சனி, 7 ஏப்ரல், 2018

சந்தையூர் சுவர் இடிப்பு ! எதிர்த்து தீக்குளிக்க முயன்ற 2 பேர் உட்பட 70 பேர் கைது

tamilthehindu :மதுரை அருகே சந்தையூரில் உள்ள சர்ச்சைக்குரிய சுவர் நேற்று இடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 66 நாட்களாக மலையடிவாரத்தில் குடியேறி நடத்தி வந்த போராட்டத்தை ஒரு தரப்பினர் விலக்கிக் கொண்டனர். சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற 2 பேர் உட்பட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சந்தையூர். இவ்வூர் ராஜகாளியம்மன் கோயிலைச் சுற்றி ஒரு சமூகத்தைச் சேர்ந்த இருபிரிவினர் வசிக்கின்றனர். கோயிலை சுற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு சுவர் எழுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த சுவரை கடந்து தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என ஒரு தரப்பினர் கட்டுப்பாடு விதிப்பதாக மற்றொரு தரப்பினர் 3 மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தனர். எனவே, அந்த தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் நீதிமன்றத்திலும் முறையிட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர உரிய தீர்வு காணுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆட்சியர் கொ.வீரராகவராவ் 2 முறை சந்தையூர் சென்று பேச்சு நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

66 நாள் போராட்டம்

இதையடுத்து சுவரை உடனே இடிக்க வலியுறுத்தி கடந்த ஜன. 30-ம் தேதி சந்தையூர் அருகே உள்ள மலையடிவாரத்தில் ஒரு பிரிவினர் குடியேறி போராட்டத்தைத் தொடங்கினர். சுவரை இடிக்கும்வரை ஊர் திரும்பமாட்டோம் என அறிவித்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற பழனிமுருகன் என்பவர் மரணமடைந்தார். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
கடந்த 66 நாட்களாக இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த அவர்கள் ஏற்பாடு செய்துவந்த நிலையில், நேற்று முன்தினம் ஆட்சியர் சந்தையூர் சென்று மக்களை சந்தித்தார். இருதரப்பினரையும் அழைத்து பேசி சமரச தீர்வு ஒன்றை ஏற்படுத்தி அதை உத்தரவாக பிறப்பித்து, இருதரப்பினரிடமும் வழங்கினார்.

சுவர் இடிப்பு

நேற்று காலை அதிகாரிகள் முன்னிலையில் வடக்குப்புற சுவரில் 2 மீட்டர் நீளத்துக்கு இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது மற்றொரு பிரிவினர் முற்றுகையிட திரண்டனர். அப்போது தீக்குளிக்க முயன்ற 2 பேர் உட்பட 70 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் 2 மீட்டர் நீளத்துக்கு சுவர் இடிக்கப்பட்டு, பாதை ஏற்படுத்தப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 150-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் கிராமத்துக்கு திரும்பினர்.

கருத்துகள் இல்லை: