வெள்ளி, 23 நவம்பர், 2018

சபரிமலையில் 144 தடை உத்தரவு - வரும் 26-ம் தேதி வரை நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு - வரும் 26-ம் தேதி வரை நீட்டிப்பு தினத்தந்தி :  சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் அமர்வில் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா தவிர்த்து எஞ்சிய 4 பேரும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்ல அனுமதித்து இந்த தீர்ப்பை அளித்தனர். இந்த தீர்ப்பு ஒரு சில பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும், அய்யப்ப பக்தர் அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.


இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல், இலவுங்கல் ஆகிய இடங்களில் பிறப்பிக்கப்பட்ட ஒரு வார கால 144 தடை உத்தரவு நேற்று நள்ளிரவுடன் முடிந்த நிலையில், அது வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தணந்திட்டா மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16- ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: