ஞாயிறு, 23 மே, 2010

எதுவுமே செய்யாது ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அரசியலமைப்புத் திருத்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது. இவ்விடயத்துக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துச் செயற்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசி யத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இச்சந்தர்ப்பத்தைச் சாதகமான முறையில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இனப்பிரச்சினையின் தீர்வையே பிரதான இலக்காகக் கொண்டிருப்பதாக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இச்சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த முயற்சிப்பதாகத் தெரியவில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றுவதற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதிலுள்ள ஆர்வம் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பான ஆலோசனைகளைத் தெரிவிப்பதில் காணப்படவில்லை.
அரசிலமைப்புத் திருத்தத்துக்கான ஆலோசனைகள் தயாரிக்கப்படுகின்ற இந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அதன் ஆலோசனைகளை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துப் பேச்சுவார்த்தைக்கான ஒரு சந்தர்ப்பத்தைக் கேட்பது ஆக்கபூர்வமான அணுகுமுறையாக இருக்கும். இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து பார்க்கையில் மிகவும் அவசியமானது.
அரசாங்கம் அதன் ஆலோசனைகளை வெளியிட்டபின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது தமிழ்த் தலைமையின் மனோபாவமாக இருந்து வருகின்றது. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசுவோம் எனக் கூறுவதும் இந்த மனோபாவத்தின் வெளிப்பாடுதான். அரசாங்கம் ஆலோசனைகளை வெளியிடாது விட்டால் அல்லது தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் இனப்பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே செய்யாது என்பதே இந்த மனோபாவத்தின் அர்த்தம்.
எங்களுக்கு எது தேவையோ அதை அடைவதற்கான முன் முயற்சியை நாங்கள் தான் எடுத்தாக வேண்டும். இலங்கையின் மிகப்பழைமை வாய்ந்த பிரச்சினையாக இனப் பிரச்சினையே உள்ளது. தமிழ்த் தலைவர்களால் அறுபது வருடங்களுக்கு மேலாக இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியவில்லை. சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன் படுத்தத் தவறியதும் பிழையான அணுகுமுறைகளைப் பின்பற்றியதுமே இதற்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் மீண்டும் அது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது சாத்தியமாகாமற் பேகலாம். எனவே கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவதிலேயே அரசியல் சாணக்கியம் தங்கியுள்ளது.அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ள இத்தருணத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கான சில விடயங்களையேனும் அத்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு முயற்சி செய்வது தமிழ்த் தலைமைக்குள்ள கடப்பாடு.
அந்த முயற்சி வெற்றியளிக்கலாம். வெற்றியளிக்காமலும் போகலாம். ஆனால் முயற்சி செய்யாதிருக்கக் கூடாது. முழுமையான அரசியல் தீர்வை ஒரே தடவையில் அடையக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு தலைவர்கள் செயற்பட வேண்டும்

கருத்துகள் இல்லை: