வியாழன், 22 ஜூலை, 2021

திண்டுக்கல்லில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கில கலெக்டரின் கல்லறையைத் தேடும் அதிகாரிகள்!

திண்டுக்கல்லில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையைத் தேடும் அதிகாரிகள்!

மின்னம்பலம் :உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையைத் திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்தவர் ஒயிட் என்னிஸ். இவர் 1810ஆம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதுகுறித்து ஆராய மதுரை உயர் நீதிமன்றக் கிளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.


இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் கல்லறையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள காமராஜ் நகரில் கல்லறை தோட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

புதர்மண்டி கிடந்த அந்தப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் ஆங்கிலேயே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆகியோரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், ஒயிட் என்னிஸ் கல்லறை கிடைக்கவில்லை. பின்னர் வேறு ஏதேனும் பகுதியில் அவரது கல்லறை உள்ளதா என்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லறை இருந்ததே தெரியாமல் அப்பகுதி மக்கள் வசித்து வந்தநிலையில் தற்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

கருத்துகள் இல்லை: