திங்கள், 30 ஏப்ரல், 2018

போலீஸ் தேர்வுக்கு வந்தவர்கள் மார்பில் சாதி முத்திரை - ராகுல், மாயாவதி கண்டனம்


போலீஸ் தேர்வுக்கு வந்தவர்கள் மார்பில் சாதி முத்திரை - ராகுல், மாயாவதி கண்டனம்maalaimalar: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் போலீஸ் தேர்வுக்கு வந்தவர்கள் மார்பில் எஸ்.சி., எஸ்.டி. என்று சாதி முத்திரை குத்தி கேவலப்படுத்திய சம்பவத்துக்கு ராகுல் காந்தி, மாயாவதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி: மத்தியப்பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் காவல்துறைக்கு ஆள்சேர்க்கும் முகாமில் மருத்துவ தேர்வு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். மருத்துவ பரிசோதனையின்போது வரிசையில் நின்ற இளைஞர்கள் எந்த பிரிவினர் என்பதை குறிக்கும் வகையில் எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என அவர்கள் மார்பின்மீது ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது,  கடும் விமர்சனங்களுடன் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது. போலீஸ் வேலையில் சேர வந்தவர்களை தாழ்த்தப்பட்ட சாதியினர் என்ற அடையாள முத்திரையுடன் நிற்க வைத்த இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. அரசின் சாதிய மனப்போக்கு இந்த நாட்டின் இதயத்தை பிளந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த செயலின் மூலம் நாட்டின் அரசியலமைப்பின்மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்ட ராகுல், இதுதான் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-சின் சிந்தனை, இதுபோன்ற சிந்தனைதான் சில வேளைகளில் தலித் மக்களின் கழுத்தில் பாத்திரங்களையும், துடைப்பத்தையும் கட்டி, அவர்களை கோயில்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. இந்த சிந்தனையை நாம் முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல், உத்தரபிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி,
இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பெரிய தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் லாபங்களுக்காக தலித் மக்கள்மீது பா.ஜ.க. அரசு கொண்டுள்ள புதிய காதலை வெளிப்படுத்த இந்த சம்பவம் ஒரு புதிய உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலித்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான இதுபோன்ற சாதியக் கொடுமைகளால்தான் குஜராத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் நடந்ததைப்போல் அவர்கள் வேறு மதத்துக்கு மாற வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

நாட்டில் வேறெங்கும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாத வகையில் இந்த கிரிமினல் குற்றத்துக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: