செளதிக் பிஸ்வாஸ் - பிபிசி நியூஸ் : இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
முந்தைய சில ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களில் கோவிட்-19 பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூறுவது கடினமென்றாலும், அந்தத் தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடுவதற்கான எண்ணிக்கையாக இது உள்ளது.
இதுவரை இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று அரசின் அலுவல்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளம்பரம்
கொரோனா காலத்தில் கூடுதலாக இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன என்பதை கணக்கிடாத மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
அமெரிக்காவில் இருந்து இயங்கும் சென்டர் ஃபார் க்ளோபல் டெவலப்மென்ட் எனும் அமைப்பின் ஆய்வாளர்கள், இந்தியாவில் அனைத்து காரணங்களாலும் கூடுதலாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வரை கணக்கிட்டனர்.
இந்திய மக்கள்தொகையில் பாதி பேரை கொண்டுள்ள ஏழு மாநிலங்களில் மரணங்கள் கணக்கிடப்பட்டு, அந்த எண்ணிக்கையின் விகிதம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இருந்தால் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடப்பட்டதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளது.
இந்தியா ஆண்டுதோறும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணியை மேற்கொள்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை 2019ஆவது ஆண்டு வரை மட்டுமே புதிப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக எந்தெந்த வயதினரின் இறப்பு விகிதம் எவ்வளவு உள்ளது என்ற சர்வதேச கணக்கீடுகளையும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல். 1,77,000 குடும்பங்களைச் சேர்ந்த 8,68,000 ஆயிரம் பேர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நுகர்வோர் கருத்துக் கணிப்பையும் இந்தியாவில் கூடுதலாக இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட இந்த ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் கடந்த 4 மாதங்களில், கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்தனரா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.
இந்த அனைத்து தரவுகளையும் வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் இந்த பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்திலிருந்து 47 லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கோவிட்-19 தொற்று காரணமாக இறந்தவர்களின் அலுவல்பூர்வ எண்ணிக்கையை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும்.
நோய்த்தொற்றியல் வல்லுநர்களின் கணக்குப்படி, இந்தியாவில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் அலுவல்பூர்வ தரவுகளை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் இந்த ஆய்வின் மதிப்பீடு அதை விட அதிகமாக உள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான, அரவிந்த் சுப்ரமணியம் இந்த எல்லா மரணங்களும் கோவிட்-19 தொற்று காரணமாக நிகழ்ந்தவை அல்ல. நோய் வாரியாக இந்த மரணங்களை கணக்கிடுவது மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எத்தனை பேரின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு அணுக்கள் இருக்கலாம் என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க எந்த அளவு வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்த பல சர்வதேச அனுமானங்கள் உள்ளன.
இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், அந்த தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு ஆய்வாளர்கள் கணக்கீடு செய்துள்ளனர்.
கொரோனா காலத்தில் இந்தியாவில் இறந்த 40 லட்சம் பேர் - அமெரிக்க நிறுவன ஆய்வு
ஒவ்வொரு வயது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த கணக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதாவது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வயது பிரிவில் இருந்தவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையையும் சர்வதேச அளவில் அந்த வயது பிரிவில் தொற்றால் பாதிக்கப்பட்ட பின் இறப்பதற்கான விகிதம் என்ன என்பதையும் இந்த ஆய்வாளர்கள் கணக்கிட்டனர்.
இதன் மூலம் பெற்ற முடிவுகள் அடிப்படையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அரவிந்த் சுப்ரமணியம் தெரிவிக்கிறார்.
அரவிந்த் சுப்ரமணியம் மற்றும் இந்த ஆய்வில் பங்கெடுத்த ஆய்வாளர்களான சென்டர் ஃபார் க்ளோபல் டெவலப்மென்ட்-இன் ஜஸ்டின் சேன்ட்ஃபர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் அபிஷேக் ஆனந்த் ஆகியோர், பொதுமக்கள் பரவலாக நினைப்பதை விட கொரோனா முதல் அலை மிகவும் மோசமானதாக இருந்தது என்கின்றனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை மிதமானதாக இருந்ததாக கருதப்படுவதற்கு காரணம் உயிரிழப்புகளுக்கு இடையே இருந்த நேரம் மற்றும் தூர இடைவெளியாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதை விவரிக்கும் அரவிந்த் சுப்ரமணியம், "உண்மையான உயிரிழப்புகள் பல பத்து லட்சங்களாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. இந்திய பிரிவினை மற்றும் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகப் பெரிய மனிதப் பேரவலமாக இது இருக்கலாம்," என கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக