பாண்டியன் சுந்தரம் : பேருந்தில், காரில் செல்லும் போது காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி அல்லது கார்களின் ஸ்பீக்கர் மூலம் வீட்டில் இருக்கும் போதும் ஸ்பீக்கரில் இசையை, இனிய பாடல்களை விரும்பிக் கேட்பவரா நீங்கள்?
நமக்குப் பாடலையும், அதன் இசையையும் கேட்பதில் ஒரு மாபெரும் மாற்றத்தைத் துல்லியத்தை கொண்டு வந்தவரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? அவரும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் தான்!
உலகம் முழுக்க உள்ள இசை ரசிகர்களது ஒலியின் ரசனையை மாற்றியமைத்தவர் அமர் கோபால் போஸ்.
அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், தமது இறுதி மூச்சு வரை அயராது உழைத்த உழைப்பினால் சிகரத்தைத் தொட்டவர்.
அவரது "போஸ் ஸ்பீக்கர்" என்னும் நிறுவனத்திற்கு, தனது சொந்த முயற்சி மற்றும் புதுமையான படைப்புகள் வழி தனி இடத்தை உருவாக்கித் தந்தவர்!
அலைபேசி உலகில் ஆப்பிளும், ஸ்டீவ் ஜாப்ஸும் எவ்வளவு பிரசித்தமோ, அதே அளவுக்கு அமர் போஸும் எலெக்ட்ரானிக் உலகில் பிரவேசித்து புகழ் பெற்றவர்!
“போஸ் ஆடியோ சிஸ்டம்” கண்டுபிடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த அமர் போஸ் 'ஃபோர்ப்ஸ்’ பில்லியனர்கள் பட்டியலில் தவறாமல் இடம் பிடித்தவர். தாம் இறப்பதற்கு சிலஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை எம்.ஐ.டி நிறுவனத்துக்கு எழுதி வைத்தார்! எல்லோரும் அதுபற்றி புகழ்ந்தபோது அவர் சொன்னார்… ‘‘எனக்கு மற்றொரு வீடு தேவையில்லை. என்னிடம் ஒரு கார் இருக்கிறது… அது போதும். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சின்னச்சின்ன ஐடியாக்களைப் பற்றி சிந்தித்தபடி இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது!’’
அமர் போஸின் தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான நோனி கோபால் போஸ், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்; நேதாஜியின் இயக்கத்தில் இணைந்து போராடியவர். புரட்சியாளரான இவரை பிரிட்டிஷ் அரசு வேட்டையாடத் துடித்தது. அப்போது, இவர் தலைமறைவாக ஆனார்.வெள்ளையரை எதிர்த்துப் போராடியதன் காரணமாக தேடப்பட்டு வந்த அவர் 1920-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.
அங்கு ஒரு பள்ளி ஆசிரியையை விரும்பி திருமணம் செய்தார். 1929, நவம்பர் 2-ஆம் தேதி பிலடெல்பியாவில் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் அமர் போஸ். அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்தாலும், தன் மனதால் மரணம் வரை இந்தியராகவே இருந்தவர் போஸ்.
இந்தியாவிலிருந்து தேங்காய் நார் தரை விரிப்புகளை இறக்குமதி செய்து விற்றுக் கொண்டிருந்த அவரது பிழைப்பில் மண் அள்ளிப் போட்டது இரண்டாம் உலகப் போர். வர்த்தகக் கப்பல்களுக்கு தடை விதிக்கப்படவே வியாபாரம் தடைபட்டது.
அப்போது அமர் போஸ்13 வயது சிறுவன். வீட்டிலேயே ரேடியோ ரிப்பேர் பிசினஸ் செய்தார் அமர். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் அமருக்கு இருக்கும் அறிவு, அவரது தந்தையை வியக்க வைத்தது. இவனது கல்விக்காக என்ன முதலீடு வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்துக் கொண்டார்.
மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி)யில் அமரைச் சேர்த்தார். இதற்காக வெளியில் 10,000 டாலர் கடன் வாங்கினார். வெறுமனே பட்டம் வாங்கி வேலைக்குப் போனால் போதும் என்ற நினைப்பில் போனவரை, பிஎச்.டி வரை கொண்டுபோனது அந்தக் கல்வி நிறுவனம். வாழ்நாள் முழுக்க அந்தக் கல்வி நிலையம் அவரோடு உறவுப் பிணைப்பில் இருந்தது. யுக் விங் லி என்ற அவரது பேராசிரியர் அங்கேயே அமரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.
தனது 70 வயது வரை அமர் போஸ் அங்கு பேராசிரியராக இருந்தார். சிறந்த ஆசிரியருக்கான பேக்கர் விருதினை 1963-1964-ஆம் ஆண்டுக்குப் பெற்றார். அமர் போஸ் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். 2001-இல் ஓய்வுப்பெற்றார்.
ஓய்வு நேரங்களில் அமர் போஸ், வயலின் இசையையும் தாகூரின் பாடல்களையும் விரும்பிக் கேட்பார். அவர் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வயலின் பதிவைக் கேட்பதற்காக, உயர் ரக ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டத்தை விலைக்கு வாங்கினார். அந்தக்கால ஸ்பீக்கர்கள் பெரிய மரப்பெட்டியில் பதிக்கப்பட்டு இருக்கும். வீட்டில் பெருமளவு இடத்தை அடைத்துக் கொள்ளும். பெரிய நிறுவனத்தின் உயர்ரக தயாரிப்பாக இருந்தாலும், அதில் கேட்ட இசை அவருக்கு ஏமாற்றம் தருவதாக இருந்தது. அரங்கில் கேட்டத் துல்லியம் அதில் இல்லை. பதிவிலும் குறை இல்லை.
அப்போதுதான் அவருக்கு ஆடியோ சிஸ்டத்தின் தத்துவம் புரிந்தது. ஒரு அரங்கில் இசை கேட்பது போல ரெக்கார்ட் செய்து ஸ்பீக்கரில் கேட்க முடிவதில்லை. அரங்கில் ஒலிக்கும் இசை, சுவர்களிலும் கூரையிலும் எதிரொலித்து, வழிந்து வந்து நம் காதுகளை நிறைக்கிறது. ஆனால் ஸ்பீக்கர் ஒற்றை இசையை மட்டுமே தருவதால், பரிபூரண திருப்தி கிடைக்கவில்லை. ‘அரங்கில் கேட்கும் அதேபோன்ற உணர்வை வழங்கும் வகையிலான ஸ்பீக்கர் ஒன்றை உருவாக்கலாமே’ என்ற உந்துதல்தான் அவரை உயரத்துக்குக் கொண்டு வந்தது.
அது 1956-ஆம் ஆண்டு. அன்றிலிருந்து துவங்கிய ஆராய்ச்சி முழுமையடைய எட்டு ஆண்டுகள் பிடித்தது. இடையில் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த எம்.ஐ.டி நிறுவனமே அவரது கண்டுபிடிப்பு செயல் வடிவம் பெற நிதியுதவி செய்தது. இரண்டு ஸ்பீக்கர் கண்டுபிடிப்புகளுக்கு உரிமம்(Patent) வாங்கி, எளிய முதலீட்டில் துவக்கிய அந்த விதையே இப்போது விருட்சமாக இருக்கிறது. உலகமெங்கும் 9000 பேர் இந்த நிறுவனத்தில் இப்போது வேலை பார்க்கிறார்கள்.
இடையில் இரைச்சல் இல்லாத ஹெட்போன், அறையின் துல்லியத்தில் ஒலிக்கும் கார் ஸ்பீக்கர்கள் என பலவிதமான கண்டுபிடிப்புகளை அமர் நிகழ்த்திவிட்டார். தனது நிறுவனத்தை அசுரத்தனமாக வளரச் செய்ய வேண்டும் என அவர் நினைத்ததில்லை. யாரோ முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக் குவித்து, அதில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி முன்னேற ஆசைப்பட்டதில்லை. ‘‘யாராவது எம்.பி.ஏ படித்த நிர்வாகிகள் இங்கு முதலாளியாக இருந்திருந்தால், என்னை நூறு முறை டிஸ்மிஸ் செய்திருப்பார்கள். எனக்குத் தொழில் திறமை கிடையாது. நான் பணம் சம்பாதிக்க பிசினஸ் செய்யவில்லை. இதுவரை யாரும் செய்யாத புதுமையான விஷயங்களைச் செய்வதற்காகவே பிசினஸ் செய்கிறேன்’’ என்றார்.
தம்முடைய நிறுவனத்தின் பங்குகளை எம்.ஐ.டி. கல்லூரிக்கே எழுதி வைத்து அந்தப் பங்குகளை எக்காரணம் கொண்டும் விற்கக்கூடாது, ஆராய்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையும் விதித்தார். அவர் ஜூலை 12, 2013-இல் இயற்கை எய்தினார்!
இசை, பாடல்கள், ஒலி இருக்கும் வரை இனிமையான முறையில் அவற்றை நம் செவிகளுக்குக் கொண்டு சேர்த்தபடி, நம்மிடை வாழ்ந்தபடிதான் இருக்கிறார் இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்த அமர் கோபால் போஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக