வெள்ளி, 23 ஜூலை, 2021

கர்நாடக முதல்வர் எடியூரப்பா .25-ம் தேதி பதவி விலகுகிறார்! அடுத்த முதலமைச்சர் யார்?

  Rayar A  -   Oneindia Tamil  :   பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் மாநில முதல்வர் எடியூரப்பாவின் பதவியும் இன்னும் சில நாட்களில் கிட்டத்தட்ட நிறைவு பெறும் என்றே தெரிகிறது.
 எடியூரப்பா பதவி விலகக்கோரி உள்கட்சியினரே அதுவும் சீனியர் எம்.எல்.ஏ.க்கள்,அமைச்சர்களே தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தனக்கு வயதாகி விட்டதால் மகன் விஜயேந்திராவை ஆட்சி நிர்வாகத்தில் அதிகம் தலையீடு செய்ய வைத்தார் எடியூரப்பா.
இதுவே அவரது பதவிக்கு ஆபத்து வரும் செயலாகவும் மாறி விட்டது. எடியூரப்பாவுக்கு எதிராக டெல்லி பாஜக தலைமையிடம் வரிசையாக புகார்கள் அனுப்பினார்கள்.
டெல்லி சென்ற முதல்வர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரிடம் விவகாரத்தை எடுத்து கூறினார்.



அப்போதே உடல்நிலை காரணமாக தான் பதவி விலகி கொள்வதாக மோடியிடம் எடியூரப்பா பேசியதாக தகவல் பரவின. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்தார் எடியூரப்பா.

பாஜக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் வருகிற 26-ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியும், பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடக்கிறது. இதற்கு ஒருநாள் முன்னதாக அதாவது 25-ம் தேதி தனது அலுவலர்களுக்கு எடியூரப்பா விருந்து கொடுக்க போகிறார் என்று தகவல் பரவியதால் அவர் பதவி விலகப்போவது உறுதியாகி விட்டது என தகவல்கள் கசிந்தன.

இப்படி பல்வேறு யூகங்கள் பறந்து வரும் நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:- வருகிற 26-ம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார். அப்போது ஜே.பி.நட்டா என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்ப செயல்பட உள்ளேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வேறொருவருக்கு வழிவிடும் வகையில் ராஜினாமா செய்வேன் என்று கூறியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவது எனது கடமையாகும். கட்சி தொண்டர்களை ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ராஜினாமா தொடர்பாக கட்சி தலைமை இதுவரை என்னிடம் எதுவும் கூறவில்லை.

தலைமை சொல்லும் வரை நான் முதலமைச்சராக இருப்பேன். தலைமை வேண்டாம் என்று கூறும்போது - மாநிலத்துக்காக வேலை செய்வேன். கடைசி நிமிடம் வரை மக்களுக்காக எனது கடமையைச் செய்வேன். 25 ஆம் தேதி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார். எடியூரப்பாவின் இந்த பேச்சு கிட்டத்தட்ட அவர் பதவி விலகுவார் என்ற நிலையிலே இருக்கிறது. கர்நாடக அரசியலில் திருப்பம் ஏற்படுமா? என்பது 25-ம் தேதி தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை: