திங்கள், 2 ஏப்ரல், 2018

சாஸ்திரிபவன் முற்றுகை!

மின்னம்பலம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத
சாஸ்திரிபவன் முற்றுகை!மத்திய அரசைக் கண்டித்து, இன்று (ஏப்ரல் 2) சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் மே 17 இயக்கத்தினர். இதனையடுத்து, அவர்களைக் கைது செய்தது தமிழக காவல்துறை.
கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முற்றுகையிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது மே 17 இயக்கம். அதன்படி, இன்று காலை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார் திருமுருகன் காந்தி. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே இந்த போராட்டத்தின் நோக்கமல்ல என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்று குறிப்பிட்டார்.
“தமிழகத்தின் தண்ணீர் தேவை என்பது 360 டிஎம்சியாக இருந்தது. 1974ல் கர்நாடகாவில் அணைகள் கட்டியபோது, அங்கிருந்து தமிழகத்திற்கு வந்த தண்ணீர் அளவு 360 டிஎம்சியாக இருந்தது. 1980ல் இருந்து 90வரை இந்த அளவு வெகுவாகக் குறைந்தது. கர்நாடகாவில் இருந்து வழங்கப்பட்ட நீரின் அளவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, வெறும் 205 டிஎம்சி தமிழகத்திற்கு வழங்கப்படும் என தீர்ப்பாயம் உறுதி செய்தது. அதுவே, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
இப்போது, அந்த அளவையும் 177.25 டிஎம்சியாக குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 1924ல் தமிழகத்தின் பங்கு 490 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 170 டிஎம்சி. இப்போது, அவர்களுக்கு அனைத்து நீரையும் வழங்கும் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சர்வதேச சட்டங்களுக்கு முரணானது. தமிழினத்துக்கு முரணானது. உள்நோக்கமானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு நலன்களுக்குச் சாதகமாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறோம்.
கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் நேர்மையற்று நடக்கிறது என்று பொதுவெளிக்கு வந்து சில நீதிபதிகள் குற்றம்சாட்டியபோது தமிழ்நாடு விழித்துக்கொண்டது. உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்காது என்று புரிந்துகொண்டோம். தற்போது, தமிழகத்தின் நிலத்தடி நீரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கூறி, அநீதி இழைத்திருக்கிறது. அரசியல் சாசன நீதியிலிருந்து வழுவியிருக்கிறது” என்று தனது பேச்சில் உச்ச நீதிமன்றத்துக்குக் கண்டனம் தெரிவித்தார் திருமுருகன் காந்தி.
தொடர்ந்து பேசியவர், “உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. ஆகவே, இந்தியாவின் அரசியல் சாசனம் தோற்றுப் போயிருக்கிறது. இந்தியாவின் அரசியல் சாசனம் தோல்வியுற்றிருக்கிறது என்றால், இந்தியா என்ற அமைப்பே தோல்வியுற்றிருக்கிறது என்று அர்த்தம். இதனை நாங்கள் சொல்லவில்லை, இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது.
இதனால் தான் இந்தியாவின் வருமானவரி அலுவலகங்களோ, சுங்க வரி அலுவலகங்களோ, தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து வரி வசூல் செய்ய இந்தியாவுக்கு இனி யோக்கியதை கிடையாது. இதனை முழக்கமாக முன்வைத்து தான், நாங்கள் இங்கு முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், ”பாகிஸ்தானுக்கு சிந்து ஒப்பந்தத்தின் மூலமாக தங்கு தடையின்றி தண்ணீரை இந்தியா வழங்கமுடியும். ஆனால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க முடியாது என்றால், பாகிஸ்தானை விட மோசமான எதிரியாக தமிழ்நாட்டை இந்திய அரசு நடத்துகிறது என்று குற்றம்சாட்டுகிறோம். தமிழ்நாட்டை இந்தியா அண்டைநாடாக நடத்துகிறது” என்று மத்திய அரசைக் குற்றம் சாட்டினார் திருமுருகன் காந்தி.
இந்த போராட்டத்தின் போது, சாஸ்திரிபவன் வளாகத்திலுள்ள பெயர்ப்பலகை மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினரைக் கைது செய்தனர் காவல்துறையினர்.

கருத்துகள் இல்லை: