ஞாயிறு, 21 மே, 2017

பாலு மகேந்திரா ஒரு படிப்பினை ,,,ஒருத்தி! இன்னொருத்தி! வேறொருத்தி!


அந்த நண்பரின் பெயர் முருகேஷ்.  ‘நல்லதோர் வீணை ஜனனம் இன்று..’ என இயக்குநர் பாலுமகேந்திரா குறித்து கவிதை எழுதி நமக்கு அனுப்பியிருந்தார். பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா பிறந்தது மே 20,1939 என்று குறிப்பிட்டிருந்த அவர்,  ‘பாலு மகேந்திரா குறித்து எழுதுங்களேன்..‘ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ‘நல்லதும் கெட்டதும் கலந்தது அவரது வாழ்க்கை. எதை எழுதுவது?’ என்று கேட்டோம். “இரண்டையுமே எழுதுங்கள்.  தொழில் ரீதியாக சினிமாக்காரர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. சினிமாவில் பலருக்கும்அவர் ஒரு ஆசான். தனிப்பட்ட வாழ்க்கையிலோ?” என்று பெருமூச்சு விட்டவர், “அதையும் எழுதுங்கள். அவரைப் போன்ற பலருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும்.” என்றார்.
விடலைச் சிறுவர்களின் காதல் உணர்வு!"
;முதலில் ஒளிப்பதிவாளராக, கேமராவின் மூலம் கவிதைகள் படைத்து வந்த பாலு மகேந்திரா, 1977-இல் ரிலீஸான கோகிலா என்ற கன்னடப் படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய திரைப்பட விருதினைப் பெற்றார். தமிழில் அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த முள்ளும் மலரும் 1977-இல் வெளிவந்தது. தமிழில் அவரது&இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் அழியாத கோலங்கள். 1978-இல் வெளியானது. விடலைப் பையன்களின் காதல் உணர்வுகளையும், அவர்களது சேட்டைகளையும் வைத்து உருவான படம் அழியாத கோலங்கள். இந்தப் படம் தன்னுடைய பதின்ம பருவத்தின் பிரதிபலிப்பு என்கிறார் பாலு மகேந்திரா.

;நான் கத்தினால் மழை பெய்யும்!

;அவர் பாணியிலேயே, அவரது இளம்பிராயத்திலிருந்தே தொடங்குவோம்.  இலங்கையில் மட்டக்களப்பு அருகில் உள்ள அமிர்தகழி என்ற கிராமத்தில் பிறந்தவர் பாலு மகேந்திரா. அன்று நடந்ததை அவரே விவரிக்கிறார்.   “அப்போது ஆறாம் வகுப்பு மாணவன் நான்.  சுற்றுலா சென்றோம்.  கண்டியில் முகாமிட்டிருந்தோம்.  அங்கு ஆங்கிலப் பட ஷூட்டிங் நடந்து ;கொண்டிருந்தது. மூன்று கால்களைக் கொண்ட ஒரு தினுசான ஸ்டாண்டில் ஏதோ ஒன்று கறுப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே நின்று கொண்டிருந்த வெள்ளைக்காரர் மூடியிருந்த கறுப்புத் துணியை நீக்க, உள்ளே நான் அதுவரை பார்த்திராத ஒரு கருவி. அதுதான்  “மோஷன் பிக்சர் கேமரா” என்று ஃபாதர் லோரியோ தெரியப்படுத்தினார். எனது உடம்பு பூராவும் ஜிவ்வென்று ஏதோ ஒரு உணர்வு. அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கை குறுகுறுத்தது.

;எனது ஆசையைச் சொன்னேன். அனுமதி கிடைத்தது. அந்தப் பெரிய கேமராவை நான் தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். தொட்ட மாத்திரத்தில் என் உடல் பூராவும் ஒரு முறை உதறிப் போடுகிறது.  எங்கள் வீட்டு வாழைத் தோட்டத்தின் மறைவில், என் பிரியப்பட்ட பால்ய சினேகிதி அன்னலட்சுமியைத் தொட்ட போது,  என் உடம்பில் ஏற்பட்ட அதே உதறல் – அதே புல்லரிப்பு. >கேமரா அருகே நின்றுகொண்டிருந்த டேவிட் என்ற வெள்ளைக்காரர் மிக உரத்த சத்தத்தில் "RAIN'  என்று கத்துகிறார்.  அந்தக் காட்டுக் கத்தல் என்னைத் திடுக்கிட வைக்கிறது. அவர் "RAIN' என்று கத்தியதும், மழை கொட்டுகிறது. பெரிய மழை..ஆச்சரியத்தில் நான் உறைந்து போகிறேன். "RAIN' என்று கத்தியதுமே மழை பெய்கிறதென்றால், இந்த டேவிட் என்ற மனிதரிடம் ஏதோ கடவுள்தன்மை இருக்க வேண்டும்..!

ஆறாம் கிளாஸ் படிக்கும்போது கண்டியில் பார்த்த அந்தப் படப்பிடிப்பை, அந்த மழைக்காட்சியைப் பத்தாம் கிளாஸ் படிக்கும்போது எங்களூர் தியேட்டருக்கு வந்த BRIDGE ON THE RIVER KWAI  என்ற ஆங்கிலப் படத்தில் பார்த்தபோது எனக்குள்ளே ஒரு எண்ணம் வலுத்தது. பெரியவனானதும் நான் சினிமா டைரக்டர் ஆவேன். “RAIN” என்று நான் கத்தினால் மழை பெய்யும்.” என, தனக்குள் சினிமா என்ற விதை விதைக்கப்பட்டதைச் சொல்கிறார்.
முதன் முதலில் கேமராவைத் தொடும் போது ஏற்பட்ட உணர்வை,  அந்த வயதுப் பாலியல் தேடலோடு ஒப்பிட்டுச் சொல்கிறாரே பாலு மகேந்திரா! ஆம். யதார்த்ததுக்கு நெருக்கமாக தன்னுடைய படைப்புக்களைத் தந்த அவரின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். “நான் ஒரு சாமான்யன். இன்னும் சொல்லப் போனால் நான் சேறு நிறைந்த சாக்கடை.” என்று அவரே சொல்கிறார்.

;சொந்த வாழ்க்கையை நாறடிக்கும் நுண்ணுணர்வு!
;பல மேடைகளில் பாலு மகேந்திரா இப்படிச் சொல்லியிருக்கிறார் – “ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை&உன்னதப்படுத்துகின்றதோ, அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வையும் நாறடித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடு இது!
”பாலு மகேந்திராவும் எதிர்வினைகள் நிறையவே புரிந்திருக்கிறார்.  ‘தனக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்துட்டு திருப்தியா செத்திருக்கார்..’ என்று அவரது  சிஷ்யர்கள் சொன்னாலும்,   ‘தன்னைவிட மிகவும் வயது குறைந்த, ஆண்&>துணையற்ற, இளம் பெண்களைத் தனது பாலியல் வக்கிரங்களுக்குப்  பலியாக்கி விட்டு, அதற்கு, காதல், தேவதை, துணைவி, அது, இது என்று நியாயம் கற்பித்தார்.’ என,  சமுக வலைத்தளங்களில் பாலு மகேந்திராவுக்கு எதிரான விமர்ஷனங்கள் இன்றளவும் கடுமையாக இருக்கின்றன.
 ‘வெளியே தெரியாதது எத்தனையோ? பகிரங்கமாகவே அவரால்  மூன்று பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். ஒருவர் அகிலா. அவரது மனைவி. மற்றொருவர் நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டவர். இன்னொருவர் நடிகை மவுனிகா.’ என்று சிம்பிளாகப் பட்டியலிடுகின்றனர்.

நல்ல வேளை! ராமாயணம் தப்பித்தது!
“ராமாயண காவியத்தைப் படமெடுக்க விரும்புகிறேன் என்று சொன்னார் பாலு மகேந்திரா. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலியுறுத்துவதே ராமாயணம்.  நல்ல வேளை அவர் எடுக்கவில்லை. கற்பு நிலை என்று வந்தால் அதை, இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்றான் பாரதி. மனைவி இருக்கும் போதே பாலு மகேந்திராவுக்கு இன்னொருத்தி தேவைப்பட்டிருக்கிறது. மேலும் ஒருத்தி வலையில் சிக்கியிருக்கிறார்.” என்று  வலைத்தளங்களில் விளாசுகின்றனர். பாலுமகேந்திராவோ,   தன்னுடைய தகாத செயலுக்கு எத்தனை ‘அழகாக’ நியாயம் கற்பிக்கிறார் பாருங்களேன்! ">அகிலாவை மறந்தேன்! அந்தந்த நொடிகளில் வாழ்ந்தேன்! >“சினிமாவையும், இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத் தோடும் சம்பந்தப்பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை.

உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் | பரிசுத்தவதிகள் | புராணகாலத்தில்தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல.

கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனைவியைத்தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத, மனசால்கூட நினைக்காத ஒரு நல்ல ஆண்மகனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அகிலா. என்னை மாதிரி ஒரு கோணங்கிக்கு வாழ்க்கைப் பட்டது அவள் விதி. இந்தப் பத்தினிக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும்போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது!” என்று புலம்பும் பாலு மகேந்திரா “ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான்;

மௌனிகாவுடனான உறவை ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்கவேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை.” என்று வெகு சாதாரணமாகச் சொல்கிறார்.

மௌனிக்கும் எனக்குமான உறவு!
மௌனிகா குறித்து பாலுமகேந்திரா, “மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை;அதுவல்ல! ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு காரணம் மௌனியின் பேரன்புதான். 'நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!' என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது?
தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்துகொண்டவளை எப்படி உதறுவது? என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். இந்த செவ்வாய்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக் கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும்.

இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்து விட்டாள்.  இப்போது மௌனிக்கு 35 வயது.  அவளை எப்படி நான் தூக்கிப் போடுவது?

என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற மௌனிகாவை சினிமா வட்டாரத்தில், 'பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு' என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 1998-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன். மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள்.
' நான் பாலு மகேந்திராவின் மனைவிதான்... ஆனால் திருமதி பாலுமகேந்திரா அல்ல!! என்னை திருமதி பாலுமகேந்திரா என்று  அழைக்காதீர்கள் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டவர் மௌனிகா.” என்கிறார். ;">ஷோபா வைத்திருந்த வெறித்தனமான காதல்!

;சரி.. தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்ட நடிகை ஷோபா விஷயத்துக்கு வருவோம்!
  பாலு மகேந்திரா சொல்கிறார் “தேவலோகவாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒரு தடவைதான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்து போன ஒரு தேவதைதான் ஷோபா. குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனதோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்தவள். அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டு,  பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போனது. அந்த தேவதையின் வரவையும், மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும், அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்குச் சொல்லியிருந்தேன் ‘மூன்றாம் பிறை’ படத்தின் மூலமாக.

ஷோபாவின் தற்கொலையில் என்னைச் சம்பந்தப்படுத்திப் பேசுபவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஷோபா என்னைவிட வயசுல ரொம்ப சின்னவ. கிட்டத்தட்ட என் மக வயசு. அவளுக்கு என்கிட்ட ஒரு வெறித்தனமான காதல் இருந்தது. பல முறை நான் அதைக் கண்டித்திருக்கிறேன். அதில் நான் வெற்றியடைந்து விடலாம் என்று நம்பினேன். அப்போதுதான், அப்படி ஒரு துர் சம்பவம் நடந்துவிட்டது. உயிரற்ற அவள் உடல் முன் நான் நின்ற போது அடைந்த நடுக்கம், இன்னமும் அப்படியே கிடக்கிறது. ஒரு கலைஞனான என்னால் என்ன பண்ண முடியும்?

ஷோபாதான் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி. இப்போது எல்லாமுமே புரிந்திருக்கும்.” என்கிறார்.

ஷோபா சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் விவரிக்கப்படுகிறது. உதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். நடுநாயகமாக வீற்றிருக்கிறார் பாலு மகேந்திரா. சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை. “உள்ளே வரலாமா?” அனுமதி கோரல் இல்லை.

உள்ளே நுழைந்த ஷோபா எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திரா மடியில் சென்று அமர்ந்து விடுகிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.

பாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ.” என கெஞ்சுகிறார். ஷோபாவோ எதையும் பொருட்படுத்தாமல், பாலுமகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அதட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை? எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப்  போட்டு உட்கார். இல்லைன்னா என் மடியை விட்டு எந்திரி.” என்கிறார். ஷோபா கண்டுகொள்ளவே இல்லை. தர்ம சங்கடத்தில் விடைபெறாமல் சென்று விடுகிறார் சுஜாதா.
;இது ‘அங்கிள்’ உறவே அல்ல!
இது குறித்து சுஜாதாவே சொல்கிறார் “அந்தச் சமயத்தில் ஷோபாவை சந்திக்க நேர்ந்தது. சட்டென்று அறைக்குள் நுழைந்து பாலுவின் கழுத்தை ‘அங்கிள்’ என்று கட்டிக் கொண்டார். என்னுடன் வந்திருந்த என் மனைவி வீட்டுக்கு வந்ததும், ‘இது அங்கிள் உறவு இல்லை’ என்றாள். சில தினங்கள் கழித்து குமுதம் இதழில் இருவரும் மணந்து கொண்ட செய்தி வருகிறது. அடுத்த ஆண்டிலேயே ஷோபாவின் தற்கொலைச் செய்தி. அந்த இளம் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று வியந்திருக்கிறேன். அது பற்றி பாலு சொன்ன தகவல்கள் அந்தரங்கமானவை. அவருடனான நட்பின் மரியாதை;கருதி அவற்றை நான் எழுதவில்லை.” என்கிறார்.

;ஷோபா மட்டுமல்ல! தாயும் தற்கொலை!
என் மகள் ஷோபா’ என்ற தலைப்பில் பத்திரிக்கை ஒன்றில் அவரது அம்மா எழுதி வந்தார். பின்னர், அவரும் தற்கொலை செய்து கொண்டார். மூன்று வருடங்கள் கழித்து,  ஷோபா தற்கொலை பின்னணியை விவரிக்கும் விதமாக, ‘லேகாவுடைய மரணம்! ஒரு ப்ளாஷ்பேக்!’ என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு சினிமாவே வந்தது.

 பாலுமகேந்திரா இப்படியும் உருக்கம் காட்டுகிறார். “என் அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன். என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்!” என்கிறார்.

சிறுமி மீதான அன்பில் சிதைந்த வாழ்க்கை!

;தன்னை உணர்ந்தோ என்னவோ, தன் மீதான விமர்சனங்களாலோ என்னவோ,தன்னுடைய படைப்புக்களை பிற்காலத்தில் யாரும்  குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்றோ என்னவோ,  ஒரு இடத்தில் இப்படிச் சொல்கிறார் பாலு மகேந்திரா - “நல்ல கவிதை என்பது ஒரு காகிதத்தில் எழுதப்பட்டாலும், டாய்லெட் டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்டாலும், அது நல்ல கவிதைதான். எதில் அது எழுதப்பட்டு உள்ளது என்பது முக்கியம் அல்ல.” என்கிறார்.  திரைத்துறையினர் கொண்டாடும்,  பல விருதுகள் பெற்ற பாலு மகேந்திராவை வலைத்தளத்தில்  பெடோபைல் (pedophile) என்கிறார்கள் வெளிப்படையாக.  காரணம் – 15 வயது சிறுமியாக இருந்த போதுதான், பாலு மகேந்திராவின் கோகிலாவில் நடித்தார் ஷோபா. இறந்த போது அவருக்கு வயது 17. ஷோபாவுடன் தனி வீடு பிடித்து வாழ்ந்திருக்கிறார் பாலுமகேந்திரா. கொடுமைதான். வேறென்ன சொல்வது?  நிழலை விரட்ட முடியுமா? இறந்தாலும் கூட, இந்த பூமியில்  அவரவர் விட்டுச் சென்றவை, விடாது விரட்டுகின்றன!d;">சி.என்.இராமகிருஷ்ணன்   நக்கீரன்

கருத்துகள் இல்லை: