ஞாயிறு, 18 நவம்பர், 2018

எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

கஜா புயலை சிறப்பாக கையாண்டதா அடிமை அரசு ? ஒரு அரசுக்குரிய தகுதியில் கஜா புயல் நிவாரணத்திற்கு அடிமைகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன வினவு செய்திப் பிரிவு: கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு பிச்சு உதறுகிறதாம். சொல்வது யார்? தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் அறிக்கை வெளியான அன்று எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் மாமனார் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் தத்தளித்துக் கொண்டிருக்கும் அடுத்த நாளும் கூட கோயில் கொடை விருந்து உண்டுவிட்டு, தன் புகழ்பாடும் மூன்று நிகழ்ச்சிகளில் சேலத்தில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், இவர்கள் சொல்கிறார்கள், தமிழ்நாடு அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பின்னி எடுத்துவிட்டதாம்.

‘தி.மு.க.வே பாராட்டிவிட்டதே..’ என்று கமல்ஹாசன் பாராட்டுகிறார். ‘உலக நாயகனே பாராட்டிவிட்டாரே..’ என்று ரஜினிகாந்த் பாராட்டுகிறார். வரிசையாக பா.ம.க. ராமதாஸ், திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் எல்லோரும் உள்ளேன் அய்யா சொல்கின்றனர்.
‘எடப்பாடியை பாராட்டிய ஸ்டாலினை பாராட்டுகிறேன்’ என்று நடுவில் சைக்கிள் ஓட்டுகிறார் தமிழிசை. இவர்கள் எல்லோரும் பாராட்டும் போது நாம் மட்டும் எப்படி சும்மாயிருப்பது என்று டி.டி.வி. தினகரன் வேறு பாராட்டுகிறார். சும்மா இருக்கும்போதே எடப்பாடியின் திருவடியில் பஜனை பாடும் தமிழக அமைச்சர்கள், ’கஜா புயலையே கூஜா தூக்க வைத்த எடப்பாடியார்’ என்று எதுகை மோனையில் குதூகலிக்கின்றனர்.

இப்படி ஆளாளுக்கு பாராட்டும் அளவுக்கு இந்த அரசு அப்படி என்ன செய்துவிட்டது என்று பார்த்தால், உண்மையிலேயே எதுவும் செய்யவில்லை. கடந்த கால புயல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்களாம். கத்துக்கிட்டு? மக்கள் எல்லோரையும் அழைத்துச் சென்று நிவாரண மையங்களில் அடைத்து வைத்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மக்களை பிடித்து மண்டபத்தில் அடைத்து வைப்பதைத்தான் இவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.




சாலைகளில் வீழ்ந்து கிடக்கும் மரங்கள்
நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம், கோடியக்கரை, வாய்மேடு, முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மசூதிப்பட்டினம்… என கீழத் தஞ்சையின் அடிப்பகுதி முழுக்க சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கணிசமான பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு மரம் மட்டை மிச்சமில்லை. எங்கு திரும்பினாலும் பெரிய, பெரிய மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. எந்த சாலையிலும் செல்ல முடியவில்லை. ஒரு ஊரையும் இன்னொரு ஊரையும் இணைக்கும் அனைத்து சாலைகளிலும் மரங்கள், மரங்கள், மரங்கள். உடைந்து தொங்கியபடி, வேறோடு பிடுங்கப்பட்டு… விதம்விதமாக வீழ்ந்து கிடக்கின்றன. மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர முடியவில்லை.
பெரும்பாலான வீடுகள் உடைந்து தொங்குகின்றன. சமைக்க எந்தப் பொருளும் இல்லை. அடுப்பு பற்ற வைக்க விறகு இல்லை. குடிக்க நீரில்லை. நோய்க்கு மருந்தில்லை. அனைத்து பெட்ரோல் பங்குகளும் உடைந்து கிடக்கின்றன. பெட்ரோல் இல்லை என்பதால் வண்டிகளை இயக்க முடியவில்லை. மரங்களை வெட்டுவதற்கு உரிய கருவிகள் ஒற்றைப் படை எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. அவற்றை இயக்கவும் மின்வசதி இல்லை. ஜெனரேட்டர் வசதியுடன் இயக்கலாம் என்றால், அதற்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.
மின்வசதி இல்லை என்பதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு. செல்போன் சார்ஜ் செய்ய இயலாததாலும், ஏராளமான செல்போன் கோபுரங்கள் உடைந்து வீழ்ந்து விட்டதாலும் தொலைதொடர்பு துண்டிக்கப் பட்டிருக்கிறது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள், பல நூறு கடைகள் உடைந்து நொறுங்கிக் கிடக்கின்றன. ஒரு கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்ட மொத்த கோழிகளும் செத்துவிட்டன. பல லட்சம் செலவு செய்து அமைக்கப்படும் பாலிஹவுஸ் என்ற நவீன வேளாண்மைக்கான கூரைகள் உடைந்து தொங்குகின்றன. எல்லா புயல்களிலும், எப்போதும் துயரத்தை சுமக்கும் மீனவர்கள், கஜா புயலிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வலைகள், படகுகளுக்கு கடும் சேதம். எந்தப் பக்கம் திரும்பினாலும் மின் கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன. மேலே சொன்ன அனைத்துப் பகுதிகளிலுமே மின் கம்பங்களும், அவற்றின் ஒயர்களும் அறுந்து கிடக்கின்றன. மறுபடியும் மின் இணைப்பு தருவதற்கு மாதக் கணக்கில் ஆகும்.




பிய்த்தெறியப்பட்ட ஓடுகள் – கூரைகள்
ஒரு புயல் ஏற்பட்டால் என்னென்ன துன்பங்கள் ஏற்படுமோ, அனைத்தையும் அதிக விழுக்காட்டில் மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், அரசுத் தரப்பிலோ, எக்கச்சக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட்டதாக பெருமை பட்டுக்கொள்கிறார்கள். குடிநீர், உணவு, பால், குழந்தைகளுக்கான மருந்துப் பொருட்கள்… இவற்றை உரிய எண்ணிக்கையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்வதுதானே முன்னெச்சரிக்கை நடவடிக்கை? அதை ஒரு இடத்தில் கூட இவர்கள் செய்யவில்லை. புதுக்கோட்டை பகுதியில் ஒரு தண்ணீர் கேன் 200 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

புயல் என்றால் காற்று வீசி மரங்கள் விழும். அவற்றை உடனே வெட்டி அப்புறப்படுத்த நவீன கட்டிங் இயந்திரங்கள் தேவை. இது புயலுக்கு செய்ய வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ‘முந்தைய புயலில் இருந்து நாங்கள் பாடம் படித்தோம்’ என்று சொல்வது உண்மையானால், ’தானே’ ‘வர்தா’ புயலில் இருந்து, கட்டிங் இயந்திரங்களின் அவசியத்தை கற்றிருக்க வேண்டும். மக்களை பிடித்து மண்டபத்தில் அடைத்துவிட்டு, வானிலை ஆய்வு மைய அறிக்கையை ஊடகங்களிடம் படித்துக் காட்டுவதற்கு அமைச்சர் எதற்கு? ’நாங்கள் மட்டும் வழக்கம் போல் இருந்திருந்தால் பொருட்சேதத்துடன் சேர்த்து அதிக உயிர்ச்சேதமும் அல்லவா ஏற்பட்டிருக்கும்? அப்படி விடாமல் இந்தமுறை மண்டபத்தில் அடைத்து வைத்து பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கிறோம்’ என்பது அவர்களின் உள்மன எண்ணம். ’நீங்கள் உயிர் பிழைத்திருப்பது நாங்கள் போட்ட பிச்சை’ என்பது அதன் மறுபொருள்.




கொடுத்ததற்கும் மேலாக கூவும் ஊடகங்கள்
சாதாரண நாளிலேயே எடப்பாடி அரசுக்கு ஜால்ரா அடிப்பதில் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களிடையே கடும் போட்டி நிலவும். ஸ்டாலின் முதல் தமிழிசை வரை எல்லோரும் பாராட்டி வேறு விட்டார்கள்… கேட்கவா வேண்டும்? இவர்கள் தங்கள் பங்குக்கு ஜால்ரா சத்தத்தை காது ஜவ்வு கிழியும் அளவுக்கு அடித்து கிளப்புகிறார்கள். நியூஸ் 7, புதிய தலைமுறை, தந்தி… என எந்த டி.வி.யும் தப்பவில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இந்த எடப்பாடி அரசின் போலீஸ் மக்களை சுட்டு வீழ்த்தியபோது, கேமராவை வேறுபக்கம் திருப்பிக்கொண்ட இவர்கள், எட்டுவழிச் சாலை விவகாரத்தில் மக்கள் போராட்டங்களை போலீஸ் படை கொண்டு அடக்கி ஒடுக்கியபோது கேமராவை வேறுபக்கம் திருப்பிக் கொண்ட இவர்கள்… ’கஜா புயலில் தமிழக அரசின் புயல்வேக நடவடிக்கைகளை பாரீர்’ என்று இடைவிடாமல் நேரலை செய்கிறார்கள். அமைச்சர்கள் எந்தப் பக்கம் போனாலும் பின்னாலேயே செல்கின்றனர். எடப்பாடியை போற்றி புகழ்ந்து விவாத நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
‘ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் விழுந்து கிடப்பதால்தான் அரசின் உதவிகள் மக்களுக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது’ என்று மீண்டும், மீண்டும் ஒளிபரப்புகின்றனர். மரங்கள் இல்லை என்றால் தமிழக அரசு இன்னும் வேகத்துடன் செயல்பட்டிருக்கும் என்பது இதன் பொருள். ஆனால் மக்களோ, இந்த ஆபாசமான பாராட்டுரைகளை கண்டு கொந்தளிக்கின்றனர். 32-க்கும் அதிகான உயிரிழப்பு; 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் வசிக்கும் நிலைமை. ஒரு சோத்துப் பொட்டலம் கூட கிடைக்கவில்லை என்ற உண்மையை நேருக்கு நேர் பார்க்கும் அவர்கள், ஊரே சேர்ந்து தமிழக அரசை பாராட்டுவதைப் பார்த்து ஆத்திரம் கொள்கின்றனர்.




மவுலிவாக்கம் கட்டிட விபத்து
மக்கள் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கும்போது தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் இந்த ஆபாசமான பண்பு இவர்களின் தலைவியான ஜெயலலிதாவுக்கு உரியது. 61 உயிர்களை பலிகொண்ட சென்னை, மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது, அந்த துயரத்தின் கண்ணீர் காயும் முன்பே அந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்திய பெருமாட்டி அவர். அவர் வழி வந்தவர்கள், இழவு வீட்டில் மரியாதை தேடிக்கொள்ள துடிக்கின்றனர்.
ஒக்கி புயலை இதே எடப்பாடி அரசு எத்தனை கேவலமாக கையாண்டது என்று நமக்குத் தெரியும். இன்னும் சில தினங்களில் ஒக்கி புயல் அடித்து ஓராண்டு வரப்போகிறது. இப்போது வரை அந்த தென்முனை மீனவர்களின் துயரங்களுக்கு மருந்தில்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மீனவர்களை திட்டமிட்டு கைவிட்டன. அவர்கள் இந்திய பெருங்கடலில் அவலத்திலும், அவலமாக செத்து மிதந்த கோரத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளாயினும் மறக்க இயலாது. அப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கூத்தடித்துக் கொண்டிருந்த இந்த கொள்ளைக் கூட்ட கிரிமினல்கள் இப்போது கஜா புயலில் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.
மக்களிடம் அனைத்து வகைகளிலும் நம்பிக்கையை இழந்துவிட்ட இந்த எடப்பாடி அரசே தமிழ்நாட்டுக்கு ஒரு இயற்கை பேரிடர்தான்.

கருத்துகள் இல்லை: