வியாழன், 22 நவம்பர், 2018

ஆணவக் கொலை: தனித்தனி முதல் தகவல் அறிக்கை!

ஆணவக் கொலை: தனித்தனி முதல் தகவல் அறிக்கை!
மின்னம்பலம் : ஓசூரில், நந்தீஷ் - சுவாதி காதல் தம்பதியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நந்தீஷ் சடலம் நவம்பர் 13ஆம் தேதியன்றும் சுவாதியின் சடலம் நவம்பர் 15ஆம் தேதியன்று கிடைத்துள்ளதாகவும், இரண்டு மரணத்துக்கும் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எவிடன்ஸ் அமைப்பின் எவிடன்ஸ் கதிர் தெரிவிக்கிறார்.
ஆணவக் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த நந்தீஷ், பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வன்னியர் சமூக பெண்ணான சுவாதியை காதலித்துள்ளார். நான்கு வருடங்களாகக் காதலித்த இவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சுவாதியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், அவர்களுக்குத் தெரியாமல் தலைமறைவாக ஓசூரில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்துவந்தனர்.

கடந்த 10ஆம் தேதி முதல் இருவரையும் காணவில்லையென்று நந்தீஷின் சகோதரர் புகார் செய்ததை அடுத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ஜலஹள்ளி பகுதி காவிரி ஆற்றில் நந்தீஷ் - சுவாதி இரண்டு பேரும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டறிந்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணின் தந்தை உள்ளிட்டோர் ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சுவாதியின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சுவாதியின் சித்தப்பா வெங்கட்ராஜ், உறவினர் அஸ்வத்தப்பா, லக்ஷ்மண் உள்ளிட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆணவக் கொலை செய்ததற்குப் பயன்படுத்திய காரைக் கைப்பற்றிய போலீசார், தலைமறைவாக இருந்த கார் ஓட்டுநர் சாமிநாதனை நேற்று கைது செய்து கர்நாடக போலீசிடம் ஒப்படைத்தனர் தமிழக போலீசார்.
கடந்த மாதம் சேலத்தில் தலித் சிறுமி ராஜலட்சுமி தலையை வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது நடந்துள்ள ஆணவக் கொலை தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆணவக் கொலைக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அரசு வேலை
சூடுகொண்டபள்ளியில் நந்தீஷ் பெற்றோரைச் சந்தித்து, நேற்று (நவம்பர் 21) விசாரணை நடத்தினார், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன். பின்னர், நந்தீஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் நந்தீஷ் பெற்றோருக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம், வீடு அல்லது நிலம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டு முதல் தகவல் அறிக்கை
நந்தீஷ் - சுவாதி இருவரின் உடலும் ஒன்றாக மீட்கப்பட்டதாகவும், ஒரே முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் கூறி வந்த நிலையில், இது தவறான தகவல் என்று தெரிவிக்கிறார், எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த எவிடன்ஸ் கதிர்.
நந்தீஷ் சடலம் கடந்த 13ஆம் தேதியன்று பிற்பகல் 1.30 மணிக்குக் கிடைத்து இருக்கிறது. சுவாதியின் சடலம் இரண்டு நாட்கள் கடந்து நவம்பர் 15ஆம் தேதியன்று காலை 11.30 மணிக்குக் கிடைத்து இருக்கிறது. இரண்டு சடலத்துக்கும் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து மின்னம்பலம் சார்பாகத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தெரிவித்த தகவல்கள்:

நந்தீஷ்: முதல் தகவல் அறிக்கை
நவம்பர் 13ஆம் தேதியன்று மதியம் 1.30 மணியளவில் ரவிசங்கர் ASI மாண்டியா நகரத்தில் எஸ்பி மீட்டிங் முடித்துவிட்டு பெழகாவடி காவல்நிலையம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எம்.நவீன்குமார் என்பவர் அவருக்குத் தொலைப்பேசி வாயிலாக அழைத்து எஸ்பிஆர் ஏரியில் சிம்சா பவர் ஹவுஸ் போகும் வழியில் சானல் கேட் அருகில் ஓர் அடையாளம் தெரியாத ஆண் உடல் தண்ணீரில் மிதந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கேட் ஆபரேட்டர் சிவக்குமார் பின்லிங்கையா என்பவரும் ரவிசங்கர் ASIக்குத் தெரிவித்தார். இதையடுத்து, காவலர்களான ராகவேந்திரபாபு (401), ரகு குமார் (171), தசரததேவரமணி (429), ஜீப் டிரைவர் சுனில் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு மதியம் 3.30 மணிக்குச் சென்றார்கள்.
அங்கு சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத ஆணின் உடல் தண்ணீரில் மிதந்து உப்பிப்போய் கேட்டில் மாட்டிக் கொண்டிருந்ததாகவும், நீச்சல் வீரர்களை அழைத்து அந்த உடலைக் கரைக்குக் கொண்டு வந்ததாகவும் அந்த உடலுக்கு 20 முதல் 25 வயது இருக்கலாம் என்றும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"தோல் மிகவும் அழுகிப்போயிருந்தது. கண்கள் வெளியே வந்திருந்தன. நாக்கு கடித்தவாறு இருந்தது. நீலம் மற்றும் கருமை நிறமுடைய முழுக்கை விளையாட்டு பனியன் அணிந்திருந்தார். பனியனின் இடதுபுறத்தில் ஜெய்பீம் சூடாகானபள்ளி என்று எழுதப்பட்டிருந்தது. இதன் நடுவில் அம்பேத்கரின் படம் இருந்தது. கறுப்பு பேன்ட் அதன் மீது பெல்ட் இருந்தது. பச்சை கலர் உள்ளாடை அணிந்திருந்தார். அதில் VEEYEM TEX என்று பொறிக்கப்பட்டிருந்தது.
இரண்டு கால்களிலும் துணியால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. கழுத்தை பிரவுன் கலர் துப்பட்டாவால் இறுக்கமாக இறுக்கிய நிலையில் கொடூரமாக கொலை செய்து அந்தக் கொலையை மறைப்பதற்காக இறந்தவரின் உடலைத் தண்ணீரில் கொண்டு வந்து போட்டதாக கண்டறிய வருகிறோம்" என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுவாதி: முதல் தகவல் அறிக்கை
கடந்த 15ஆம் தேதியன்று காலை சுமார் 11.30 மணியளவில் சிம்சா கேட் அருகே பணியில் இருந்த ஆபரேட்டர் எல்.சிவராஜ் பின்லிங்கையா என்பவர், அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்து வந்து கேட்டில் மாட்டிக் கொண்டிருப்பதாக உமாவதி ASIக்குத் தொலைப்பேசி வாயிலாகத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு மதியம் சுமார் 12.30 மணியளவில் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு பெண்ணின் அழுகிப் போன பிரேதம் கை கால்கள் கட்டியிருந்த நிலையில் கேட்டில் மாட்டிக் கொண்டு மிதந்து கொண்டிருந்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு 18 முதல் 20 வயது இருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அந்தப் பெண்ணின் கைகள் பின்புறம் கட்டப்பட்டு இருந்தது. இரண்டு கால்களும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. பிரேதத்தின் மீது பிங்க் கலர் மேலாடை மற்றும் பூப்பொறிக்கப்பட்ட பேன்ட் அணிந்திருந்தார். யாரோ அடித்து கொலை செய்து ஆதாரங்களை மறைப்பதற்காகத் தண்ணீரில் போட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்கள் முன்பு இதே இடத்தில் ஓர் ஆணின் உடலை நாங்கள் கண்டறிந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண்ணின் பிரேதம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்தது" என்று சுவாதியின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ர.ரஞ்சிதா

கருத்துகள் இல்லை: