கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் `ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
சொந்தமாக ஹெலிகாப்டர் மற்றும் இறங்கு தளம், பா.ஜ.க பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு என தங்களை பிரமாண்டமாக அடையாளப்படுத்தி கொள்வதில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கில்லாடிகளாக இருந்துள்ளனர். சில வருடங்களாக அவர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாக திருப்பி தரப்படும் என அறிவித்து செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து வந்துள்ளனர்.
இதற்காக தனியாக ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்கும் பெரும் தொகை கமிஷனாக தந்துள்ளனர். இதனால் பலரும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக பெரும் முதலாளிகள் கோடி கணக்கில் முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா பரவியதிலிருந்தே முதலீடு செய்தவர்களுக்கு பணம் சரியாக கொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
மேலும் இந்த வருடமும் கொரோனா பரவியதையடுத்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி வசூல் செய்தவர்களிடம் பணம் முறையாக தரவில்லை என புகார் எழுந்தது. எல்லோரும் தாங்கள் பணம் கொடுத்த ஏஜென்டுகளை நெருக்க தொடங்கினர். பத்துக்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டிற்கு படையெடுக்க தொடங்கினர்.
அவர்களிடம் கொரோனா பரவல் காரணத்தால் வெளிநாடு செல்ல முடியவில்லை, பணமும் முடங்கிவிட்டது. பணம் கொடுத்தவர்களுக்கு விரைவில் பணம் திருப்பி தரப்படும் என கூறி வந்தனர். இந்நிலையில் துபாய் நாட்டில் விளம்பர நிறுவனம் நடத்தி வருவதாக சொல்லப்படும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஜபருல்லா – பைரோஜ் பானு தம்பதி தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் கடந்த வாரம் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் “எம்.ஆர். கணேஷ் -எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்கள் தங்களிடம் தங்க நகை வியாபாரம் செய்தால் ஆறு மாதத்தில் ஒன்றுக்கு இரட்டிப்பு அல்லது மூன்று மடங்கு லாபம் பெறலாம் என கூறியதை தொடர்ந்து வங்கி கணக்கின் மூலமாகவும், நேரடியாகவும் அவர்களிடத்தில் ரூ. 15 கோடி வரை பணம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சொன்னது போல் தரவில்லை.
தற்போது பணத்தை திருப்பி கேட்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதுடன், எங்களுக்கு கட்சியில் செல்வாக்கு இருக்கிறது என கட்சி கொடி கட்டிய காரில் அடியாட்களை அனுப்பி அச்சுறுத்துவதை போல் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே நாங்கள் அவர்களிடம் கொடுத்த பணத்தை மீட்டுத்தாருங்கள்” என அதில் குறிப்பிட்டிருந்தது பரபரப்புக்குள்ளாகியது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், `ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களை பிரமாண்டமாக காட்டிக்கொண்டு கும்பகோணம் பகுதியில் உள்ளவர்களிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நிதி வசூல் செய்து வந்தனர். ஆரம்பத்தில் நாணயமாக நடந்து கொண்டதால் பலரும் அவர்களிடம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். ரூ 1 லட்சம் செலுத்தினால் கூடுதலாக ரூ. 82,000 வரை தந்ததாக சொல்லப்பட்டது. செலுத்தும் தொகைக்கு ஏற்ப அவர்கள் கொடுக்கும் லாபமும் அதிகரிக்கும்.
இதனால் பெரும் முதலாளிகள், வர்த்தகர்கள் என பலரும் கோடி கணக்கில் முதலீடு செய்யத் தொடங்கினர். யாரும் எப்படி இவ்வளவு பணம் தர முடியும் என்ற கேள்வியை கேட்காமல் லாபம் கிடைத்தால் போதும் என எண்ணி அவங்ககிட்ட பணத்தை கொட்டியுள்ளனர். கடந்த ஆறு மாதமாகவே யாருக்கும் அவர்கள் சரியாக பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் அவர்கள் குறித்த பேச்சுக்கள் வெளியே பரவத் தொடங்கின.
யார்கிட்டேயும் நேர்ல பணம் வாங்காமல் ஏஜென்டுகள் மூலமாகவே பணம் வசூல் செய்திருந்ததால் பலரும் ஏஜென்டுகளை பணம் கேட்டு நெருக்கினர். `பணம் வந்து விடும் விரைவில் கொடுத்துடுவோம்’ என கூறி சால்சாப்பு செய்து வந்தனர். இந்நிலையில் தான் இஸ்லாமிய தம்பதியான ஜபருல்லா-பைரோஜ் பானு என்பவர்கள் முதல் முறையாக நேரடியாக போலீஸில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது இன்னும் பல புகார்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் நேரடியாக இதுவரை புகார் தரவில்லை. தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள் முக்கிய வி.ஐப்பிக்களே அவங்ககிட்ட பணம் செலுத்தியிருந்ததால் புகாராக தருவதற்கு யாரும் முன்வரவில்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்களிடமிருந்து பணம் வரவில்லை என்றால் புகார் தருவதை தவிர வேறு வழியுமில்லை என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பைரோஜ்பானு கொடுத்த புகாரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறை வாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களுடைய வீட்டில் தனியார் செக்யூரிட்டிகள் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது. சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருப்பதாக கூறி வந்தனர். ஆனால் சில மாதங்களாகவே ஹெலிகாப்டர் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.
அவர்களிடம் ஒவ்வொருவரும் பல கோடிகள் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் வசூல் செய்திருக்கும் தொகை ரூ 1,000 கோடி இருக்கும் என சொல்லப்பட்டு வந்தது. பணம் செலுத்தியவர்கள் நம் பணம் திருப்பி கிடைக்குமா என்ற அச்சம் தற்போது பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கும்பகோணம் முழுவதும் ரூ. 600 கோடி மோசடி செய்துள்ளதாக மெகா போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என குறிப்பிடாமல் பாதிக்கப்பட்டவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பொதுவாக குறிப்பிட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என போலீஸ் தரப்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக