மின்னம்பலம்: திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். ‘தினகரன் அதிமுகவை வழிநடத்த சரியான தலைவராக இருப்பார் என நினைத்து ஏமாந்துவிட்டோம். அவர் சரியான தலைவர் இல்லை. இன்னும் இரட்டை இலையை மீட்போம் என சொல்லிக்கொண்டிருப்பது எல்லாம் முட்டாள்தனம். சின்னம்மா சிறைக்குப் போகும்போது எடப்பாடியைத்தான் முதல்வராக நியமித்துவிட்டுப் போனார். அவரை எதற்காக எதிர்க்க வேண்டும்?’ எனப் போட்டு உடைத்தார் ஜெய் ஆனந்த்.
இது ஒரு பக்கம் அப்படியே இருக்கட்டும். சசிகலாவின் உடன் பிறந்தவர்கள் சுந்தரவதனம், ஜெயராமன், வினோதகன், வனிதாமணி, திவாகரன் என மொத்தம் சசிகலாவுடன் சேர்த்து 6 பேர். சுந்தரவதனத்தின் வாரிசுகள்தான் அனுராதாவும், டாக்டர் வெங்கடேஷும். வனிதாமணியின் மகன்தான் டிடிவி தினகரன். சொந்த மாமா மகளான அனுராதாவைத்தான் திருமணம் செய்திருக்கிறார் தினகரன். தினகரனுக்கு சின்ன மாமனார் திவாகரன். ஆனாலும், திவாகரனையோ அவரது குடும்பத்தையோ கட்சிக்குள் சேர்க்காமல் தள்ளியே வைத்திருந்தார் தினகரன்.
இந்த சூழ்நிலையில், நடராஜன் மறைந்த சமயத்தில் சிறையிலிருந்து பரோலில் வந்த சசிகலாவிடம், திவாகரன் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
‘ஜெய் ஆனந்த்க்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்கிறேன். கையில வெண்ணெய்யை வெச்சுகிட்டு எதுக்கு நெய்க்கு அலையணும். நம்ம தினகரன் மகள் ஜெய் ஹரிணியை கேட்கலாம்னு நினைக்கிறேன்..’ என்று திவாகரன் சொல்லியிருக்கிறார். அதற்கு, ‘நீ கேட்டுப் பாரு.. கொடுத்தா பண்ணிக்கோ. நான் சொல்லி எதும் நடக்கப் போறது இல்ல...’ என்று சொல்லி நழுவிக்கொண்டாராம் சசிகலா. அதன் பிறகு, திவாகரன் ஒரு நாள் சென்னைக்கு வந்திருக்கிறார். தினகரனை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறார்.
‘ஜெய் ஆனந்துக்கு உங்க மகளை கேட்டு வந்திருக்கேன்..’ என வெளிப்படையாகவே கேட்டாராம். அதற்கு தினகரனோ, ‘இப்போ என்ன மாமா அவ கல்யாணத்துக்கு அவசரம். அவ இன்னும் படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கா. அப்புறம் பேசிக்கலாம்...’ என்று பிடிகொடுக்காமல் பேசினாராம். அதற்கு திவாகரன், ‘அதனால என்ன... கல்யாணம் பண்ணினால் படிக்க முடியாதா? நானே படிக்க வெச்சுக்குறேன்..’ என்று கேட்க, ‘அது சரியா வராது மாமா... கொஞ்ச நாள் போகட்டும். இப்போ கல்யாண பேச்சு எடுக்க வேண்டாம்’ என சொல்லிவிட்டாராம். கடைசியாக, ‘சரி கல்யாணம் நீங்க சொல்ற சமயத்துலயே வெச்சுக்கலாம். இப்போதைக்கு தாம்பூலம் மாத்தி உறுதி பண்ணிக்கலாம்...’ என்று கேட்டாராம் திவாகரன். ஆனால் அதற்கு தினகரன், ‘ பொண்ணு சம்மதம் இல்லாமல் என்னால எதுவும் செய்ய முடியாது. கல்யாணம் பேசுற சமயத்துல அதைப் பார்த்துக்கலாம். இப்போ எதுவும் வேண்டாம்...’ எனத் தவிர்த்திருக்கிறார்.
ஏற்கெனவே திவாகரன் தன் மகன் ஜெய் ஆனந்துக்குக் கட்சியில் பொறுப்பு கேட்டார். அதைக் தினகரன் கொடுக்கவில்லை. ஜெயா டிவியில் பொறுப்பு கேட்டார். அதுவும் கொடுக்கவில்லை. கடைசியில் பெண்ணும் கேட்டுவிட்டார் திவாகரன். அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை தினகரன். இப்படியாக போன மோதல்தான், கடைசியில் அவரைத் தனி அணி தொடங்க வைத்துவிட்டது. அந்தக் கோபத்தைத்தான் மாப்பிள்ளை பையன் ஜெய் ஆனந்த் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டியிருக்கிறார்.
சசிகலா குடும்பத்து வகையறாக்களைப் பொறுத்தவரை சொந்தங்களுக்குள்ளேயே பெண் கொடுத்துப் பெண் எடுப்பதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் திவாகரனும் உரிமையோடு பெண் கேட்டுப் போயிருக்கிறார். ஆனால், மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், அதை வைத்துக்கொண்டு அப்பாவும், மகனும் அரசியல் செய்வார்கள் என்பதால்தான் தினகரன் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில். எப்படியோ, பெண் கொடுக்கவில்லை என்பதும் அதிமுகவில் தனி அணி உருவாக ஒரு காரணமாக அமைந்துவிட்டது” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி எப்படியெல்லாமோ உடைந்து இப்போது பொண்ணு கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு அணி உருவாகியிருப்பதை என்னவென்று சொல்வது. கணவன் - மனைவி சண்டைக்கெல்லாம் ஒரு தனிக் கட்சியா என தீபாவையும் மாதவனையும் கிண்டல் செய்யாதவர்கள் இல்லை. பொண்ணு கொடுக்காததுக்கே கட்சி ஆரம்பிக்கும் போது, புருஷன் - பொண்டாட்டி சண்டைக்கு கட்சி ஆரம்பிக்கக் கூடாதா என இனி மாதவன் கேட்டாலும் ஆச்சரியமில்லை!” என்ற கமென்ட்டைத் தட்டிவிட்டு சைன் அவுட் ஆனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக