வெள்ளி, 4 மே, 2018

உபி ராஜஸ்தான் புழுதி புயல்.. 103 பேர் மரணம் .. மின்கம்பங்கள் சாய்ந்து மரங்கள் வீழ்ந்து ...

புழுதி புயல்,Storm,Uttar Pradesh,Weather,உத்தரபிரதேசம்,புயல்,மழை,வானிலைஉ.பி., ராஜஸ்தானை புரட்டியெடுத்தது புழுதி புயல் பல இடங்களில் மின் கம்பம், மரங்கள் சாய்ந்து பாதிப்பு தினமலர்: புதுடில்லி : உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு வீசிய, பயங்கரமான புழுதிப் புயலுக்கு, 103 பேர் பலியாகினர். ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால், பல மாவட்டங்களில், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு, முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ராஜஸ்தான், உ.பி., உட்பட வட மாநிலங்கள் முழுவதும், கடுமையான வெயிலால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அனல் காற்று வீசியதால், மக்கள் வீடுகளை விட்டு, வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்நிலையில், உ.பி., ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப், ம.பி., ஆகிய மாநிலங்களில், நேற்று முன்தினம் இரவு, திடீரென மழை பெய்ய துவங்கியது.


நிவாரண நிதி :

கொதிக்கும் கோடையில், மழையை பார்த்ததும், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் மழை லேசாக ஓய்ந்தது. அதன் பின், புழுதிக் காற்று வீசத் துவங்கியது. நேரம் செல்ல செல்ல, காற்றின் வேகம் அதிகரித்தது. ஒருகட்டத்தில், புழுதிப் புயலாக மாறி, விஸ்வரூபம் எடுத்தது.
இந்த புழுதிப் புயலால், வட மாநில மக்கள், நிலைகுலைந்து போயினர்.

இந்த புழுதி புயலுக்கு, உ.பி.,யில், நான்கு மாவட்டங்களில், 64 பேர் உயிரிழந்தனர். அதிகபட்ச மாக, ஆக்ரா மாவட்டத்தில் மட்டும், 43 பேர் பலியாகினர்; 35 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. பலமான காற்று வீசியதால், வீடுகள் இடிந்து விழுந்தன.

ராஜஸ்தானில், இரவு, 7:00 மணிக்கு வீசத் துவங்கிய புழுதிப் புயல், இரண்டு மணி நேரம், கோர தாண்டவமாடியது. சாலையில் இருந்த நுாற்றுக்கணக்கான மரங்கள், வாகனங்களின் மீது விழுந்தன. 35 பேர் உயிரிழந்தனர்.

பரத்பூர் மாவட்டத்தில், அதிக சேதம் ஏற்பட்டது. இங்கு மட்டும், 17 பேர் உயிரிழந்தனர். உயிர் சேதங்களை தவிர்க்க, அப்பகுதி முழுவதும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உத்தரகண்டில், நேற்று முன்தினம் பெய்த திடீர் மழை காரணமாக, அப்பகுதியில் நடந்து வந்த, சார் தம் என்ற புனிதப் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. பத்ரிநாத் நெடுஞ்சாலையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், கல்யாண்பூர் மற்றும் பிந்த் மாவட்டங்களில், வீடு இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். புழுதிப்புயல்: டில்லியில், 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், நேற்று முன்தினம் மதியத்தில் இருந்தே காற்று வீசத் துவங்கியது. மொஹாலி, ஜிரக்பூர், லுாதியானா மாவட்டங்களில், புழுதிப் புயல் வீசியது; இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கருத்துகள் இல்லை: