கு பென்சில் கொப்பிகளும் இல்லாதுள்ளன.
அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் அவர்கள் கூறும் வேதனைக் கதைகள் நெஞ்சைப் பிழிகிறது.            யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம்களை வெளியேற்ற 24 மணி நேரம் கொடுத்தார்கள்.                  ஆனால் எமக்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுசெல்ல கால் மணி நேரம்கூட வழங்கவில்லை என்று கூறும்   மக்கள்   நாம் கனவிலும் இப்படி நடக்கு மென்று எதிர்பார்க்கவில்லை என்றார்கள்.
இப்படி பல கதைகள்.     எனவே வட கிழக்கிலுள்ள பொது நல அமைப்புகள்,         அரசசார்பற்ற அமைப்புகள் விரைந்து செயற்பட வேண்டும்.  அவர்களது பகுதிகளுக்குச் சென்று முதலில் சிரமதானத்தை மேற்கொண்டு குடில் அமைக்க உதவ வேண்டும்.       அதேவேளை வேறு அத்தியாவசிய பொருட்களையும் வழங்க முடியும்.
மனிதாபிமானம் என்பது இதுதான்.     அதனை விடுத்து அறிக்கையை மட்டும் விட்டு விட்டு இருப்பது பொருத்தமாகாது.
அம்பாறையிலிருந்து என்னுடன் கை கோர்க்கும் பொதுநல அமைப்புகள் உடனடியாக தொடர்பு கொண்டால் அங்கு செல்ல சகலதையும் செய்வேன் என்றார்.
வவுனியாவிலுள்ள வலயம் 4 முகாம் அகதிகளின்          உள்ளக் குறல்களை பற்றிக் கூறியபோது அவர்,                 அங்கு 3,000 பேரளவில் இருக்கின்றனர்.    அங்கு காட்டு எலியின் தாக்கம்    தினம் தினம் அதிகத்து வருகின்றது.   அவை எம்மை தருணம் பார்த்து கடித்து விடுகின்றன. நுளம்பு வலையைக்கூட விட்டு வைப்பதில்லை.
04 நாள் பாவனைக்காக 10 லீற்றர் தண்ணீர் தருவார்கள்.      பழுதடைந்த குழாய்க் கிணறுகள் மூன்று உள்ளன.      அதிலிருந்து பெறும் நீரை ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  அங்கு சீனி, மா, அரிசி வழங்குகிறார்கள்.   ஆனால், ஏனைய உப்பு, மிளகாய் போன்ற சுவையூட்டிகளை கொள்வனவு செய்ய பணமில்லை.   குழந்தைகள் ஐஸ்பழம் கேட்டால் அதனை வாங்கிக் கொடுக்கவும் பணமில்லை.
மாறாக அடித்து கட்டுப்படுத்தி வைக்கிறார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை: