புதன், 4 ஏப்ரல், 2018

காவிரி ..முழு அடைப்புக்குப் பெருகும் ஆதரவு!

முழு அடைப்புக்குப் பெருகும் ஆதரவு!மின்னம்பலம்: திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நாளை நடத்தவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக நாளை (5ஆம் தேதி) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இதற்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு தரப்பிடமும் ஆதரவு கோரியிருந்தார். இதையடுத்து காவிரி உரிமைகளைப் பெறுவதற்கு அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி முழு அடைப்புக்கு பாமக ஆதரவு தெரிவித்தது.

“5ஆம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பங்கேற்கும். போராட்டத்துக்குத் தமிழக விவசாயிகளும் இளைஞர்களும் மற்றும் பொதுமக்களும் ஆதரவு தந்து போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக, பாஜக, தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்பில் தொமுச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் கலந்துகொள்கின்றன. இதனால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பெட்ரோல் பங்குகள் சங்கமும் ஆதரவு தெரிவித்து பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. முழு அடைப்பு போராட்டத்துக்கு மணல் லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ராமசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார்.
முழு அடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: