புதன், 21 ஜூலை, 2021

தமிழ்நாட்டில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

ுரளிதரன் காசிவிஸ்வநாதன்  -     பிபிசி தமிழ் : தமிழ்நாட்டில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் துவக்கத்தில் ஆக்சிஜன் தேவை 230 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் தினசரி புதிய கொரோநா நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 36 ஆயிரமாக உயர்ந்தது. இதனால், தினசரி தேவை 550 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. ஆனால், அப்போது அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கிடைக்காத நிலை இருந்ததால் வட மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனைப் பெற்றோம். ஒருபோதும் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் சுத்தமாக இல்லாத நிலை ஏற்படவில்லை" என தெரிவித்தார்.

கடந்த மே 4ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 13 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாயின. அது குறித்து கேட்டபோது, "செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் யாரும் உயிரிழக்கவில்லை. திரவ ஆக்சிஜன் தீர்ந்துபோனபோது, உடனடியாக சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. அங்கே வெவ்வேறு காரணங்களால் நோயாளிகள் உயிரிழந்திருப்பார்கள்" என்று மா. சுப்பிரமணியன் கூறினார்.
 

செங்கல்பட்டில் நடந்த மரணங்கள் குறித்து பிபிசியிடம் பேசிய தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், "குறிப்பிட்ட தினத்தில் செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் அழுத்தம் குறைந்தது உண்மைதான். ஆனால், திரவ ஆக்சிஜன் தவிர வேறு ஆக்சிஜனே இல்லை என நினைக்கக்கூடாது. சிலிண்டர்கள் இருந்தன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பு நேரிட்டது என்றால், ஆக்சிஜன் பெற்றுக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரும் இறந்திருப்பார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை. மருத்துவமனைகளில் இரவில் இறப்பு நேரிடும்போது, ஆக்சிஜன் இல்லாததால் இறப்பு ஏற்பட்டதோ என்று நினைப்பார்கள். ஆனால், இம்மாதிரி ஏற்படும் மரணங்கள் ஒவ்வொன்றையும் ஆராய வேண்டும். அதற்காக மருத்துவக் கல்வி இயக்குனர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதில் அப்படி ஏதும் மரணங்கள் நிகழவில்லையென்று தெரிந்தது" என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் மே, ஜூன் மாதங்கள் மிகச் சவாலான மாதங்களாக இருந்தபோதும் பல்வேறு இடங்களில் இருந்து ஆக்சிஜன் வாங்கி சமாளிக்கப்பட்டது என்று தெரிவித்த ஜெ. ராதாகிருஷ்ணன், பல இடங்களில் ஆக்சிஜன் டேங்க்களில் நிரப்பப்பட்டிருந்த திரவ ஆக்சிஜன் குறைந்தபோது, உடனடியாக சிலிண்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது என்றார்.

கோவிட் மரணங்களைப் பொருத்தவரை ஐ.சி.எம்.ஆர். எப்படிக் கூறியதோ, அதன்படியே மரணங்கள் பதிவுசெய்யப்பட்டன; ஆனால், சற்று சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இறந்தால் அந்த மருத்துவமனை மட்டத்திலும் மாநில மட்டத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன என்கிறார் ராதாகிருஷ்ணன். செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் மரணங்கள் நடந்ததாக செய்திகள் வெளியானாலும் விசாரணையில் அது உண்மையல்ல எனத் தெரியவந்ததாக அவர் கூறினார்.

அரசு மருத்துவமனைகள் மட்டுமல்ல, தனியார் மருத்துவமனைகளிலும்கூட ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்படவேயில்லை என்றும் அவர் கூறினார்.

மே 4ஆம் தேதி செங்கல்பட்டு மருத்துவமனையில் நடந்தது என்ன?
சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளில் 13 பேர் மே 4ஆம் தேதி இரவு ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் உயிரிழந்ததாக அடுத்த நாள் காலையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
மாநிலத்தில் வெகு வேகமாக கொரோனா தொற்று பரவிவந்த நிலையில், இந்தச் செய்தி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1,343 படுக்கைகளுடன் செயல்படும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 425 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியைப் பெற்றிருந்தது.
காணொளிக் குறிப்பு,

ஆக்சிஜன் தட்டுப்பாடு: யோகி ஆதித்யநாத் அரசு உண்மையை மறைக்கிறதா? உ.பியில் என்ன நடக்கிறது?

இந்த நிலையில், மே 4ஆம் தேதி இரவில் அட்மின் ப்ளாக் எனப்படும் கட்டடத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 176 பேரில் 13 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

ஆனால், அங்கு 13 பேர் உயிரிழந்தது உண்மைதான் என்றாலும் இந்த மரணங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படவில்லை என அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர் ஜே. முத்துக்குமரன் மறுத்தார். "செங்கல்பட்டு மருத்துவமனையில் 20,000 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள ஆக்ஸிஜன் கொள்கலன் இருக்கிறது. அதில் தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் லிட்டர் வரையில் திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்படும். இதில் தினமும் 2.9 ஆயிரம் கிலோ லிட்டர் அளவுக்கு பயன்பாடு இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், தேவை என்பது 3 ஆயிரம் லிட்டரிலிருந்து 5 ஆயிரம் லிட்டராக உயர்ந்தது. இந்தத் தேவைக்கேற்படி ஆக்ஸிஜனை நிரப்பிவந்தோம்," என்றார்.

"ஆனால், மே 4ஆம் தேதி இரவு ஆக்ஸிஜன் அழுத்தத்தில் சிறிய குறைவு ஏற்பட்டது. உடனடியாக 180 டி - டைப் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது மேலும் எங்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் ஐநாக்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு 7.5 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு, நிரப்பப்பட்டது. இதனால் இரவு ஒரு மணிக்குள் அழுத்தக் குறைவு சரியானது. ஆனால், இந்தக் அழுத்தக்குறைவால் யாரும் உயிரிழக்கவில்லை," என பிபிசியிடம் தெரிவித்தார் டாக்டர் முத்துக்குமரன்.

உயிரிழந்த 13 பேரில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்றும் மீதமுள்ள 12 பேர் வைரல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இவர்கள் கொரோனா நோயாளிகளாக இருந்தால், இவர்களது உடல் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது. ஆனால், 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி என்ற பெண்மணியின் உடலும் சந்திரசேகர போஸ் என்ற வட இந்தியரின் உடலும் மட்டுமே மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார் டீன்.

"இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களே தவிர ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்தவர்கள் அல்ல. உயிரிழப்பு நடந்தது உண்மை. ஆக்ஸிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட அழுத்தக் குறைவும் உண்மை. ஆனால், இரண்டிற்கும் தொடர்பு இல்லை" என்றும் அந்த மருத்துவமனையின் டீன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: