சனி, 5 மே, 2018

நீட் தேர்வு மையங்களால் மன உளைச்சலில் மாணவர்கள்; திகைத்து நிற்கும் பெற்றோர்


மாணவர்கள்
மாணவர்கள்BBC :அபர்ணா ராமமூர்த்தி - பிபிசி :
தமிழ் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் தமிழக மாணவர்களுக்கு `நீட்’எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்காக ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளத்துக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வரும் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தகுதி தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் பத்து தேர்வு மையங்கள் உள்ளன. இச்சூழலில், தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்களுக்கு அண்டை மாநிலமான கேரளாவிலும், வடமாநிலமான ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் தேர்வு மையங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? அவர்களது பெற்றோரின் மனநிலை என்ன? உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதா தமிழக அரசு? என மக்கள் மனதில் இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேட முயற்சித்தது பிபிசி.

திருநெல்வேலியில் தங்கள் பள்ளியில் மட்டும் 25 மாணவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் தனியார் பள்ளியின் தாளாளர் ஜெயேந்திரன்.
திருநெல்வேலியில் இருந்து பேருந்தில் எர்ணாகுளம் செல்ல ஏழரை அல்லது எட்டு மணி நேரம் ஆகும் என்று குறிப்பிடும் ஜெயேந்திரன், மாணவர்கள் அவ்வளவு தூரம் சென்றால் அவர்களுடன் பெற்றோரும் செல்ல வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்தார்.
எர்ணாகுளம் என்பது சுற்றுலாத்தளம் என்பதால் திடீரென்று தங்குவதற்கு அங்கு இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. தங்குமிடத்தில் இருந்து மையங்களுக்கு எப்படி அவர்கள் செல்வார்கள் என்பதும் தெரியாது என்கிறார் அவர்.
“இதுவே தேர்வு எழுதப் போகும் மாணவர்களை சோர்வாக்கிவிடும். மேலும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு மாணவர்கள் உள்ளாகிறார்கள்.”
மே 6ஆம் தேதி காலை 8:30 மணிக்கு தேர்வு மையங்களில் இருக்க வேண்டும் என்றால் ஒரு நாள் முன்னதாகவே அங்கு செல்ல வேண்டும். இதற்காக ஆகும் எதிர்பாராத செலவை சமாளிப்பதும் பெற்றோருக்கு கடினமான ஒன்று என்றும் ஜெயேந்திரன் தெரிவித்தார்.
தமிழக அரசு மீது புகார்
இந்த தவறுக்கான முழுப் பொறுப்பை சிபிஎஸ்இ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சாடும் அவர், தமிழக மாணவர்களுக்கு போதுமான மையங்களை சிபிஎஸ்இ அமைத்துக் கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்.

நீட் சர்ச்சையால் தற்கொலை செய்து கொண்ட அனிதா

Image caption நீட் சர்ச்சையால் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட அனிதா
தமிழக அரசும் இது தொடர்பான வழக்கில் சரியாக வாதாடத் தவறிவிட்டது என்று ஜெயேந்திரன் குறிப்பிடுகிறார்.
தமிழ்வழிக்கல்வி பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்குதான் வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா, இல்லையா என்ற குழப்பத்தில் பல மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்கவில்லை. இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், போதுமான அளவிலான மையங்களை அமைக்க முடியாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.
`மொழி தெரியாத ஊரில் என்ன செய்யப் போகிறோம்?
“என் மகனை தேர்வு எழுத எர்ணாகுளம் அழைச்சுட்டு போகணும். ஒரு நாள் ஆஃபிசுக்கு லீவு போட்டுதான் கூட்டிட்டு போக போறேன். ரொம்ப சிரமமா இருக்கு. மொழி தெரியாத ஊருக்கு போய் என்ன பண்ண போறோம்னு தெரியல. டிக்கெட் வேற கிடைக்குமானு தெரியல” என்று வருந்துகிறார் பிபிசியிடம் பேசிய மாரியப்பன்.
திருநெல்வேலியில் இருந்து தேர்வு எழுத தனது மகன் பரமேஸ்வரனை எர்ணாகுளத்துக்கு அழைத்துச் செல்ல உள்ளார் இவர்.

மாணவர்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
“தேர்வு எழுதுமுன் ஏதாவது ஃபார்மாலிட்டீஸ்னா, உள்ளூர்ல இருந்தா கூட யார்கிட்டயாது கேக்கலாம். அங்க போய் யார உதவிக்கு கூப்புடுறது” என்று கேட்கிறார் அவர்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கூறிய மாரியப்பன், என் மகனிடம் “இன்னிக்கு ஓய்வெடுடா! நாளைக்கு எர்ணாகுளம் கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்கேன்” என்கிறார்.
பயணம் செய்யும் நாளில் படித்திருப்பேன்
மே 6ஆம் தேதி நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவி ஆர்த்தியை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. இவருக்கும் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதால் நிம்மதியாக இருந்ததாகவும் உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்தது ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறுகிறார் ஆர்த்தி.

மாணவர்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
“இதனால் என் தேர்வுக்கான தயாரிப்பில் ஒரு நாள் வீணாகிறது. வேறு மாநிலத்துக்கு சென்று தேர்வு எழுத உள்ளதால் பதற்றமாக இருக்கிறது”.
எர்ணாகுளத்துக்கு ஒரு நாள் முன்னரே சென்று தேர்வு மையம் இருக்கும் இடத்தையெல்லாம் தேட வேண்டும் என்று கவலைப்படுகிறார் அவர்.
மாணவர்களுக்கு உதவ முன்வரும் பொதுமக்கள்
தமிழகத்தின் பலரும் வட இந்தியாவிற்கு வந்திருக்கக் கூட மாட்டார்கள். அப்படி இருக்கும் நிலையில் சென்னை, ஈரோடு போன்ற இடங்களில் இருந்து சில மாணவர்கள் நீட் தேர்வுக்காக ராஜஸ்தான் வரை பயணம் செய்ய உள்ளனர்.
அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் தமிழ் சங்கம். ராஜஸ்தானுக்கு நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தங்கும் வசதி போன்ற அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவு பகிரப்பட்டது.
இதுகுறித்து ஜெய்ப்பூர் தமிழ் சங்கத்தின் உறுப்பினர் பாரதி, பிபிசியிடம் பேசிய போது, “இதுவரை 5 பேர் என்னை தொடர்பு கொண்டனர். நாளை ராஜஸ்தான் வரப்போவதாகக் கூறியுள்ளனர். நிறைய பேர் இன்னும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்” என்றார்.
    மாணவர்கள் பெற்றோருடன் வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி அவர்களை எங்கிருந்து அழைக்க வேண்டுமோ அங்கிருந்து அழைத்து தங்குமிடம் வழங்க உள்ளதாக பாரதி கூறினார்.
    ஜெய்ப்பூரில் 5 தேர்வு மையங்கள் இருப்பதாகவும், பிகானெர், ஜோத்பூரில் இருக்கும் மையங்களுக்கு அங்குள்ள நண்பர்களிடம் இருந்து உதவி கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
    இதுவரை தொடர்பு கொண்டவர்களில், 3 பேர் சென்னையில் இருந்தும், 2 பேர் ஈரோட்டில் இருந்தும் வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.
    “நம்ம தமிழர்களுக்கு தானே செய்ய உள்ளோம். எனக்கு சமைக்கும் போது, அவங்களுக்கும் சேர்த்து சமைக்க முடியும். இதில் என்ன இருக்கு” என்கிறார் அவர்.
    இதுமட்டுமன்றி நடிகர், நடிகைகள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
    bbc

    கருத்துகள் இல்லை: