ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சுங்க சாவடிகளை அடித்து நொறுக்கி.. பணம் செலுத்தக்கூடாது என்று போராட்டம்... வேல்முருகன் தலைமையில்


விகடன் -ஜெ.அன்பரசன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடுவிதித்திருந்தது. ஆனால், அந்த கெடு கடந்த மார்ச் 29 ம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இதனை கண்டித்து கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பல கட்சிகளின் சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளும் அ.தி.மு.க.வை தவிர.... இந்தநிலையில் இன்று சுங்கச்சாவடியில் வரி செலுத்தாத போராட்டத்தை நடத்துவதாக 'தமிழக வாழ்வுரிமை கட்சியினர்' முன்னரே அறிவித்திருந்தனர். அதன்படியே போராட்டமும் நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் அவரது தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போராட்டம் நடைபெற்ற போது சுங்கச்சாவடி ஊழியர்கள் வலுகட்டாயமாக வரி செலுத்த சொல்லியதை தொடர்ந்து அந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.

இதுபற்றி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகனிடம் பேசியபோது "உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வேண்டுமென்றே ஆறு வார காலம் தாழ்த்தி தமிழர்களை ஏமாற்றிவிட்டது. காவிரி மேலாண்மை அமைத்தால் கர்நாடகாவில் பெரிய போராட்டம், கலவரம் வெடிக்கும், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்ப்படும் என்று சொல்லி தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடக மக்களை தூண்டி விடுவதும், 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்காமல், மாநில காவிரி கமிட்டி அமைக்கலாமா என மத்திய் அரசு செயலப்படு வருகிறது. மொத்தமாக தமிழ்நாட்டை அழித்து சுடுகாடாய் மாற்றும் வேலையைதான் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு ஈடுப்பட்டு வருகிறது. கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் போன்ற போன்ற மாவட்டங்களில் இருக்கக்கூடிய கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இங்கிருக்கும் கனிம வளங்கள் எடுக்கப்பட்டுவிட்டால் மொத்த தமிழ்நாடும் பாலைவனமாய் மாறி மக்கள் வாழவே முடியாத சுடுகாடாய் மாறிவிடும். இந்த இடங்களை கையகப்படுத்த வேண்டுமானால் முதலில் இங்கு நடக்கும் விவசாயங்க்களை ஒழிக்க வேண்டும். விவசாயத்தை ஒழிக்க ஒரே வழி காவிரி நீரை தடுப்பது. காவிரி நீரை தடுத்துவிட்டால் விவசாயம் நடைப்பெறாது. அதன்பிறகு கனிம வளங்களை கொள்ளையடிக்கலாம். இதுதான் மோடி அரசின் திட்டம்.
அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொரு இந்தியர்களும் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். தூக்கு தண்டனை மற்றும் மரண தண்டனை கொடுத்தாலும் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அப்பிடியிருக்க உச்சநீதி மன்ற தீர்ப்பை ஒரு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. கர்நாடக தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் ஒரே காரணத்துக்காக தமிழகத்தை காவிரி விவகாரத்தில் தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது மோடி அரசு. காவரி பிரச்னை மட்டுமில்லை. சமீப காலமாக மத்திய அரசு தமிழகத்துக்கு செய்துவரும் துரோகங்களை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. தமிழகத்துக்கு எந்த நல்லதும் செய்யமாட்டோம். மாறாக தமிழகத்தை அழிக்கும் வேலையை மட்டும் தான் செய்வோம் என்று மத்திய அரசு சொல்லிவந்தால்... அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு எதற்காக நாம் வரிப்பணம் செலுத்த வேண்டும். இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்கிறோம் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்திலிருக்கும் தமிழர்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த கூடாது.
போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
சுங்கச்சாவடியின் மூலம்தான் மத்திய அரசுக்கு பெரும் பணத்தை வரியாக அழுதுக்கொண்டிருக்கிறோம். அதற்கு கடிவாளம் கட்டவே இன்று(01-04-2018) தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தக்கூடாது என்று போராட்ட அறிவிப்பு விடுத்திருந்தோம். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாழ்வுரிமை கட்சியினர் போராடினார்கள். சுங்கச்சாவடி வழியாக செல்லும் வானகங்கள் பணம் செலுத்தக்கூடாது என்று சொல்லிவிட்டோம். அப்படியே போராட்டம் நடைபெற்று வந்தது. உளுந்தூர்பேட்டையில் தொண்டர்களுடன் நானும் போராட்டம் செய்துக்கொண்டிருந்தேன். வாகனங்களுக்கு சாவடியை திறந்துவிட வேண்டும் என்று சொன்னேன். சுங்கச்சாவடி ஊழியர்கள் முடியாது என சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லை. அதனால் அடித்து நொறுக்க வேண்டியதாகிவிட்டது. காவிரி மேலாண்மை அமைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட வரியாக பெறமுடியாது என்பதை மத்திய அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்." என்றார்.

கருத்துகள் இல்லை: