புதன், 21 ஜூலை, 2021

பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய ஜனநாயகத்தை ஆட்டம் காண வைக்கும் உளவுப் பிரச்னையா?


செளதிக் பிஸ்வாஸ் -  பிபிசி இந்தியா :;"நீங்கள் வேவு பார்க்கப்படுவதாக உணர்ந்தால், அதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்" என்கிறார் 'தி வொயர்' செய்தி வலைதளத்தின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன்.
"இது ஒரு மிகப் பெரிய ஊடுருவல்" என்கிறார் அவர். "யாரும் இதை எதிர்கொள்ளத் தேவை இல்லை"
ஒரு இஸ்ரேலிய நிறுவனத்தால் அரசாங்கங்களுக்கு விற்கப்பட்ட செல்ஃபோன் ஸ்பைவேரால் உலகம் முழுக்க உள்ள பல செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சித்தார்த் வரதராஜனும் ஒருவர் என்கிறது ஊடக செய்திகள்.
கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படும் தரவு தளத்திலிருந்து கசிந்த 50,000 எண்களில் 300 எண்கள் இந்தியர்களுடையது என்கிறது தி வொயர் செய்திகள்.
விளம்பரம்
ஸ்மார்ட்ஃபோன்கள்
    பெகாசஸ் ரகசிய மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்ட இந்தியாவின் முக்கிய புள்ளிகள்
    பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன? வேவு பார்க்க இது பயன்படுத்தப்படுவது ஏன்?

பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து புலனாய்வு செய்து செய்தி வெளியிட்ட 16 சர்வதேச ஊடகங்களில் தி வொயர் நிறுவனமும் ஒன்று.

ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்துவோரின் கவனத்துக்கே வராமல் பெகாசஸ் ஸ்பைவர் ஸ்மார்ட்ஃபோன்களை பாதிப்பது மற்றும் அதிலிருக்கும் மொத்த தரவுகளைப் பெறுவது போன்ற நடவடிக்கைகள் இது ஒன்றும் முதல்முறை அல்ல.

இந்த பெகாசஸ் ஸ்பைவேரை இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் என்கிற மென்பொருள் நிறுவனம் தயாரித்தது. இது பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை இலக்கு வைக்கிறது.
பெகாசஸ் ஸ்பைவேர்

வாட்ஸ்ஆப் நிறுவனம், தங்களின் சில வாடிக்கையாளர்கள் ஸ்பைவேரால் இலக்கு வைக்கப்பட்டு இருப்பதாக கடந்த 2019ஆம் ஆண்டு கூறிய போது, இந்தியா உட்பட பல நாடுகளில் கண்டனக் குரல்கள் எழுந்தன. 121 பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டனர்.

இதில் இந்திய உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கும் பங்கு உண்டு என நிபுணர்கள் கூறினர்.

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் 1,400 செல்ஃபோன்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக வாட்ஸ்ஆப் நிறுவனம், என்.எஸ்.ஓ குழு மீது குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்து இருக்கிறது.

பெகாசஸ் மூலம் கண்காணிக்கபடுவதாகக் கூறப்படும் செல்ஃபோன் எண்களின் பட்டியல் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. அதே போல யார் சைபர் ஊடுருவலை நடத்த அனுமதி கொடுத்தார்கள், எத்தனை செல்ஃபோன்கள் உண்மையில் ஊடுருவப்பட்டு இருக்கின்றன என்கிற விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டை போலவே, தற்போதும் என்.எஸ்.ஓ குழு தாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை எனவும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை எனவும் கூறுகிறது.

"பெகாசஸ் ஸ்பைவேரை தவறாகப் பயன்படுத்தியதாக வரும் நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம்" என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அதே போல நரேந்திர மோதி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசும், எந்த வித அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

மாநில மற்றும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உச்ச பதவியில் இருக்கும் அதிகாரிகளின் அனுமதியோடு, இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக இந்தியாவில் ஒருவரின் செல்ஃபோனை ஒட்டு கேட்கலாம்.

"ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்கும் செயல்முறை எப்போதும் வெளிப்படையாக இல்லை" என்கிறார் டெல்லியில் இருக்கும் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர் மனோஜ் ஜோஷி.

கடந்த 2019ஆம் ஆண்டு, பெகாசஸ் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் கே கே ராஜேஷ் அரசிடம் பல கேள்விகளை குறிப்பிட்டு எழுப்பினார்.

பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியாவுக்கு எப்படி வந்தது? ஏன் அரசை எதிர்த்து போராடும் மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர்? இந்தியாவில் இருக்கும் அரசியல் தலைவர்களை வேவு பார்க்க கொண்டு வரப்பட்ட மென்பொருளில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை எப்படி நம்ப முடியும்? என பல கேள்விகளை எழுப்பி இருந்தார்.

என்.எஸ்.ஓ குழுவோ, தங்களின் மென்பொருளை, மக்களின் உயிரைக் காக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், தீவிரவாத செயல்கள் நடக்காமல் தடுக்கவுமே அரசாங்கத்தின் உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே விற்பதாக கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒட்டுக்கேட்பது & வேவுபார்ப்பது

இந்தியாவில் அதிகாரபூர்வமாக 10 அரசு முகமைகளுக்கு அழைப்பை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் உள்ளது. அதில் மிகவும் வலிமையான அமைப்பு என்றால் அது கடந்த 134 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐபி எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோ என்கிற உள்நாட்டு புலனாய்வு அமைப்புதான். இந்த அமைப்பு இந்தியாவிலேயே மிகப் பெரிய மற்றும் வலிமை வாய்ந்தது. இதற்கு பல்வேறு அதிகாரங்கள் இருக்கின்றன.

இந்த அமைப்பு தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து மட்டும் கண்காணிக்காமல், நீதிபதிகள் போன்ற அரசின் உயர் பதவிகளுக்கு வருவிருப்பவர்களின் பின்புலங்களையும் பரிசோதிக்கிறது என ஒரு நிபுணர் கூறினார்.

இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் கட்சி பாகுபாடின்றி தங்களின் எதிரணியில் இருப்பவர்கள் மற்றும் தங்கள் சொந்த கட்சியினரை இந்த உளவுத் துறை முகமைகளைப் பயன்படுத்தி வேவு பார்த்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு.

கடந்த 1988ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெகடே தன் எதிரணியில் இருப்பவர்கள் மற்றும் சொந்தக் கட்சிக்காரர்கள் என 50 பேரை ஒட்டுக்கேட்க உத்தரவிட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பதவி விலகினார்.

1990ஆம் ஆண்டு, அரசு, தான் உட்பட, 27 அரசியல்வாதிகளின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக குற்றம்சாட்டினார் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்.

கடந்த 2010ஆம் ஆண்டு நீரா ராடியா மற்றும் முன்னணி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் நடந்த தொலைபேசி உரையாடல்களை வரித் துறையினர் ஒட்டுக்கேட்டனர். பின் அதை ஊடகங்கள் மத்தியில் கசியவிட்டனர்.
ஒட்டுக்கேட்பது & வேவுபார்ப்பது

பட மூலாதாரம், Getty Images

"தற்போது ஒட்டுக் கேட்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, வேகம், தனித்துவம் எல்லாம் மாறி இருக்கிறது. எதிர் கருத்து தெரிவிப்பவர்கள் மின்னணு ரீதியில் கண்காணிக்கப்படுகிறார்கள்" என்கிறார் தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொது மக்கள் கொள்கை ஆய்வாளர் ரோஹினி லக்ஷனே.

மாநில உளவு அமைப்புகள் கண்காணிப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க, அமெரிக்கா போல இந்தியாவில் சிறப்பு நீதிமன்றங்கள் கிடையாது.

இந்தியாவில் இருக்கும் உளவு அமைப்புகளின் அதிகாரங்களைப் பயன்படுத்துவது மற்றும் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்கான ஒரு சட்டம் கொண்டு வரும் முயற்சியில் தோல்வி கண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி.

"இந்திய மக்களை வேவு பார்க்கும் உளவு முகமைகளை மேற்பார்வை செய்ய யாரும் இல்லை. தற்போது அப்படிப்பட்ட சட்டங்களுக்கான நேரம் வந்து இருக்கிறது" என்கிறார் மனோஜ். அவர் தன் பழைய சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக என்னிடம் கூறினார்.

"இந்தியாவுக்கு உடனடியாக கண்காணிப்பு சீர்திருத்தம் தேவை" என்கிறார் ரோஹினி லக்ஷனே.

சில கடினமான கேள்விகளை கேட்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் லக்ஷனே. ஒட்டு கேட்கப்பட்ட தரவுகளின் பயன் முடிந்த பிறகு என்ன செய்யப்படும்? அது எங்கு சேமித்து வைக்கப்படும்? அதை அணுக யாருக்கெல்லாம் அனுமதி உண்டு? அரசு முகமைகள் சாராத வெளி ஆட்கள் யாருக்காவது அதை அணுக அனுமதியுள்ளதா? என்ன மாதிரியான டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன போன்றவைகளை கேட்கலாம் என்கிறார்.
ஸ்மார்ட்ஃபோன்கள்

கருத்துகள் இல்லை: