திங்கள், 19 நவம்பர், 2018

BBC : தருமபுரி பேருந்து எரிப்பு.. 3 அதிமுக கொலை குற்றவாளிகள் விடுதலை

மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பு ஒன்றால்
தண்டிக்கப்பட்டபோது, கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தினை அதிமுக தொண்டர்கள் தீ வைத்து எரித்ததில் மூன்று மாணவிகள் கருகி இறந்த வழக்கில், மரண தண்டனை பெற்று, பிறகு அதை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பெற்ற மூன்று அதிமுக-வினரை தமிழக அரசு முன்கூட்டி விடுவித்துள்ளது.e>முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று, பத்தாண்டுகளை நிறைவுசெய்திருக்கும் கைதிகளை விடுவிக்கப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி சுமார் 1800 ஆயுள் தண்டனைக் கைதிகள் தமிழகச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்டபோது, அதனைக் கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தினை அதிமுக தொணடர்கள் தீ வைத்துக் கொளுத்தியதில் மூன்று மாணவிகள் உடல் கருகி இறந்தனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இது தொடர்பான கோப்பு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பப்பட்டபோது, அதனை அவர் மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, இந்த கொலைகளில் எந்த வித சதியோ, உள்நோக்கமோ இல்லை என்பதால் அரசமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின்படி அவர்களை விடுவிக்கலாம் எனக் கூறி அந்தக் கோப்பை நவம்பர் முதல் வாரத்தில் தமிழக அரசு மீண்டும் ஆளுனருக்கு அனுப்பியது.
பிறகு ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டது. இந்த ஆணைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சிறைத் துறை தலைமையகத்திலிருந்து வேலூர் சிறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் இன்று பிற்பகல் பன்னிரண்டே கால் மணியளவில் வேலூர் சிறையிலிருந்து மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக மூன்று பேருக்கும் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி
ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் (1991-96) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள பிளஸன்ட் ஸ்டே என்ற ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி 7 தளங்களை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 1996ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் எச்.எம். பாண்டே, ஹோட்டலின் செயல் இயக்குனர் ராகேஷ் மிட்டல், நிர்வாக இயக்குனர் பாளை சண்முகம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கில் 2000-வது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு வெளியானதும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் வன்முறையில் இறங்கினர். 50 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 5 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்தத் தருணத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை தர்மபுரி மாவட்டத்தில் தடுத்தி நிறுத்திய வன்முறைக் கும்பல், மாணவிகள் முழுமையாக பேருந்தை விட்டு இறங்குவதற்கு முன்பாக பேருந்தில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தது.
இதில் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருதாசலத்தைச் சேர்ந்த வி. காயத்ரி, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி ஆகிய மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 16 மாணவிகள் காயமடைந்தனர். இந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2007 டிசம்பர் 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: