சாதிவாரி கணக்கெடுப்பது தொடர்பாக முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை நிறுத்தி வைத்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு விஷயத்தில் எழுப்பப்படும் சட்டக் கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக நாடு முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், லாலு பிரசாத், முலாயம் சிங் போன்ற தலைவர்களும் மத்திய அரசை கோரி வருகின்றனர்.
இதையடுத்து இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மாற்று எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிகிறது.
ஆனால், இதற்கு ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் போன்ற அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இப்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பின்னர், மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்காக நடத்தப்படும் சென்சஸ் பணியின்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாகத் தெரிகிறது.
இக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை ஒத்தி வைத்துள்ளது.
மேலும் இவ்விவகாரத்தை பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சரைக் குழுவை அமைத்து விவாதிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாரிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவும் இதை ஆதரிக்கிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் கடுமையாக எதிர்ப்பதால் தனது முடிவை பாஜக மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டில் கடைசியாக சாதிவாரி சென்சஸ் 1931ம் ஆண்டில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக