ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மெரினாவில் போராட தடை விதிக்க மத்திய அரசின் அழுத்தமே காரணம் - அய்யாக்கண்ணு

மெரினாவில் போராட தடை விதிக்க மத்திய அரசின் அழுத்தமே காரணம் -  அய்யாக்கண்ணுமாலைமலர் :மெரினாவில் போராட தடை விதிக்க மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். திருச்சி: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இப்பிரச்சனையில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அறப்போராட்டம், பொதுக்கூட்டங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றன.
அதே போன்று விவசாய சங்கங்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. அடுத்த கட்டமாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை மெரினா கடற்கரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி 90 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சார்பில் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும் இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.ராஜா மெரினாவில் ஒரு நாள் மட்டும் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
போராட்ட நேரம் எவ்வளவு என்பது குறித்து போலீசாரே முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். இதை தொடர்ந்து போராட்டத்திற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் தீவிரமாக செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் தமிழக அரசு சார்பில் உடனடியாக சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு நீதி பதிகள் மணிக்குமார் மற்றும் பவானி சுப்புராயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் அரசு கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த் பாண்டியன் நீதிபதிகளிடம் கூறும்போது, போராட்டம் நடத்துவது குறித்து எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டாம்.
மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவை போல மேலும் 25 சங்கங்கள் அனுமதி கேட்டுள்ளனர். எங்கள் தரப்பு வாதங்களை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஒருமுறை அனுமதி அளித்தால் அதுவே வாடிக்கையாகி விடும். எனவே இந்த போராட்டத் திற்கு மெரினாவில் அனுமதி வழங்க கூடாது.
சேப்பாக்கம் அல்லது காயிதே மில்லத் மணி மண்டபம் பகுதிகளில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கலாம் என அரசு கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார். அதற்கு அய்யாக்கண்ணு தரப்பில் மெரினாவில் போராட்டம் நடத்தினால் எங்களால் பொது மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் ஆகியோர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். அரசு குறிப்பிட்டுள்ள 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து உண்ணாவிரதம் இருக்கலாம் என தீர்ப்பு கூறினார்.
இதனால் சென்னை மெரினா உண்ணாவிரத போராட்ட ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது :-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தை அணுகாத தமிழக அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு இரண்டு மணி நேரத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளது. இந்த அவசரத்தை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும், டெல்லிக்கும் சென்று காட்டியிருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணமாக இருக்கலாம். இந்த வழக்கில் இடைக்கால தடையை நீக்க கோரி வருகிற (மே மாதம்) 2-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்பதற்காகத்தான் லட்சக்கணக்கான விவசாயிகளாகிய நாங்கள் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறோம். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. இப்படியெல்லாம் செயல்படுகிற அரசு மக்கள் நலனிலும், விவசாயிகளின் நலனிலும் எப்படி அக்கறை காட்ட முடியும் என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: