வியாழன், 27 மே, 2010

அதிர்ச்சி கல்லூரிகளில்அனுமதி மறுப்பு அதிக மதிப்பெண் பெற்றபோதும்

இலங்கைத் தமிழ் அகதிகளின் பிள்ளைகள் தமிழகத்தில் ஆரம்ப கல்வி தொடக்கம் உயர் வகுப்பு வரை படித்து, அதிகளவு மதிப்பெண்ணைப் பெற்றபோதிலும் உயர்கல்வியைத் தொடரும் பொருட்டு அரச ஒதுக்கீட்டிலுள்ள இடங்களை தெரிவுசெய்வதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.      இது தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள்    மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 1996ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக இங்கிருந்தும் இடம்பெயர்ந்து இந்தியா சென்றடைந்த இலங்கைத் தமிழ் அகதியான தேவசந்திரலிங்கம் என்பவரின் மகனான பகீர் ஆரம்பம் முதல் +2 வரை சென்னை  திருவான்மியூரில் உள்ள பாடசாலை ஒன்றில் படித்து +2    பொதுத்தேர்வில் தோற்றி 1200க்கு    1,116 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில்,    பொறியியல் துறையில் கல்வி கற்பதற்கு அவருக்கு வாய்ப்புள்ளபோதிலும் இலங்கைத் தமிழ் அகதிகள் பொறியியல் கவுன்சிலில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் இம்மாணவர் முன்னணி பொறியியல் கல்லூரியில் சேரமுடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த 2002ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்கு மருத்துவத்துறையில் 20 இடங்களும் பொறியியல் துறையில் 40 இடங்களும் ஒதுக்கப்பட்டன.     ஆனால், தற்போது இட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள குறித்த மாணவனின் பெற்றோர், தாங்கள் தொழில்நுட்ப கல்லூரி இயக்குநர் அலுவலகத்தில் சென்று கேட்டபோது,     தனியார் கல்லூரிகளை நாடுமாறு அங்கு கூறப்படுவதுடன் அவ்வாறு தனியார் கல்லூரிகளை நாட பெருமளவு பணம் தேவைப் படுமெனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கைத் தமிழ் அகதிகளின் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வியைத் தொடர அனுமதி அளிக்கும் அதேவேளை, கூடிய மதிப்பெண்களைப் பெறும் சந்தர்ப்பங்களில்,  அரச ஒதுக்கீட்டு இடங்களில் உயர் கல்வியைத் தொடர அனுமதி மறுக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இவ்விடயத்தில் தலையிட்டு சிறந்த பெறுபேறுகளைப் பெறும் இலங்கைத் தமிழ் அகதிகளின் பிள்ளைகள் உயர் கல்வியைப் பெற வாய்ப்பளிக்க வேண்டுமெனவும்   தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் கோருகின்றனர்.  இலங்கையில் யுத்தம் நிலவிய கடந்த 3 தசாப்த காலங்களில் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளவும் நிம்மதியாக வாழவும் என பெரும் எண்ணிக்கையான வடக்கு  கிழக்குப்  பகுதித் தமிழர்கள் தம்வசம் உள்ள அனைத்தையும்    கைவிட்டு,     தென்னிந்தியா நோக்கிப் படையெடுத்தனர்.
இவ்வாறு படகுகளின் மூலம் சட்டவிரோதமாகப் பயணிப்பது மிகவும் ஆபத்தானதும்,    அதேவேளை,        உயிருக்கு எந்தவித உத்தரவாதம் இல்லை என்றபோதிலும் தங்கள் குழந்தைகளின்     எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருதி பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் பலர் மண்டபம் அகதி முகாமிலும் ஏனையோர் முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்துவருகின்றனர்.  பலர் கடந்த 2 தசாப்த காலத்துக்கும் அதிகமாக தமிழகத்திலேயே வாழ்ந்துவருவதும் பலருக்கு குழந்தைகள் தமிழகத்திலேயே பிறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். சுமார் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழகத்தில் வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோதும் தமிழகத்திலேயே வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பலர் தொடர்ந்தும் அங்கு வாழ்ந்துவருகின்றனர்.      தமிழக அரசும் இலங்கை அகதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளதுடன், தமிழக அமைச்சர்களும் நேரடியாக முகாம்களுக்கு விஜயம் செய்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தமக்கு நிம்மதியாக வாழும் சூழல் கிட்டுவதுடன், தமது குழந்தைகள் அங்கேயே உயர்கல்வியைக் கற்றுத்தேற வாய்ப்புக்கிட்டும் என்ற உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் காணப்படுகின்றனர். இருந்தபோதிலும் அவ்வப்போது எழும் சந்தேகங்களின் பேரில் தமிழ் அகதிகள் துருவித்துருவி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் இவ்வாறு கூடிய மதிப்பெண்களைப் பெற்றபோதிலும், அரச கல்லூரிகளில் இடஒதுக்கீடுகளின் போது,      இலங்கைத் தமிழ் அகதிகள் என்ற ஒரே காரணத்துக்காக அவை மறுக்கப்படுவதும் அவர்கள் மத்தியில் மிகுந்த கவலையைத் தோற்றுவித்துள்ளது.
உண்மையில், இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால் அதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாகக் காட்டியிருக்க முடியும் எனக் கூறும் இலங்கைத் தமிழர்கள்,    இந்தளவு தூரம் துன்பங்களை அனுபவித்த பின்னரும் இலங்கைத் தமிழர்களை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அவர்கள் கல்வித்துறையில் முன்னேற குறைந்தபட்சம் ஒத்துழைப்பையேனும் வழங்காதிருப்பதும் மிகவும் கவலையளிப்பதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக தமிழ் மக்களின் கல்வி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டதுடன், அவர்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர்.         வடக்கு  கிழக்குப் பகுதியைப் பொறுத்தமட்டில், படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் காணப்படும் சூழ்நிலையே இன்று தோன்றியுள்ளது.        இவ்வாறான நிலைமையும் சூழலும்  தமிழக அரசுக்கோ அன்றேல்               இந்திய மத்திய அரசுக்கோ தெரிந்திருக்க மாட்டாது என்று கூறவோ அன்றேல் எதிர்பார்க்கவோ ஒருபோதும் முடியாது.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள சூழலில் குறைந்தபட்சம்  தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கேனும் நல்ல தோர் கல்விச் சூழலை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சீராக முன்னெடுத்துச் செல்ல வழிவகுப்பதாக இருக்கும்.
உலகத் தமிழரை விழிப்படையச் செய்யு முகமாகவும் தமிழ் மொழியை உலகறியச் செய்யும் வகையிலும் கோவையில் செம்மொழி மாநாட்டை ஒழுங்குசெய்து அதனை வெற்றிகரமாக நடத்த பல்வேறு முனைப்புக்களில் ஈடுபட்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இலங்கை தமிழ் அகதி மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பாரேயானால் அது மிகவும் வரவேற்கத் தக்கதாக அமையும்.
யுத்தம் காரணமாக இலங்கைத் தமிழ் மாணவர்கள் பலர் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கிய நிலையிலேயே தமது கல்வியைத் தொடர்ந்துவருவது    ஒன்றும் இரகசிய மல்ல.                 இவ்வாறான சூழ்நிலையில் ஏலவே அகதிகளாகி தமிழகத்திலும்           இதர நாடுகளிலும் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் கற்று முன்னேறவேண்டும் என்ற பற்றுறுதியுடன் கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் இலங்கை அகதி மாணவர்களுக்கு உதவவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் தார்மிகக் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கருத்துகள் இல்லை: