சனி, 24 ஜூலை, 2021

திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தொங்கு பாலம்: அமைச்சர் எ.வ.வேலு

 மின்னம்பலம் : கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல ரூ.37 கோடி மதிப்பில் தொங்கு பாலம் அமைக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 23) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் நெடுஞ்சாலை துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் , ஐந்து மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஐந்து மாவட்டங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “ தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஐந்து மாவட்டங்களில் இருவழிசாலைகளை நான்கு வழி சாலையாகவும், நான்கு வழி சாலைகளை ஆறு வழி சாலைகளாகவும் மாற்ற திட்ட மதிப்பீடு செய்யப்படும்.

பொதுப்பணித் துறை சார்பில் விருதுநகரில் 147.44 கோடி மதிப்பிலும், தென்காசியில் ரூ.144.49 கோடி மதிப்பிலும், நெல்லையில் 104.58 கோடி மதிப்பிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சுற்றுலா பயணிகளின் வசதிற்காக விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கு 140 மீட்டர் தூரத்தில் கடல் மீது தொங்கு பாலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.37 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். இப்பால பணிகள் விரைந்து முடிக்கப்பட்டவுடன், முதல்வர் பாலத்தை திறந்து வைப்பார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுற்றுலா மாளிகை கட்டப்படும். நெல்லையில் ரிங் ரோடு அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளேன். நிச்சயமாக நெல்லைக்கு ரிங் ரோடு அமைத்து தரப்படும். நெடுஞ்சாலை துறைக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து மண்டலத்திற்கு ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் தரத்தில் விரைவில் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் .அதற்கான அரசாணையை முதல்வர் வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: