சென்னை: சமரசமாகப் போகலாம் என்று விஜய்யும் அவரது தந்தையும் கேட்டுக் கொண்டதால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இன்று நடத்தவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆதி படத்தில் தொடங்கி சுறா வரை 6 படங்கள் விஜய்க்கு பெரும் தோல்வியையும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையும் தந்துள்ளன. குறிப்பாக சுறா பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த, விஜய்யிடம் 40 சதவிகித நஷ்டஈடு கேட்க முடிவு செய்திருந்தனர் திரையரங்க உரிமையாளர்கள். விநியோகஸ்தர்களும் தங்கள் பங்குக்கு நஷ்ட ஈடு கேட்டு வந்தனர்.
இந்த நஷ்டஈட்டைத் தராவிட்டால் விஜய்க்கு ரெட் கார்டு போடலாம் என்று அவர்கள் முடிவு செய்து, அதனை பத்திரிகையாளர்களிடம் கூற பிரஸ் மீட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதுபற்றிய செய்திகள் வெளியாக பரபரப்பான சூழல் நிலவியது. விஷயம் அறிந்ததும் உடனடியாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்ட எஸ் ஏ சந்திரசேகரன், "அவசரப்பட வேண்டாம். உட்கார்ந்து பேசி தீர்த்துக்குவோம். நீங்க இந்த அளவு போக வேண்டிய அவசியமே இல்லை. பிரஸ் மீட்டை கேன்சல் பண்ணுங்க," என்றாராம்.
இன்றே பேச்சு நடத்த வருமாறு விஜய் தரப்பு அழைக்க, உடனடியாக ஒப்புக் கொண்டனர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர்.
இன்று மாலை 3 மணிக்குப் பிறகு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எஸ்ஏ சந்திரசேகருக்கும் பேச்சு நடக்கிறது. இந்த பேச்சின் முடிவை நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
சீமான் படத்தில் விஜய்!
இதற்கிடையே, சீமான் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்துடன் சேர்த்து, இன்றைய தேதிக்கு விஜய் கைவசம் நான்கு படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக