வெள்ளி, 4 மே, 2018

வேல்முருகன் :கர்நாடக வாகனங்களைச் சிறை பிடிப்போம்..

மின்னம்பலம்: ‘உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி கர்நாடக அரசு
தமிழகத்துக்கு நான்கு டிஎம்சி காவிரி நீரைத் திறந்து விடாதபட்சத்தில், தமிழகத்துக்கு வரும் கர்நாடக வாகனங்களைச் சிறை பிடிப்போம்’ எனத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நேற்று (மே 3) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மேலும் கால அவகாசம் கோரியது மத்திய அரசு. இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அரசியல் காரணம் காட்டி கால அவகாசம் கோரக் கூடாது. இந்த மாதம் வழங்க வேண்டிய நான்கு டிஎம்சி நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட அறிவுறுத்தியது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ‘கர்நாடகத் தேர்தலில் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதால் வரைவு செயல் திட்டத்தை அமைக்கவில்லை என்று மத்திய அரசு சொல்வது தமிழர்களை அவமானப்படுத்துகிற செயல். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு டிஎம்சி நீரைத் திறந்துவிடுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழுத்தம் தர வேண்டும்.
கர்நாடக அரசு நீரைத் திறந்து விடவில்லை என்றால் தமிழகத்துக்கு வருகிற கர்நாடக வாகனங்களைச் சிறை பிடித்து மிகப் பெரிய போராட்டங்களை நடத்துவோம். மேலும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமிழர்களின் உரிமைகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது” என்று கூறினார். தொடர்ந்துபேசிய அவர், “நீட் தேர்வு எழுதக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவியர் மொழி தெரியாத வேறொரு மாநிலத்துக்குச் சென்று எப்படி தேர்வுகளை எழுத முடியும்? அது அவர்களின் மீது மேலும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். இப்படியாக அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சிக்கிற செயலை மத்திய அரசு செய்கிறது” என்றும் விமர்சித்தார்.

கருத்துகள் இல்லை: