Sivasankaran Saravanan : 2ஜி_அவிழும்_உண்மைகள்
என்ற புத்தகத்தின் முன்னுரையை படிக்கும்போதே ஆ.ராசா என்ற மனிதரின் நெஞ்சுரமும், போராட்டக்குணமும், உண்மை மீது அவருக்கு இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையும், அதே சமயம் நிறுவனங்கள் நினைத்தால் எப்படி ஒரு தனி மனிதன் மீது தொடர் தாக்குதல் நடத்தமுடியும் என்பதையும்
தெரிந்துகொள்ளமுடிகிறது!
தன்னைப்பற்றிய அறிமுகமாக இப்படித் தொடங்குகிறார் :
பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியைக் கொண்ட ஓர் இந்திய கிராமத்து இளைஞனாக, ஆனாலும், என் மீதான மரபுத்தளைகளை அறுத்துக்கொண்டு, காலம் போற்றும் நல்ல விழுமியங்கள், நம்பிக்கைகள், எளிமை ஆகிய அனைத்தையும் பெற்று அமைந்ததே என் வாழ்க்கை!
என்னோடு அமைச்சரவையில்
இடம்பெற்றிருந்த பல பெரிய மனிதர்களும் கூட அவர்கள் வரிசையில் நானும்
அமர்ந்ததை ஒரு புதிய கண்ணோட்டத்திற்கான வாயில் என்றே ஏற்கத்தயாராக
இருப்பார்கள். என் மூச்சுக்காற்றாக இருந்த என் அலுவல் பண்புமுறை,
முழுமையான ஈடுபாடு ஆகியவற்றால் அத்தகைய சூழல் ஏற்பட்டிருக்கவேண்டும்!2ஜி வழக்கின் குற்றச்சாட்டை ஆ.ராசா இரு வேறு உதாரணங்களை சொல்லி விளக்குகிறார்!
காந்தியும் திலகரும் ஒரே நோக்கத்திற்காக போராடினாலும் திலகர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது! திலகர் தான் பேசியதும் எழுதியதும் சட்டப்படி தவறல்ல என வாதாடினார்! ஆனாலும் சட்ட விதிகளின் படி (Rule of law) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது!
காந்தி தான் சட்டப்படி செய்வது தவறு தான் என்பதை உணர்ந்தாலும் இயற்கை சட்டப்படி (Natural law) தான் சரியானதையே செய்வதாக நம்பினார்!
ஆனால் 2ஜி குற்றச்சாட்டின் ஆரம்ப கட்டத்தில் சட்டத்தின் ஆட்சியும் இல்லாமல், இயற்கை சட்டப்படியும் இல்லாமல் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல சட்ட நிறுவனங்களே முடிவுகளை எடுக்க முற்பட்டது, நாகரிகமான ஆரோக்கிய சட்ட முறைக்கு (Civilized or healthy jurisprudence) முற்றிலும் எதிரானது என்கிறார்!
ஒரு நீதி பரிபாலன அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை ஒரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியின் வார்த்தைகளிலிருந்தே எடுத்துக்காட்டுகிறார் ஆ.ராசா :
ஒரு நீதிபதியின் பங்களிப்பு விளையாட்டுக் களத்து நடுவர் போன்றது. பந்து களத்தை விட்டு வெளியே போகும்போதுதான் நீதிக்கான விசில் ஊதப்படவேண்டும். ஆனால் மீண்டும் ஆட்டம் துவங்கும்போது அவர் விளையாட்டில் பங்கெடுக்கவோ அல்லது எப்படி விளையாடவேண்டும் என்று சொல்லவோ கூடாது. நீதிக்கான விசில் எச்சரிக்கையோடும் உரிய நோக்கத்தோடும் பயன்படுத்தவேண்டும்! என்ற நீதிபதி ஏஎஸ் ஆனந்த் வார்த்தைகளை எடுத்தாள்கிறார்!
ஒட்டுமொத்த தேசமே ஆ.ராசா என்ற தனி மனிதனை நோக்கி கை நீட்டிய அந்த நிலையை ஒரு பிரெஞ்சு வரலாற்று நாவலின் உதாரணத்தோடு விளக்குகிறார் ஆ.ராசா!
பேரறிஞர் அண்ணாவின் கடிதம் மூலம் எமிலி ஜோலா என்ற வரலாற்று நாவலாசிரியரை அறிந்துகொண்டேன்! எமிலி ஜோலா மீது எனக்கிருந்த காதல் வார்த்தை வசீகரத்துக்காக மட்டுமல்ல மாறாக அதிலிருந்த சத்தியத்திற்காக!
பிரான்ஸ் படை ரகசியங்களை ஜெர்மனிக்கு விற்றுவிட்டதாக தண்டிக்கப்பட்டான் அந்நாட்டு தளபதி டிரைஃபஸ்! டிரைஃபஸ் மீது குற்றஞ்சாட்டிய அதிகாரிகள் மீதே குற்றஞ்சாட்டி எமிலி ஜோலா ஒரு கடிதத்தை வெளியிட்டு டிரைஃபஸ் குற்றமற்றவன் என வாதாடினார்!
டிரைஃபஸ் மீது போடப்பட்ட வழக்க் திட்டமிட்ட சதி என எமிலி எழுதியதற்காக எமிலி மீது அவதூறு வழக்கு போடப்பட்டது! இருப்பினும் அந்த வழக்கை டிரைஃபஸ் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்!
மேல் முறையீட்டு வழக்கில் டிரைஃபஸ் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்படுகிறான். ஆனால் எமிலி அவதூறாக எழுதியதாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எமிலி இங்கிலாந்தில் தஞ்சமடைகிறார்!
"பொய்மைக்கும் அநீதிக்கும் என் நாடு பலியாகக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்! அதனால் நான் தண்டிக்கப்படலாம் ஆனால் நாட்டின் மாண்பை காக்க உதவியதற்காக இந்நாடே எனக்கு நன்றி தெரிவிக்கிற நாள் நிச்சயம் வரும் " என்றார் எமிலி
எமிலி ஜோலா தஞ்சமடைந்ததை அறிஞர் அண்ணா எழுதியபோது "கோழைப்பட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கும் கூட வீரம் வேண்டும்! " என எழுதினார்!
15 மாதம் சிறையிலிருந்த ஆ.ராசா எமிலி ஜோலா போல இன்று நம் முன்னால் உயர்ந்து நிற்கிறார்!
வாழ்க்கையில் பெரிய பிரச்சினைகளில் சிக்கி சோர்ந்துபோய் இனி அவ்வளவுதான் எல்லாம் போச்சு என முடங்கிப்போகக்கூடிய நிலையில் இருப்பவர்கள் ஆ.ராசா வின் 2ஜி அவிழும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்! சத்தியம் என்ற சிறு நம்பிக்கை ஒளிக்கீற்றை வைத்துக்கொண்டு அவர் எப்படி இவ்வளவு பெரிய சதிவலையை அறுத்து அதிலிருந்து மீண்டார் என்பது நம் நிகழ்கால சாதனை சரித்திரம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக