சனி, 5 மே, 2018

நாளை நீட் தேர்வு - தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு பயணம்

நாளை நீட் தேர்வு - தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு பயணம்

மாலைமலர் :நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். திருச்சியில் இருந்து எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்ற மாணவ-மாணவிகள்;
சென்னை: மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில் நாடு முழுவதும் “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு” எனும் “நீட்” தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இந்த தேர்வை பொறுப்பேற்று நடத்துகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
இதற்காக இந்தியா முழுவதும் 136 நகரங்களில் 2 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 7480 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7480 பேருக்கு மட்டுமே தமிழ் நாட்டுக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க முடிந்தது.

சுமார் 1500 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாட்டுக்குள் தேர்வு மையத்தை ஒதுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து 1,500 மாணவர்களுக்கும் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்த போதே எந்த நகரில் தேர்வு எழுத விரும்புகிறீர்கள் என்ற விபரம் கேட்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாணவரும் 3 தேர்வு மையங்களை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாணவர்கள் குறிப்பிட்ட முதலாவது தேர்வு மைய நகரத்தை ஒதுக்கீட செய்ய முடியாதபட்சத்தில் 2-வது அல்லது மூன்றாவது தேர்வு மையத்தை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தனர்.

இதனால்தான் தமிழகத்தை சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகளுக்கு வேறு மாநிலங்களில் நீட் தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்ய நேர்ந்தது. அந்த வகையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மராட்டியம், தெலுங்கானா, அரியானா, சிக்கிம் மாநிலங்களிலும் கூட தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த எத்தனை மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத செல்கிறார்கள் என்ற விபரத்தை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க தமிழக கல்வித் துறை அதிகாரிகள் மறுத்தனர்.

வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அதாவது 75 சதவீதம் பேர் கேரளா சென்று நீட் தேர்வு எழுத தேர்வு மையத்தை குறிப்பிட்டிருந்தனர். அதாவது 1,500 மாணவர்களில் சுமார் 1,200 பேர் கேரளா சென்று நீட் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்த சுமார் 1,200 மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தேனி, திருச்சி, கோவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். கேரளாவில் இவர்கள் திருவனந்தபுரம், கொல்லம், புணலூர், கங்கனாச்சேரி, கோட்டயம், கோழிக்கோடு, பாலக்கோடு ஆகிய நகரங்களை தேர்வு செய்திருந்தனர்.

எப்படியும் தமிழ்நாட்டில்தான் தேர்வு மையம் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் முதலாவது விருப்ப தேர்வு மையமாக தமிழக நகரையும் 2-வது, 3-வது விருப்ப தேர்வு மையமாக கேரளாவில் உள்ள நகரங்களையும் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டிருந்தனர். தமிழ்நாட்டில் தேர்வு மையம் கிடைக்காத நிலையில் வெளி மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், 1500 மாணவர்களும் தவிப்புக்குள்ளாகி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் தேர்வு மையம் ஒதுக்கக் கோரி ஐகோர்ட்டு உத்தரவிட்டதும், இவர்கள் அனைவரும் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை வராது என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்றே நீட் தேர்வை எழுத வேண்டும் என்று உத்தரவிட்டதால் தமிழக மாணவர்கள் 1500 பேரும் கடைசி கட்ட நெருக்கடிக்குள்ளானார்கள்.


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக கேரளாவுக்கு 1,200 மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 190 பேர் கர்நாடகாவுக்கும், சென்னை, வேலூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 110 பேர் ஆந்திராவுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சில மாணவர்கள் மட்டும் ராஜஸ்தான், சிக்கிம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் 1,500 மாணவர்களுக்கும் 2 வி‌ஷயங்கள் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. ஒன்று தொலை தூர பயணம், இரண்டாவது தங்கும் இட வசதி, மூன்றாவது தேர்வு மையத்தை கண்டு பிடிக்கும் அலைச்சல்.

இந்த மூன்று வித பிரச்சினைகளும் சேர்ந்து 1,500 மாணவ-மாணவிகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தின. இரு தினங்களுக்கு முன் இந்த விவகாரம் பூதாகரமாக சர்ச்சையை ஏற்படுத்தி விவாதத்துக்குரியதாக மாறியது. இதைத் தொடர்ந்து வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ஏராளமான தனியார் அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும் போட்டி போட்டு உதவிகளை வாரி வழங்க முன் வந்தன.

குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமான உதவிகள் அறிவிப்பு வந்தன. கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பஸ், ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழக அரசும் வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு பயணக் கட்டணத்துடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இன்று வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்ற நிலையில் உடனடியாக பெரும்பாலான மாணவர்களால் அந்த தொகையை பெற இயலவில்லை. எனவே தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு அரசு அறிவித்துள்ள உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிவிப்பை நம்பி மாணவர்கள் இன்று காலை வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். சில நகரங்களில் மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைத்தன.

சில மாநிலங்களில் சில நகரங்களில் தமிழக மாணவர்களுக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக எர்ணா குளத்தில் பல மாணவ-மாணவிகள் தங்கும் இட வசதி கிடைக்காமல் அவதிகுள்ளானார்கள். அவர்கள் உதவி மையங்களின் தொலை பேசி எண்கள் மூலம் உதவி பெற்று வருகிறார்கள்.

நாளை தேர்வு எழுத உள்ள நிலையில் சுமார் 1500 மாணவர்கள் பயணம் மற்றும் தங்கும் இடவசதி பிரச்சினையால் சற்று கவனச் சிதறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: