தேவையற்றது. தன்னுடைய சமீபத்திய எல்லா உரையாடல்களிலும் சீமான் குறித்து ஏதாவது ஒன்றை பதிய வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சீமான் குறித்து வைகோ மனம் பாதிப்படைய காரணம் இருக்கிறது. வைகோவின் அடிப்படை அரசியல் தகுதியையே சீமான் வளர்க்கும் அரசியல் கேள்விக்குள்ளாக்குகிறது. சீமானின் அரசியலின்படி எத்தனை காலம் வாழ்ந்து வந்தாலும் பிற மாநிலத்தில் இருப்புள்ள சாதியினர் தமிழ்நாட்டில் அந்நியராக தான் கருதப்படுவர். வைகோ தெலுங்கு பேசும் ஒரு சாதியை சேர்ந்தவர் என்றாலும் அவருடையது தெலுங்கர் நலன் காக்கும் கட்சி என்றோ, தெலுங்கர்கள் ஆதரிக்கும் கட்சி என்றோ கூட சொல்ல முடியாது. ஆனால் விஜயகாந்தின் தேமுதிகவில் கணிசமாக தெலுங்கர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் ஒரு ஜெராக்ஸ் கடைக்கு ஒருமுறை சென்ற போது அந்த கடையின் உரிமையாளரும், அவரது நண்பரும் தெலுங்கில் தேமுதிகவின் ஒரு படிவத்தை வைத்து கொண்டு பேசி கொண்டிருந்தனர். அதே போன்று ஒரு முறை ஸ்டுடியோவுக்கு சென்றிருந்தேன். அங்கு தொங்கவிடப்பட்ட ஒரு ஃபோட்டோவில் அந்த கடையின் உரிமையாளரும், விஜயகாந்தும் இணைந்து நின்றிருந்தார்கள். ஒரு சிறு உந்துதலில் நீங்கள் தெலுங்கு பேசுபவரா என்று கேட்டேன். அவர் தனது தெலுங்கு பின்புலத்தை உரைக்க தொடங்கினார். அதே போன்று விஜயகாந்தை ஆதரிக்கும் வேறு சிலரையும் பார்த்துள்ளேன். அவர்கள் தெலுங்கு பேசியது வியப்பாக இருந்தது.
வைகோவையும் தெலுங்கு பேசும் மக்கள் தேர்தலில் ஆதரித்திருக்கலாம். ஆனால் அவருடைய அரசியல் தெலுங்கர்களை ஒருங்கிணைக்கும் அரசியல் அல்ல. சீமானும் வைகோவும் முரண்பட்ட அரசியல் நலனை கொண்டவர்கள். இருவரும் உணர்ச்சி மிகுதியான இளைஞர்களை ஈர்ப்பதில் போட்டி போடுபவர்கள். இது தான் அடிப்படை முரண். வைகோ இருக்கும் வரை தமிழ்–தமிழர்–ஈழம் என்று பேசி இளைஞர்களை கவர முடியாது என்று சீமான் கருதியிருக்கக்கூடும். அதற்கு சீமான் வைத்த செக் தான் வைகோவை வேற்றினத்தவராக காட்ட முயற்சித்தது. வைகோவின் அரசியலுக்கும் சீமானின் அரசியலுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. வைகோ திராவிட இயக்கத்தின் பிரச்சாரம் மற்றும் உரையாடலில் அசாத்திய நம்பிக்கை கொண்டவராக மதிமுகவை தொடங்கினார். நாஞ்சில் சம்பத் மதிமுகவின் தொடக்க காலத்தில் பெற்றிருந்த முக்கியத்துவம் ஒரு உரைகல். சீமான் மறைமுகமாக சாதிய அணிதிரட்டலை ஊக்குவிப்பவர். ஆனால் அதில் அவர் சிறிதும் வெற்றி பெறவில்லை. இனியும் வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. சீமான் ஒரு பழைய கட்டமைப்பை புதுப்பிக்க வந்தவர். பா.ஜ.க இருக்கும் போது இந்து மக்கள் கட்சியின் செல்வாக்கு வரம்புக்கு உட்பட்டது தானே.
சீமானின் புரட்சிகரம் என்னவென்றால் கிழவியை சிங்காரித்து இளம்யுவதியாக காட்டுவது. பெண் பெயரில் இயங்கும் ஒரு ஃபேக் ஐ.டி பேசுகின்ற ஃபெமினிசம் போன்ற செயற்கை தன்மை கொண்டது. அதற்கு ஒரு சில இளைஞர்கள் மட்டுமே ஈர்க்கப்படுவர். தமிழ்நாட்டில் அசலான புரட்சிகரம் வலுவாக வேர் விட்டிருக்கிறது. பெரியாரியம், தீவிர மார்க்சியம் ஆகியவை உண்மையான உணர்வுடன் செயல்பட முன்வரும் இளைஞர்களை ஈர்க்க எப்போதும் காத்து கொண்டிருக்கிறது. எனவே திராவிட கட்சிகளிடம் அடைந்த ‘ஏமாற்றம்’ அல்லது ‘களைப்பு’ சீமானை தேர்வு செய்வதாக எப்போதும் இருக்காது. இதனை சீமான் உணர்ந்து இருக்கிறார் என்று தான் தோன்றுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பேசியது போல் அவர் இப்போது பேசுவதில்லை. பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது அவரது எதிர்வினையை கவனியுங்கள். பாரிசாலனுக்கு மேடை கிடைக்காததால் தானே வீடியோ போட்டு புலம்புகிறான். சீமானுடன் உரையாடும் ஊடகவியலாளர்கள் அவரது இனவரையறை கொள்கையை சுற்றியே கேள்விகள் கேட்டு அவரை பைத்தியமாக்குகிறார்கள். ஓரளவுக்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கிறார். சமூக வலைதளங்களில் அது நகைப்புக்கு இடமாகிறது. சீமான் கட்சி நபர் ஒருவரின் மீம்சால் பாதிக்கப்பட்டு தனது மருமகன் மரணித்தார் என்று வைகோ குற்றம்சாட்டிய போது ‘எனக்கு வராத மீம்சா’ என்று சீமான் ஒரு உரையில் கேட்டார். அது உண்மை தான். சீமானை மிகவும் தரமாக ஓட்டும் மீம்ஸ்கள் முகநூலில் வருகின்றன. வைகோ அவற்றை எல்லாம் பார்ப்பதில்லை போலும். கலைஞர் தன்னை புதுப்பித்து கொண்டது போல் வைகோ இல்லை. இன்னமும் பழைய மனிதராகவே இருக்கிறார். கட்சிக்காரர்கள் மத்தியில் அவரது ஒரு உரையில் அவர்களின் சமூகவலைதள ஆர்வத்தை குறைகூறினார். ஒரு வேளை சில மணிநேரம் தினமும் அவர் எஃப்.பி.யில் இருந்தால் அவர் புது நம்பிக்கை பெறலாம்.
சீமான் தன்னை பின்பற்றுகிறவர்களிடம் வெற்று கனவுகளை விதைத்து கனவுலகவாசிகளாக சுற்ற விட்டிருக்கிறார். அவருடைய சினிமா இயக்குநர் பின்புலம் நன்றாக கைகொடுக்கிறது. இதனை தமிழ்நாட்டில் வாழும் மக்கள் நம்புவதை விடவும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சிலர் நம்புவது வேடிக்கையானது. தனது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மனிதன் தனது அடையாளம் பற்றி கவலைப்பட தொடங்குகிறான். எனவே கற்பனைகளை ஏற்படுத்தி கொள்கிறான். நாடார் என்றால் நாடத்தகாதவர் என்று இந்து மதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பழைய நிலைமையை மறந்து நாடார் என்றால் நாடாண்டவர் என்று புது கதையை நம்ப தொடங்குகிறான். இந்த கற்பனையில் வாழ்வியல் கூறுகளோ, மதிப்பீடுகளோ இருப்பதில்லை. அதனால் தான் விவாதிக்க தொடங்கும் போதே கெட்ட வார்த்தைகளை கொண்டு எதிர்கொள்கிறார்கள். சீமான் தனது அரசியலின் வீச்செல்லையை இன்னும் கடுமையாக உணரக்கூடிய காலம் வரலாம். அவரது அரசியல் வெற்றி பெற வேண்டுமானால் தமிழர்கள் அனைவரும் முதலில் தமிழகத்திலிருந்து வெளியேறி துபாயிலோ, அபுதாபியிலோ குடியேற வேண்டும். அப்போது தான் சீமானின் கற்பனைகள் குறித்து தமிழர்கள் தீவிரமாக சிந்திக்க தொடங்குவர். அது சாத்தியமின்மை பற்றிய அறிவு வரும் போது தனது இப்போதைய அரசியலை அவர் கைவிடவும் கூடும். எனவே வைகோ தனது ஆற்றலை வேறு சிறந்த விசயங்களுக்கு பயன்படுத்துவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக