வியாழன், 22 நவம்பர், 2018

இனி தேங்காய் ஏழைகளால் "வாங்கமுடியாத" பொருளாகத்தான் இருக்கும்

பாதிப்புள்ளான தென்னை மரம்சத்யா கோபாலன் viaktan : தஞ்சை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்திய சேதம் எண்ணில் அடங்காதவை. அதனால் பல கிராம மக்கள் தங்களின் வாழ்வை இழந்து நிற்கதியாக தவித்து வருகிறார்கள்.

தென்னையின் மட்டைகளை வைத்து வெறும் கீற்றைப் பின்னி தங்களது வாழ்க்கையை ஓட்டுகிற நிறைய பேர் இன்றும் அதையே தொழிலாக நம்பி செய்த வண்ணம் உள்ளனர். முன்பெல்லாம் திருமணப் பந்தல், விசேஷங்கள் வரும்போதெல்லாம் தென்னை ஓலையில் வேயப்பட்ட சாப்பாட்டு இலைதான் இருந்தது. கொட்டாங்கச்சியை இசைக்கருவியாய் செய்ததில் இருந்து பல்வேறு தொழில்நுட்பத்தில் பெரிதும் பங்குவகிக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் உட்பட தேங்காயின் பயனை நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். தேங்காய் மட்டையின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் கயிறுகள் மற்றும் தரை விரிப்புகளும் தேங்காயின் இன்னொரு பரிணாமம். அதன்பின் தேங்காய் கொப்பரையிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் தேங்காய் சார்ந்த ருசிமிக்க உணவு வகைகள், நகரவாசிகளின் அன்றாட அருமருந்தாகக் கருதப்படும் இளநீர் என அளவற்ற பயன்பாட்டை அடுக்கலாம். இப்படி தம்மை உலகம் முழுவதும் ஒரு பணம் காய்க்கும் மரமாக வியாபித்த பெருமை தென்னையைச் சாரும். இப்படிப்பட்ட தென்னை மரங்கள் முழுவதும் கஜா புயலினால் முற்றிலுமாக வேருடன் சாய்ந்து கிடக்கிறது.

சரிந்துக்கிடக்கும் தென்னை
சமூக ஆர்வலரும் தொழிற்சங்கவாதியுமான கோவிந்த் நீலகண்டன் தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் தென்னை மரத்தின் பயன்கள் மற்றும் அவற்றை இழந்து தவிக்கும் விவசாயிகளின் குரலாக நம்மிடம் பேசினார். “1980-களில் நான் பொறியியல் படிப்பை மேற்கொள்ள நினைத்தபோது வீட்டில் எந்த சேமிப்பும் கிடையாது. என்ன செய்யலாம் என்று அன்னாந்து பார்த்தால் தெரிந்தது தேங்காய் என்கிற குலசாமிதான். பல தலைமுறை தாண்டி இன்றும் தேங்காய் பற்று வரவு என்கிற வியாபார புரிந்துணர்வு கிராமங்களில் இருந்து வருகிறது. இதை வைத்துத்தான் என் போன்ற பல பேர் படித்து முடித்து பட்டமும் பெற்றார்கள் என்பது தென்னை ஓலை ரகசியம். படிப்புச்செலவோ, திருமணச்செலவோ, மருத்துவச்செலவோ எதுவாக இருந்தாலும் அவசரத்தேவைகளுக்கு தேங்காய் பற்று வரவுதான் உதவும். பூமியில் அவதரித்த பல மரங்களில் ஒன்றான அபூர்வமான பயன்பாடுகள் கொண்ட தலைசிறந்த உயிரினம் தென்னை மரம் என்பது அதை காதலித்த சில விவசாயிகள் தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்பில்லை.

கோவிந்த் நீலகண்டன் இன்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு தேங்காயின் தேவையை பூர்த்தி செய்கிற மாவட்டமாக தஞ்சாவூர் திகழ்கிறது. அதுவும் குறிப்பாக பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளிருந்து ஏராளமான தேங்காய்கள் பல்வேறு இடங்களுக்கு வியாபாரத்துக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு தேங்காயை கடையில் கொடுத்தால் உப்பு மிளகாய் வாங்கலாம். இரண்டை கொடுத்தால் பக்கத்து ஊர் கோயிலுக்குப் போய் வர பஸ் செலவுக்கு ஆகும். மூன்று தேங்காய் கொடுத்தால் மூக்கு பிடிக்க மீன் வாங்கிச் சாப்பிடலாம். இப்படி பண்டமாற்றில் தேங்காயை விற்றுப் பல காலமாய் பழக்கப்படுத்தி வாழ்வாதாரமாய் கொண்டது தஞ்சையைச் சார்ந்த பல கிராமங்கள்.  நாட்டு மரங்களில் சராசரியாக ஒரு மரத்துக்கு 20 தேங்காய் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பறிக்கலாம் என வைத்துக்கொண்டால் வருடத்துக்கு ஒரு மரத்துக்கு 120 தேங்காய்கள் காய்க்கின்றன. ஒரு ஏக்கர் வைத்திருப்பவர் குறைந்தபட்சம் 10,800 தேங்காய்களை வருடாந்திரம் பறிக்கும் பட்சத்தில் ஒரு தேங்காயின் தற்போதைய சந்தை விலை பத்து ரூபாய் என வைத்துக்கொண்டால் வருட வருமானம் ஒரு லட்சத்து எண்ணூநூறு ரூபாய் என கருதலாம். இதை பன்னிரண்டு மாதங்களுக்கு வகுத்துக்கொண்டால் தேங்காய் வகுத்துக் கொடுத்த பொருளாதாரத்தை நாம் உணரலாம்.  சிறு, நடுத்தர மற்றும் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நெல் விளைவிக்கும் விளைநிலங்களைத் தென்னை பயிரிடுவதற்கு மாற்றிவிட்டனர். தென்னை ஒரு அமுத சுரபி அதை வைத்தவர் காலங்காலத்துக்கும்  கஷ்டப்படவேண்டியதில்லை என்கிற மனநிலைதான் இதற்கான காரணம்.
தென்னை மரத்தி புரட்டிப்போட்ட கஜா புயல்
ஆனால், புயல் ஏற்படுத்திய வேதனையில் தேங்காயின் மீது முதலீடு செய்துள்ள வியாபாரிகள் கலக்கமடைந்தாலும், அவற்றின் தாக்கம் நாளைய தலைமுறை வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தலைமுறை தொடங்கி நாளைய தலைமுறை காக்கவிருந்த வாழ்வாதாரம் போய்விட்டதே என பலர் புலம்பும் ஓசை காற்றில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு புறம் மரம் போன கவலை மறுபுறம் தேங்காயை நம்பி வாங்கிய கடன்களை எந்த வகையில் தீர்க்கப்போகிறோம் என்கிற மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளப்போகிற மன உளைச்சலில் தத்தளிக்கிறது தஞ்சாவூர். முன்பெல்லாம் ஊருக்குச் சென்று சென்னைக்குத் திரும்ப வருகையில் சுமந்து வரும் துணிப்பையோடு ஒரு தேங்காய் மூட்டையை முன்னோர்கள் ஏற்றிவிடுவார்கள். அதுபோன்ற நிகழ்வு இனி வரும் காலங்களில் நடக்க வாய்ப்பில்லை. காரணம், தேங்காய் இந்தப் புயலால் ஒரு அரிதான பொருளாய் மாறிவிடும்.

புயலால் சரிந்த தென்னை
இன்றும் நகர்புறங்களில் வாழ்பவர்களும் வெளிநாடுகளில் பணி நிமித்தமாக சென்று பணியாற்றுபவர்களும் தாங்கள் சம்பாதித்த பணத்தை தென்னை விவசாயத்தை நம்பியே முதலீடு செய்துள்ளனர். தென்னையைப் பிள்ளை போல் வளர்த்தனர். ஆனால், ஒரே இரவில் கழுத்தை திருகியது இந்த கஜாப்புயல். அதுமட்டுமல்லாது தென்னை விவசாயத்தை நம்பி இருந்தவர்களைச் சார்ந்து அவரவர் தோப்புகளில் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வரும் விவசாயக் கூலிகள் கதி மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு தென்னை மரம் வளர குறைந்தது எட்டு ஆண்டுகள் பிடிக்கும். இனி அவற்றை வளர்த்தெடுக்கக் கடைமடை பகுதிகளில் போதுமான நிலத்தடி நீர் இல்லை. தென்னையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் பலர் செய்வதறியாது திக்கு முக்காடி சித்த பிரம்மை பிடித்தவர்கள் போல கிராமங்களில் மனதுக்குள் அழுது கொண்டிருக்கின்றனர். தென்னங்குலைகள் சாய்ந்ததில் தங்களது ஈரக்குலை வெடித்துச் சிதறிவிட்டது என்கிறார்கள் பெண்கள். இந்த மண்ணை மட்டும் விட்டுச்சென்ற மூதாதையர்கள் எங்களுக்குத் தென்னை விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை என விரக்தியின் விளிம்பில் கதறிக்கிடக்கின்றனர். கிட்டத்தட்ட பேராவூரணி வட்டத்தில் 91 கிராமங்களிலும் ஒரே மாதிரி நிலைதான் தற்போது உள்ளது.  கஜா செய்த கந்தர்வகோலம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரழிவு’ என மிகுந்த வேதனையுடன் கூறி முடித்தார்.
\vikatan.com

கருத்துகள் இல்லை: