இது தொடர்பாக இன்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செக்கர்ஸ் ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பின்போது, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கூறியதாவது:
2010ல் வெளியான எந்தப்படமும் லாபம் கொடுக்கவில்லை. தமிழ்ப்படம், அங்காடித்தெரு ஆகிய படங்களால் மட்டுமே லாபம் கிடைத்தது. பையா படம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடிவிட்டது.
விஜய் ரசிகர்களை மட்டுமல்ல, எங்களையும் ஏமாற்றி வருகிறார். தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன.
5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6வது படம் விஜய் நடிக்கும் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம்.
240 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்து தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் மொத்தம் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை எந்த நடிகரும் தராத அளவுக்கு தோல்விப் படங்கள் மற்றும் நஷ்டத்தை அவர் தந்துள்ளார்.
நஷ்டத்தை ஈடு செய்த ரஜினி:
இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதை உணர்ந்து ரஜினி, டி.ராஜேந்தர் ஆகியோர் பணம் கொடுத்து நஷ்டத்தை ஈடு செய்துள்ளார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் 35 சதவீத நஷ்டஈடு தந்து எங்களைக் காப்பாற்றினார். பாபா படத்துக்கு யாரும் கேட்காமலே நஷ்டஈடு தந்தார். ஒரே தொழிலில் இருப்போர் ஒருவருக்கொருவர் தோள்கொடுக்கும் மனப்பான்மை இது.
அது போல் விஜய்யும் எங்களுக்கு நஷ்டஈடு தருவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் அப்படி தரவில்லையென்றால் வரும் ஜூன் மாதம் மூன்றாவது வாரம் எங்கள் சங்கம் கூடும். அப்போது, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம். அது மிகக் கடுமையானதாக இருக்கும்.
விஜய் இனியாவது நல்ல கதைகளில் நடிக்க வேண்டும். தொடர்ந்து ஒரே மாதிரி படங்களில் நடிக்கிறார். இதை நாங்கள் குறிப்பிடக் காரணம் இருக்கிறது. முன்பெல்லாம் படத்தை வாங்குவதற்கு முன் எங்களுக்கு பிரீமியர் ஷோ காட்டுவார்கள். அதிலேயே நாங்கள் படத்தை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்துவிடுவோம். ரஜினி் படத்துக்கே பிரீமியர் காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் இன்றைக்கு டிவியில் காட்டப்படும் கிளிப்பிங்குகள், பத்திரிகை- இணைய தளச் செய்திகள், வெளிநாடுகளுக்குத் தரும் பாடல் உள்ளிட்ட முன்னோட்டக் காட்சிகளை வைத்து ஒரு படத்தை வாங்குகிறோம்.
அதனால்தான் தரமில்லாத பல படங்களை வாங்கி நஷ்டமடைகிறோம். எனவே இனிமேல், எக்ஸிபிட்டர்களுக்கு கண்டிப்பாக புதுப்படங்களை பிரீமியர் ஷோ போட்டுக் காட்ட வேண்டும் என்றனர்.
இந்தக் கூட்டம் நேற்று முன்தினமே நடக்கவிருந்தது. ஆனால், அப்போது விஜய் தரப்பில் சமரசம் பேச முயற்சித்ததால் தள்ளிப் போடப்பட்டது. இடையில் சமரசப் பேச்சு தோல்வியடைந்ததால், தங்கள் முடிவை இன்று பிரஸ் மீட் வைத்து அறிவித்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
ஜூன் 3வது வாரத்துக்குள் விஜய் தரப்பில் நஷ்டஈடு தராவிட்டால் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளவிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வினியோகஸ்தர்கள் சங்கமும் விஜய் தரப்புக்கு இதுபோன்றதொரு நெருக்கடியைத் தந்துள்ளது நினைவிருக்கலாம்.
முன்னணி நடிகர் ஒருவரின் 6 படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியதாக பிரஸ் மீட் வைத்து தியேட்டர்காரர்கள் அறிவித்திருப்பது இதுவே முதல்முறை.
பதிவு செய்தது: 28 May 2010 5:06 pm
சன் டிவி யா நம்பினால் இப்படி தான் நாடாகும் இனி மேல் ஆச்சு கடவிள் உனக்கு நல புதி வந்த சேரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக