வியாழன், 5 ஏப்ரல், 2018

தமிழகம் முழுதும் 144... :கடைசிக் கட்ட ஆலோசனை!

மின்னம்பலம்:
தமிழகம் முழுதும் 144...  :கடைசிக் கட்ட ஆலோசனை!காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு தட்டிக்கழித்துவருவதன் விளைவாக தமிழகம் முழுதும் போராட்டக் களமாகியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது. அந்தக் கூட்டம் முடிந்த நிமிடத்திலிருந்து இன்று ஏப்ரல் 4ஆம் தேதிவரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில்தான் தமிழக முதல்வருக்கு இன்று முற்பகல் வாக்கில் டெல்லி தரப்பிடமிருந்து வந்த தகவலும், அதன் பின் முதல்வர் மேற்கொண்ட ஆலோசனைகளும், இன்று இரவு முதல்வரை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதும் அதிகார வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி நாம் விசாரணை நடத்திய தகவல்களின் தொகுப்பு இதோ...

தலைமை நீதிபதியின் வேண்டுகோள்
முதல்வருக்கு நெருக்கமானவரும் டெல்லியோடு தொடர்பில் இருப்பவருமான அந்த முக்கியஸ்தர் தரப்பில் இருந்து இன்று காலை தமிழக முதல்வருக்கு ஒரு முக்கியமான தகவல் சொல்லி அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, ‘தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆளுங்கட்சியான நீங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவிட்டீர்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் ஓயாமல் பல இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் என்று போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். திமுக தலைமையில் பல எதிர்க்கட்சிகள் நாளை (ஏப்ரல் 5) நடத்த இருக்கும் முழு அடைப்பின்போது அரசியல் கட்சிகளுக்கு சம்பந்தப்படாத சிலரும் சில அசம்பாவிதங்களை நடத்தலாம் என்று மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதனால், தமிழக அரசு இப்போது சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதனால் இன்று இரவு 12 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவினை அமல்படுத்தலாமா என்று அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி ஒரு முடிவெடுங்கள்’ என்பதுதான் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்ட செய்தி. இதோடு, இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவே தமிழக அரசுக்கு காவிரி தண்ணீர் பற்றி உத்தரவாதம் அளித்திருப்பது பற்றி குறிப்பிட்ட டெல்லி தரப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்குப் பின்னும் தமிழகத்தில் போராட்டம் நடப்பது தேவைதானா என்றும் கேட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் 144 யோசனை முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுக்க 144 என்பது ஏற்கனவே 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அமல்படுத்தப்பட்டது என புகார் கிளம்பியது. ஆனால் அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஏதுவாகத்தான் அப்போது இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. தேவர் ஜெயந்தி போன்ற சமயங்களில் தென்மாவட்டங்களில் 144 பிறப்பிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம்கூட ராம ராஜ்ய ரத யாத்திரைக்காக நெல்லை மாவட்டத்தில் 144 அமல்படுத்தப்பட்டது. இதை முன்னுதாரணம் காட்டிதான் இப்போதும் 144 தடை உத்தரவு போடலாம் என்று தமிழகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறது டெல்லி.
ஆளும் தரப்பின் ரியாக்‌ஷன்
இந்தத் தகவல் முதல்வரின் காதுகளுக்கு வந்துசேர்ந்ததும் லேசாக தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். ’நேற்று நாம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி முடித்த நிலையில் நாளை எதிர்க்கட்சியினரின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தடை விதித்தால் ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியத்தில் பெயர் கெட்டுப் போய் கிடக்கும் அரசுக்கு மேலும் எதிர்ப்பு அதிகமாகும்’ என்று முதல்வருக்கு அவரது கட்சி நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும் இதுபற்றி வழக்கறிஞரான மனோஜ் பாண்டியன் வட்டாரத்திலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது, ‘144 தடை உத்தரவு போட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தமிழக அரசே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது போல் ஆகிவிடும். மராட்டியத்தில் ஜனவரி மாதம் பீம் சேனா பிரச்சினையால் வன்முறை தலைவிரித்தாடியது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் நேற்று கூட வன்கொடுமைத் தடுப்பு சட்டத் திருத்தம் தொடர்பான பந்த்தில் வன்முறை வெடித்தது. அதையெல்லாம் ஒப்பிடும்போது தமிழகத்தில் நடப்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இங்கே அரசியல் கட்சிகள் அடிக்கடி சாலையை மறிப்பதுதான் இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கிறது. இதையும் தடைசெய்தால் தமிழக அரசுக்கு அவப்பெயர்தான் ஏற்படும். எனவே அரசியல் ரீதியாகவும் சரி, சட்ட ரீதியாகவும் சரி 144 க்கு அவசியமே இல்லை’ என்று அரசுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரிகள் டென்ஷன்!
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மத்திய அரசு அலுவலகங்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதும், டோல்கேட்டுகள் சூறையாடப்படுவதுமான சம்பவங்களால் அரசியல் தலைவர்களைவிட போலீஸ் அதிகாரிகள்தான் அதிகமான டென்ஷனில் இருக்கிறார்கள். எந்தெந்த பகுதிகளில் மத்திய அரசு அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன, அந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான காவல் துறை அதிகாரி யார் என்பது குறித்து மத்திய உளவுத் துறை தெளிவான ரிப்போர்ட் அனுப்பிவிடுவதுதான் அவர்களின் டென்ஷனுக்குக் காரணம். இந்நிலையில், நக்சலைட், தீவிரவாதிகள் விவகாரங்களைக் கவனிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு கடந்த சில நாட்களாக கூடுதல் கண்காணிப்பு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஆளுநரை சந்திக்கும் முதல்வர்
இந்த நிலையில்தான் இன்று இரவு ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கத் தயாரானார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பின்போது 144 பிரிவை அமல்படுத்துவதில் இருக்கும் சங்கடங்களை ஆளுநரிடம் முதல்வர் எடுத்துரைப்பார் என்றும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிடுவார் என்றும் ஆளுங்கட்சி வட்டாரங்களில் சொல்கிறார்கள்.இந்நிலையில் இன்று மாலை ஆறு மணியளவில், அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அலுவலகத்திலேயே இருக்கச் சொல்லி சென்னையில் இருந்து உத்தரவு சென்றுள்ளதாம்.
நாளை நடக்க இருக்கும் முழு அடைப்பு அமைதியாக நடக்க வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு அனைத்து தரப்பினரின் விருப்பமும்!

கருத்துகள் இல்லை: