தினமலர் : நடிகர் ரஜினி நடிக்கும் படத்திற்கு பணம் போட முடியாமல், தயாரிப்பாளர்கள் ஓட்டம் பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 70 வயதாகும் ரஜினி, அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளார்.
அண்ணாத்த படத்தை அடுத்து, தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பார் என பேசப்பட்டது.
இப்படத்தை, ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கலாம் என்றனர்.
ரஜினி நடித்த, 2.0, தர்பார் படங்களால், 'லைக்கா' நிறுவனத்திற்கு ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளிக்க, கமல், ஷங்கர் கூட்டணியை வைத்து, இந்தியன் - 2 படத்தை எடுக்க முயன்றது.
அது கிடப்பில் போனதால், முதலுக்கே மோசமான சூழலுக்கு லைக்காவை தள்ளியுள்ளது.
பிரமாண்ட தயாரிப்பாளர் என பெயர் எடுத்த லைக்கா, தற்போது சின்ன பட்ஜெட் படங்களுக்கு மாறியுள்ளது.
தற்போது ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால், அவருக்கே 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் தர வேண்டும் என்ற நிலை உள்ளதாக, தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் என, பட்ஜெட் எகிறும்.இதனால், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பதில் இருந்து, ஏ.ஜி.எஸ்., ஒதுங்கியுள்ளதாக தகவல்.இதனால், 'சன் பிக்சர்ஸ்' நிறுவனமே, ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் முடங்கியுள்ள தமிழ் திரையுலகை மீட்கும் வகையில், நலிந்த தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்காக, ஒரு படத்தை ரஜினி நடித்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கோலிவுட்டில் காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக