திங்கள், 19 ஜூலை, 2021

பெகாசஸ் ப்ராஜெக்ட்' அறிக்கை. Pegasus: the spyware technology that threatens democracy

 

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் (NSO GROUP) தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மென்பொருளைக் கொண்டு ஒருவரின் தொலைபேசியை ஹேக் செய்து, அவர் என்ன வார்த்தையைத் தட்டச்சு செய்கிறார் என்பது வரை கண்காணிக்க முடியும்.இந்தநிலையில் இந்த மென்பொருள் மூலம், இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில், பெகாசஸ் ஹேக்கிங்  குறித்து ஆய்வு செய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரிய சர்ச்சையானதுடன், இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

 இதனையடுத்து இந்த சர்ச்சை குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று விளக்கமளித்தார். அப்போது அவர், "நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. கடந்த காலத்தில், வாட்ஸ்அப்பில் பெகாசஸை பயன்படுத்தப்படுவதாக இதேபோல் குற்றசாட்டுகள் எழுந்தன. ஆனால் அவற்றில் எந்தவொரு உண்மையும் இல்லை. மேலும் அவை திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளன. 18 ஆம் தேதி வெளியான  ('பெகாசஸ்) குறித்த செய்தி, இந்திய ஜனநாயகத்தையும், இந்திய நிறுவன அமைப்புகளையும் இழிவுபடுத்தும் முயற்சியாக தெரிகிறது" என கூறியுள்ளார்.

 தொடர்ந்து அவர், ""ஒரு செய்தி அறிக்கை, என்எஸ்ஓ பட்டியலில் ஒரு எண் இருப்பதால் மட்டுமே அது கண்காணிப்பில் இருப்பதாக அர்த்தமல்ல என்று தெளிவாகக் கூறுகிறது. ஊடக கூட்டமைப்பு 40,000 எண்கள் உள்ள கசிந்த தரவுத்தளத்தை அணுகியுள்ளது. அந்த தரவுத்தளத்தில் எண்ணின் ஒரு எண் இருப்பது, அந்த எண் ஹேக் செய்யப்பட்டதா அல்லது அந்த எண்ணை ஹேக் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படாத என்பதை குறிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

 மேலும் என்.எஸ்.ஓ குரூப் நிறுவனத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸைப் பயன்படுத்தும் நாடுகளின் பெயர்கள் தவறானவை என கூறியதுடன், "சட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும், வலுவான நிறுவனங்களும் இருப்பதால் எந்தவொரு சட்டவிரோதமான கண்காணிப்பும் சாத்தியமில்லை" எனவும், "தர்க்க ரீதியாக பார்த்தால் இந்த பரபரப்புக்கு பின் ஒன்றுமில்லை" எனவும் தெரிவித்துள்ள்ளார்.

 

கருத்துகள் இல்லை: