சனி, 24 நவம்பர், 2018

சுழியம் (0) [Zero] என்ற எண்ணை முதலில் அறிந்திருந்த தமிழர்கள்: `பரிபாடல்` பகரும் சான்று :::

இலங்கநாதன் குகநாதன் : சுழியம் (0) [Zero] என்ற எண்ணை முதன்முதலில்
அறிந்திருந்த தமிழர்கள்:
`பரிபாடல்` பகரும் சான்று ::::
0 (Zero ) இன் பயன்பாட்டினை முதன்முதலில் அறிந்திருந்தவர்கள் யார் என்ற கேள்விக்கு அராபியர்கள், ஆரியப்பட்டர், பிரம்ம குப்தா எனப் பல பதில்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இவர்கள் எல்லோரிற்கும் முன்னரே தமிழர்கள் அந்த ` 0` எண்ணினை அறிந்திருந்தார்கள் என்றால் நீங்கள் வியப்படையக்கூடும். முதலில் பூச்சியம், சூனியம் என்பன வடமொழிச் சொற்கள்(தமிழல்ல). அதற்கான தமிழ்ச்சொல் சுழியம்/ பாழ் ஆகும். இங்கு நாங்கள் கவனத்தில் எடுக்கப்போகும் சொல் #பாழ் என்ற தமிழ்ச்சொல்லே ஆகும். பொதுவாக இன்றும் பேச்சு வழக்கில் “பாழாய்ப் போச்சுது” என்பது `ஒன்றுமில்லாமல் போய்விட்டது` என்பதனைக் குறிக்கும். அதேபோன்று `பாழ் நிலம்` , `பாழ் கிணறு` என்ற சொற் தொடர்களையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கெல்லாம் பாழ் = ஒன்றுமில்லை/ சுழியம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. “பாழாய்ப் போக” என்ற வஞ்சினச் சொல் இன்றும் வழக்கில் உள்ளது. எனவேதான் `0` என்ற எண்ணைக் குறிக்க முதன்முதலில் பாழ் என்ற தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றார்கள். இதற்கான சான்று பரிபாடலிலேயே உள்ளது (பின்னர் பார்ப்போம்).

👉முதலில் `சுழியம்` என்ற கருத்தாக்கமானது சிந்துவெளி நாகரீகத்திலேயே உள்ளது என மா.சோ.விக்டர் என்ற தமிழ் அறிஞர் பின்வருமாறு கூறுகின்றார்.
{“சிந்து வெளி மக்களின் எண்களை ஆய்வு செய்தோர், ஒன்று முதல்
பத்துவரையிலான எண்களின் வரி வடிவங்களைக் கண்டுபிடித் துள்ளனர். அவைகளில்,
பாழ் எனப்படும் வெற்றெண்ணைப் பற்றிய செதிகள் தெளிவாக இல்லை. பத்து என்ற
இலக்கத்தை, இரு அரைவட்டங்களாகக் காட்டியுள்ள சிந்துவெளி மக்கள் அவற்றை மேல்
கீழாகப் பொருத்தும் போது 0 என்ற வரிவடிவம் கிடைத்ததைப் பற்றியும்
அறிந்திருக்க வேண்டும். சிந்துவெளி எண்ணின் வரிவடிவமே, 0 என்ற பாழ் எண்ணுக்கு
மூலமான தாக இருந்திருக்க வேண்டும். சிந்துவெளி மக்களின் 1 முதல் 10 வரையிலான
எண்களை, தமிழ் எண்களாகவே கொள்ளலாம்”}
👆மேலுள்ள விக்டர் ஐயாவின் கூற்றில் உண்மையுள்ளது. என்றாலும் இதே கருத்து கிரேக்க நாகரீகம், மெசப்பெத்தோமிய நாகரீகம் என்பவற்றிற்கும் பொருந்தும். உயர் கட்டிடங்கள் எழுப்பப்படுவதற்கு சுழியம்/ ஒன்றுமில்லை என்ற கருதுகோள் தேவை என்பது அறிஞர்கள் கருத்து. என்றபோதிலும் இங்கெல்லாம் 0 என்பது ஒரு எண்ணாகக் கருதப்படவில்லை (ஒன்றுமில்லை என்ற கருத்தாகவேயுள்ளது, வரிசையாக 0,1,2,3.. என எண்ணாக இல்லை). இதனாலேயே சுழியம் என்ற எண்ணைக் கண்டுபிடித்த பெருமை ஆரியப்பட்டர் /பிரம்மகுப்தா விற்கு செல்லுகின்றது.
👉ஆரியப்பட்டர் காலம் - பொது ஆண்டு 476-550 (CE 476 - 550)
👉பிரம்மகுப்தா காலம்- பொது ஆண்டு598-668 Brahmagupta (598 CE, died 668 CE).
👉இவர்களிற்கு முன்னரே பொது ஆண்டு 458 ` லோக விபகா` எனும் சமணநூல் 0 இனைக் கண்டறிந்து கூறியது (CE 458) . இது சமணநூல் என்பதால் பின்நாட்களில் கண்டுகொள்ளப்படவில்லை.
👆👆
மேற்கூறிய மூன்றிற்கும் காலத்தால் முற்பட்டது பரிபாடல். சங்க கால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் பொது ஆண்டிற்கு முற்பட்டது என்பது பொதுவான அறிஞர்களின் கருத்து. { இங்கு பேரா.சிவத்தம்பி, பேரா.அரசு, சுபவீ ஐயா போன்றோர் சங்ககாலம் முடிவுற்ற பின்னரே பரிபாடல்,கலித்தொகை என்பன தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறுவார்கள். நானும் அவ்வாறே கருதுகின்றேன்}. எது எவ்வாறாயினும் பரிபாடலை நாம் பொது ஆண்டு 300 (CE 300) இற்கு பின்கொண்டு செல்லமுடியாது. எனவே எவ்வாறு எனினும் பரிபாடல் ஆரியப்பட்டர், பிரம்மகுப்தா, லோக விபகா என்பவற்றுக்கு காலத்தால் முந்தியது. அத்தகைய பரிபாடல் பின்வருமாறு கூறுகின்றது.
👇👇👇
'பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு எனத், தொண்டு என
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை'
- பரிபாடல் 3 { பெட்டன் நாகனார்}
👆👆👆
இப் பாடலில் பாழ் (0),கால், அரை, 1,2….. என இன்றைய ஒழுங்கில் அமைந்துள்ளதனைக் காண்க. எனவேதான் `0 `இனைக் கண்டுபிடித்த பெருமை தமிழர்களையே சேரும். பரிபாடலிற்கு முன்னரே தமிழர்களிடம் பாழ் என்ற சொல் புழக்கத்தில் இருந்திருக்கும். எவ்வாறாயினும் பரிபாடல் முதன்மையான சான்றாகும்.
👉இந்த பாழ் என்ற சொல்லானது பிற்காலத்தில் பூழ் எனத் திரிபுற்றது. இதிலிருந்தே புழுதி (மண்) என்ற சொல்லும் தோன்றிற்று. பின்வரும் கம்பராமாயணப் பாடலைப் பாருங்கள்.
“ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி,
தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி,
புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் - இரண்டு ஆண்டின் வா…”

👆{இங்கு `பூழி வெங் கானம்= புழுதி நிறைந்த கொடிய காட்டை`}. இதிலிருந்துதான் புழுதியாப் போச்சுது என்றால் ஒன்றுமில்லாமல் போய்விட்டது எனவும், பின் எல்லாம் மண்ணாய்ப்போய்விட்டது (புயலால் வாழை மரமெல்லாம் மண்ணாய்ப் போச்சு) போன்ற சொற்தொடர்கள் சுழியத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
👉👉இத்தகைய` பூழ்` என்ற மருவிய சொல்லையே வடமொழி பூச்சியமாக்கியது. `பூச்சியம்` என்ற வடசொல்லிற்கு வேர்ச்சொல்லோ அல்லது மூலமோ அங்கில்லை. பின்னர் தமிழின் பாழ்/ சுழியம் என்ற தமிழ்ச் சொற்கள் மறைக்கப்பட்டு பூச்சியம் என்ற வடமொழிச் சொல்லினையே தமிழர்களும் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டனர்கள்.
🙏பார்த்தீர்களா! பாழ் என்ற ஒரு சொல்லினை இழந்ததால் எவளவு பெரிய வரலாற்றையும் (0 கண்டுபிடிப்பு ) இழந்துள்ளோம் எனறு!
தமிழ்ச் சொற்களை மீட்போம், வடமொழி தவிர்ப்போம்

கருத்துகள் இல்லை: