வியாழன், 5 ஏப்ரல், 2018

போர் வரும் தயாராக இருங்கள்.. அன்று ரஜினி கூறியது ... .இன்று முழு தமிழகமும் போர்க்கோலம் .. எப்ப வருவாரோ?

mathi. Oneindia Tamil : சென்னை: அன்றாட பிரச்சனைகளுக்கெல்லாம் கருத்து
சொல்ல முடியாதுன்னு எத்தனைவாட்டி சொல்றது... போர் வரும்போது பார்க்கலாம்... என 'முத்துகளை' உதிர்த்த 'முரட்டு காளை'தான் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என கடந்த காலங்களில் கூறியிருந்தாலும் வராமல் பம்மிக் கொண்டிருந்தார். தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்தார். அத்துடன் எம்ஜிஆர் போல நல்லாட்சி தருவேன் என அடித்துவிட்டார். ஆனால் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு கருத்து சொல்ல மாட்டார்; போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தவர் ரஜினிகாந்த்.
இப்போது தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் போராட்டங்கள்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4 நாட்களாக தமிழகத்தின் அத்தனை சாலைகளும் ரயில் பாதைகளும் மறிக்கப்படுகின்றன. திரும்பிய திசையெல்லாம் மத்திய அரசு அலுவலகங்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளன.
வீதிக்கு வராத கட்சிகளே தமிழகத்தில் இல்லை.. உரத்து முழக்கம் எழுப்பாத இயக்கங்களே இல்லை.. ஆளும் அதிமுகவும் கூட உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி விட்டது.

தமிழகமே யுத்த களமாக காட்சி தருகிறது... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே இத்தனை போராட்டங்கள் தேவையா என ஆதங்கப்படுகிறது. இன்னொருபக்கம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி கொந்தளிக்கிறது.
குமரெட்டியார்புரம் எனும் போர்க்களத்துக்கு நேரில் போகாத தலைவர்களே இல்லை என்கிற நிலைமை. ஆனால் போர் வரும் போது பார்க்கலாம் என்ற ரஜினிகாந்த் மட்டும் எங்கே பதுங்கி இருக்கிறார் என்பதுதான் எவருக்கும் தெரியாத விடை.
அவரைப் பொறுத்தவரை 'அரசியல்' போக்கு சூட்டில் காலாவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பது கனவாக இருக்கலாம். காலாவும் இப்போது தள்ளிப் போவதால் காலாற எங்கே நடந்து கொண்டிருக்கிறாரோ? என்பதுதான் தமிழகத்தின் கேள்வி.

கருத்துகள் இல்லை: