வெள்ளி, 6 ஏப்ரல், 2018

சந்தையூர் சுவர் 2 மீட்டர் அளவு இடிக்கப்பட்டது . இரு பகுதியினரும் சமரசம்

மதுரை மாவட்டம் சந்தையூரில் இரு பிரிவினரின் பிரச்னைக்குக் காரணமான சந்தையூர் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. கோட்டாட்சியர் தலைமையில் சுவரின் 2 மீட்டர் அளக்கப்பட்டு இடிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூரில் இரு பிரிவு இன மக்கள் வசித்து வருகின்றனர்.

மாலைமலர்: மதுரை சந்தையூர்  சுவர் இரண்டு மீட்டர் அளவுக்கு இடிக்கப்பட்டது . பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சந்தையூர் கிராமம். இங்கு இருபிரிவை சேர்ந்த சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் சுவர் எழுப்பினர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.
ஆனால் தீண்டாமை சுவர் அகற்றப்படவில்லை. இந்த சுவற்றை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கு எந்த பலனும் கிடைக்காததால் சுவற்றை அகற்ற வலியுறுத்திய மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டை காலி செய்து விட்டு அருகில் உள்ள மலைக்கு சென்று குடியேறினர். அங்கு சென்று கலெக்டர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். தீண்டாமை சுவரை அகற்றும் வரை வீடுகளுக்கு திரும்ப மாட்டோம் என போராட்டக்குழு தெரிவித்தது.
இதனால் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக அந்த பிரிவினர் மலையிலேயே வசித்து வந்தனர்.
மதுரை அருகே தீண்டாமை சுவர் இடிப்பு: 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

இந்த நிலையில் மலையில் வசித்து வந்த சந்தையூர் பழனிமுருகன் என்பவர் கடந்த 29-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் தீண்டாமை சுவரை அகற்றினால்தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்றனர். இதனால் கடந்த ஒருவாரமாக பழனி முருகன் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீண்டாமை சுவரின் ஒரு பகுதியை இடித்து அகற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பழனிமுருகன் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

அதன்படி இன்று தீண்டாமை சுவரை இடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இன்று காலை சந்தையூரில் டி.எஸ்.பி. தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

காலை 10 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தீண்டாமை சுவரின் ஒரு பகுதியை இடிக்கும் பணி நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இடிக்கும் பணி தொடர்ந்து நடந்தது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மண்எண்ணை கேன்களுடன் வந்து சுவரை இடிக்கக்கூடாது.

மீறினால் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு மிரட்டல் விடுத்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மண்டபத்தில் அடைத்தனர். இன்று 200 மீட்டர் நீள சுவர் இடிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை: