புதன், 4 ஏப்ரல், 2018

தி.நகரில் இளைஞரைத் தாக்கிய போலீஸ் ,, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம்

tamilthehindu : தி.நகரில் இளைஞரும் அவரது தாயாரும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த புகாரைப் பெற்ற தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து விளக்கம் அளிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை வடபழனியில் வசிப்பவர் பிரகாஷ் (21) தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இவரது தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். சகோதரி படித்து வருகிறார்.

இந்நிலையில் தனது வீட்டுக்கு சில பொருட்களை வாங்க தனது தாயார் மற்றும் சகோதரியுடன் நேற்று முன் தினம் தி.நகருக்கு வந்தார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது தாய், சகோதரியுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது போக்குவரத்து போலீஸார் அவர்களை மடக்கியுள்ளனர்.
'ஏன் ஹெல்மட் போடவில்லை' என்று போக்குவரத்து காவல் அதிகாரிகள் கேட்டனர். பின்னர், 'ஏன் மூன்று பேர் ஒரே வாகனத்தில் ஏன் வந்தீர்கள்' என்று போலீஸார் கேட்டனர். 'வசதி இல்லை என்பதால் மோட்டார் சைக்கிளில் வருகிறோம்' என்று பிரகாஷ் கூறியுள்ளார்.
'வசதி இல்லை என்றால் எதற்கு தி.நகருக்கு ஷாப்பிங் வருகிறீர்கள், மூன்று பேர் ஆட்டோவில் வர வேண்டியது தானே?' என்று பிரகாஷிடம் போலீஸ் ஆர்.எஸ்.ஐ ரமேஷ் கேட்டுள்ளார். அப்போது பிரகாஷுக்கும் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சமாதானம் பேசிய அவரது தாயாரையும், தங்கையையும் போலீஸ் அதிகாரிகள் ஜெயராமன், ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேர் தள்ளிவிட பிரகாஷ் போலீஸாருடன் வாக்குவத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் முன்னிலையில் காவல் அதிகாரிகள் 3 பேர் அந்த இளைஞரை கம்பத்தில் பிடித்து வைத்து கைகளை முறுக்கும் காட்சிகளும், அவரைத் தாக்கும் காட்சிகளும் அப்போது பிரகாஷின் தாயாரும், சகோதரியும் அவரை விட்டுவிடும்படி கதறும் காட்சியும் வைரலானது.
பிரகாஷின் தாயார் சங்கீதா, ''தான் எவ்வளவோ கெஞ்சியும் போலீஸார் என் மகனை விடவில்லை, கெஞ்சி அழுது விட்டுவிடும் படி கேட்ட தன்னையும் தாக்கினார் ஒரு அதிகாரி'' என்று கூறினார். அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகளும் நடந்தன.
பின்னர் நேற்றிரவு அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 அதிகாரிகள் இளைஞர் பிரகாஷை இழுத்துச்செல்வதும், அவரது தாயார் சங்கீதா அவர்களிடம் கெஞ்சுவதும் பின்னர் அதில் ஒரு அதிகாரி அவரைப் பிடித்து தடுத்து தள்ளிவிடும் காட்சிகளை கண்ட பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தாக்கப்பட்ட இளைஞர் பிரகாஷ் மீது  294 (b), 332, 427 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு இது குறித்து 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதே போல் மாநில மனித உரிமை ஆணையமும் பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்து தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இது குறித்து வரும் 18-ம் தேதி இளைஞர் பிரகாஷை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் மற்றும் ஜெயராமன் இருவரும் நேரில் விசாரணையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: