கேரள அரசின் காதி போர்டு கதர் விற்பனை விளம்பர தூதராக உள்ள நடிகர் மோகன்லால் மதுவிளம்பரத்தில் நடித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் காந்தீயவாதிகள்.
அண்மையில்தான் காதி போர்டு வாரிய தூதராக நியமிக்கப்பட்டார் மோகன்லால். கதர் துணிகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் அவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது கதர் வாரியம்.
இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கெனவே மது விளம்பரங்களில் தோன்றியுள்ள மோகன்லாலை, மகாத்மா காந்தியின் உயர்ந்த கொள்கைகளில் ஒன்றான கதர் விற்பனை தொடர்பான பொறுப்பில் நியமிப்பதை கேரளாவைச் சேர்ந்த காந்தியவாதிகள் பலர் கடுமையாக எதிர்த்தனர்.
அரசியல் கட்சிகளும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் கேரள அரசு எதையும் கண்டுகொள்ளாமல், காதி போர்டு விளம்பர தூதராக நியமித்தது. இதனால் மோகன்லால் இடம் பெற்ற கதர் துணி விற்பனை விளம்பரங்கள் கேரளாவில் பல இடங்களில் தலைகாட்ட துவங்கியது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதற்கிடையே மோகன்லால் தனியார் மது கம்பெனி ஒன்றின் விளம்பரத்தில் நடித்த காட்சிகளும் கேரளாவில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
அதிரடி நீக்கம்!
இதைப் பார்த்த காந்தியவாதிகள் மட்டுமல்லாமல் காதி போர்டு அதிகாரிகளும் கூட அதிர்ந்துவிட்டனர்.
கதர் துணி விற்பனை விளம்பரத்தில் நடிப்பவர் எப்படி மது விற்பனை விளம்பரத்தில் நடிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து மோகன்லாலுக்கு எதிராக கண்டனங்களும், அவரை நீக்க கோரி புகார் மனுக்களும் குவிந்தன.
இதைத்தொடர்ந்து மோகன்லால் கதர் விற்பனை விளம்பரத் தூதர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் நடித்து வெளியான விளம்பரக் காட்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மோகன்லாலுக்கு பதிலாக தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் யாரேனும் ஒருவரை விளம்பர தூதராக நியமிக்க கதர் போர்டு முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக