சனி, 29 மே, 2010

ஐஃபா விழாவில் பங்கேற்கும் நடிகர்-நடிகைகள் விவரம்

கொழும்பில் வரும் ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கும் ஐஃபா விழாவில் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைஃப், லாரா தத்தா, ப்ரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஐஃபா இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ஐஃபாவின் புதிய தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வட இலங்கையின் நடக்கும் அபிவிருத்திப் பணிகளில் ஐஃபா அறக்கட்டளையுடன் இணைந்து அவர் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஷாரூக்கான் பங்கேற்று நடனம் ஆடுகிறார். நடிகைகள் தீபிகா படுகோன், மல்லிகா ஷெராவத், 3 இடியட்ஸ் படக்குழு, சாயிஃப் அலிகான், ஜான் ஆப்ரகாம் போன்ற கலைஞர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

ஐஃபா விழாவில் பங்கேற்கும் இந்திய நடிகர்களின் எந்தப் படமும் இனி தென்னிந்தியாவில் வெளியாகாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திப் படங்களுக்கு பெங்களூர், மைசூர், சென்னை, ஐதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்கள் முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷாரூக்கானுக்கு சென்னையில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சன் என அமிதாப் குடும்பத்துக் கலைஞர்கள் மட்டுமே தமிழ் அமைப்புகள் வேண்டுகோளை மதித்து ஐஃபா விழாவில் பங்கேற்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் பிற மொழிக் கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், நாகார்ஜூன், புனித் ராஜ்குமார் போன்றவர்கள் ஏற்கெனவே இந்த விழாவைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். தங்களின் நிலையை சம்பந்தப்பட்ட திரைப்பட சங்கங்களுக்கும் தெரிவித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதா ரவி நேற்று கூறினார்.

திரையுலக அமைப்புகளின் இந்த அறிவிப்பையும் தாண்டி பாலிவுட் பிரபரலங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்பார்களா... அப்படி பங்கேற்றால் கண்டிப்பாக தடை அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: